பிபின் ராவத் விபத்து: முப்படை விசாரணை இருக்கும்போது தமிழக போலீஸ் விசாரணையின் பங்கு என்ன?- ஒரு அலசல்
முப்படைத்தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விவகாரம் சம்பந்தமாக முப்படை விசாரணை நடத்தும் என இந்திய அரசு அறிவித்துள்ள சூழ்நிலையில் தமிழக காவல்துறை விசாரணை நடத்த அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காவல்துறை விசாரணை எப்படி போகும் என்பது குறித்த ஒரு பார்வை.

பிபின் ராவத் விபத்தில் உயிரிழப்பு
இந்தியாவையே உலுக்கிய ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை எழுப்பியது. விபத்து குறித்து பல்வேறு ஹேஷ்யங்கள் கிளம்பி வருகின்றன. விபத்தில் உயிர்பிழைத்த ஒரே நபர் கேப்டன் வருண்சிங் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார். அடுத்து விபத்து நடந்தது குறித்து உள்ள ஒரே தடயம் கருப்புப்பெட்டி.

கருப்புப்பெட்டியே தீர்வு
விமானத்தில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிருடன் உள்ளார். அவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார் என்கிற நிலையில் விபத்து குறித்து சரியான தகவலைப்பெற வேண்டுமானால் ஹெலிகாப்டரில் இருக்கும் கருப்புப்பெட்டியே உதவும். கடைசி நேர உரையாடல்கள் அதில் பதிவாகியிருக்கும் என்பதால் அதை தேட வந்த இந்திய விமானப்படையின் சிறப்பு விசாரணைக்குழு, தடயவியல் துறை கருப்புப்பெட்டியை கண்டுபிடித்து எடுத்துச் சென்றது.

விசாரணைக்கு உதவும் கருப்புப்பெட்டி
கருப்புபெட்டி விபத்தில் சிக்கிய ஹெல்காப்டரில் உள்ள சிடிஆர் கருவி ஆகும். இது எந்த சூழ்நிலையிலும் உடையாது, எரியாது, அதில் உள்ள தகவல்கள் அழியாது. ஆகவே அதை கண்டுபிடிப்பது விபத்தின் விசாரணைக்குழுவின் முக்கிய பணியாகும். தற்போது அது கிடைத்துள்ளது. அது முக்கிய தடயமாக இருக்கும்.

தடயவியல் சோதனை
இது தவிர கூடுதலாக விபத்து நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தடயவியல் சோதனை என்பது ஹெலிகாப்டர் விபத்து எப்படி ஏற்பட்டிருக்கும் என்பதை அங்குள்ள பொருட்களை சேகரித்து, கள ஆய்வு நடத்தி முழு விசாரணைக்குப்பின் ஒரு காட்சியை தயாரித்து அளிக்கும். இது விசாரணைக்கு முக்கியமான பகுதி ஆகும்.

முப்படை விசாரணை, தமிழக காவல்துறை விசாரணை
விபத்து நடந்த இடத்தில் விமானப்படை தளபதி நேரில் வந்து விசாரணை நடத்தினார், தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபுவும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். விபத்து குறித்து அறிய முப்படை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை சந்தேக மரணம் பிரிவு சிஆர்பிசி 174-ன் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி முத்து மாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

முப்படை விசாரணை உள்ளபோது தமிழக காவல்துறை விசாரணை என்ன பயனைத்தரும்
இந்தக்கேள்வியை காவல்துறையில் பணியாற்றி ஓய்வுப்பெற்ற அதிகாரி ஒருவரைக் கேட்டபோது அவர் கூறியது, இந்தியாவின் எந்த மூலையில் விபத்து நடந்தாலும் யார் விசாரணை நடத்தினாலும் விசாரணை அமைப்பாக அங்கிகரிக்கப்படுவது அந்த எல்லையில் உள்ள காவல்துறை விசாரணையே. அவர்கள் தான் சட்டப்படி விசாரிக்கும் தகுதி உடையவர்கள். முப்படை விசாரணை ராணுவத்துக்குள் நடக்கும் ஆனால் நீதிமன்றத்தில் வழக்கை முடிக்கும் தகுதி சம்பதப்பட்ட காவல்துறைக்கு உள்ளது.

விசாரணைக்கான முழுத்தகுதியும் காவல்துறைக்கே உண்டு
நாளை விசாரணை மேற்கொண்டு சிபிசிஐடி, சிபிஐ போன்றவற்றிற்கு மாற்றப்பட்டாலும் அடிப்படை காவல்துறை விசாரணையில் தொடங்கித்தான் அங்கு மாற்றப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இந்திய குற்றவியல் சட்டம் சிஆர்பிசி 174 -ன் கீழ் விசாரணை அதிகாரியாக சம்பந்தப்பட்ட லோக்கல் இன்ஸ்பெக்டர் செயல்படுவார். தற்போது இது இந்திய அளவிலான பிரச்சினை என்பதால் கூடுதலாக ஏடிஎஸ்பி அந்தஸ்து அதிகாரி முத்துமாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video

விசாரணையின் தன்மை எப்படி இருக்கும்
இவர்கள் பணி சம்பந்தப்பட்ட விபத்தை ஆய்வு செய்வது, சாட்சியங்களிடம் விசாரணை நடத்துவது, தடயவியல் அதிகாரிகள் மூலம் விபத்து நடந்த விதம் உள்ளிட்டவற்றை ஒரு காட்சிப்பதிவாக தயார் செய்தும், எக்ஸ்பர்ட்டுகள் ஒப்பினியன் வாங்கி எவ்வித பிரச்சினையும் இல்லை விபத்துதான் என்பதை காரண காரியத்தோடு சிஆர்பிசி 174-ன் கீழ் அறிக்கை தாக்கல் செய்து வழக்கை முடிக்க வேண்டும். ஆகவே முப்படை விசாரணை ஒருபுறம் இருந்தாலும் சட்டப்படி விசாரணை காவல்துறை விசாரணையே" என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications