ஆங்கிலேயர் வந்த பின்தான்.. கல்வி கற்போர் எண்ணிக்கை குறைந்தது.. ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் "புது" தகவல்
"ஆங்கிலேயர்கள் அவர்களின் கல்வி முறையை இந்தியாவில் திணித்தனர். நமது கல்வி முறையை இங்கிலாந்துக்கு கொண்டு சென்றனர்"
சண்டிகர்: பிரிட்டிஷார் வந்த பிறகே இந்தியாவில் கல்வி கற்போர் எண்ணிக்கை குறைந்ததாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியிருப்பது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
மேலும், ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு இந்தியாவில் 70 சதவீதம் பேர் கல்வயறிவு பெற்றிருந்ததாகவும், அவர்கள் வருகைக்கு பிறகு அது 17 சதவீதமாக குறைந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வந்த பிறகுதான், அனைத்து சமூகத்தினரும் கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டது என வரலாற்றில் பதிவாகியிருக்கும் நிலையில், மோகன் பகவத்தின் இந்தக் கருத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

சனாதன அரசியல்
இந்தியாவில் பாஜகவுக்கு எதிராக சனாதன தர்மத்தையும், மனுஸ்மிருதியையும் பல எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. அதாவது சனாதன தர்மத்தில்தான் ஜாதி படிநிலைகள் வகுக்கப்பட்டதாக கூறும் எதிர்க்கட்சிகள், அதை கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதேபோல, மனுஸ்மிருதியில் உயர் ஜாதியினர் எப்படி இருக்க வேண்டும்.. சூத்திரர்களை எப்படி நடத்த வேண்டும் என எழுதப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் குறிப்பிட்ட சமூகத்தினர்தான் கல்வி பெற்றதாகவும், சூத்திரர்களுக்கும், இன்ன பிற சமூகத்தினருக்கும் கல்வி மறுக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், இதை மறுக்கும் பாஜகவும், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகளும் சனாதான தர்மத்தையும், மனுஸ்மிருதியையும் தூக்கிப்பிடித்து வருகின்றன.

"சிறப்பான கல்வி முறை"
இந்த சூழலில், ஹரியானா மாநிலம் கர்னல் பகுதியில் நடைபெற்ற தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியாவில் பண்டைய காலத்தில் கல்வி முறை மிகச்சிறப்பாக இருந்தது. வெறும் வேலைவாய்ப்புக்காக மட்டுமல்லாமல் பொது அறிவை வளர்க்கும் விதமாகவும் அன்றைய கல்வி இருந்தது. மேலும், கல்வி பெறுவதற்கான கட்டணம் மிக மிகக் குறைவாக இருந்திருக்கிறது. இதனால் அனைத்து தரப்பினரும் கல்வி கற்றார்கள்.

70% பேருக்கு கல்வியறிவு
இந்தியாவில் இருந்து பல முனைவர்களும், அறிஞர்களும், கலைஞர்களும் வெளியே வந்தனர். அவர்களுக்கு உலகம் முழுவதும் அங்கீகாரம் கிடைத்தது. ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு இந்தியாவில் 70 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றிருந்தனர். ஆனால், பிரிட்டிஷார் இந்தியாவுக்குள் நுழைந்ததும் இது தலைகீழாக மாறியது. ஆங்கிலேயர்கள் அவர்களின் கல்வி முறையை இந்தியாவில் திணித்தனர். நமது கல்வி முறையை இங்கிலாந்துக்கு கொண்டு சென்றனர்.

பிரிட்டிஷ் ஆட்சியில்..
இதனால் இந்தியாவில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 17 சதவீதமாக குறைந்தது. அதே சமயத்தில், நமது கல்வி முறையை பின்பற்றியதால் இங்கிலாந்தில் கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 70 சதவீதமாக உயர்ந்தது. இன்றைக்கு நம் நாட்டில் கல்விக்கட்டணம் மிக அதிகமாக உள்ளது. இதனால் ஏழைகள் கல்வி பெற முடியாமல் போகிறது. எனவே, கல்விக்கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, மருத்துவக் கட்டணத்தையும் குறைக்க வேண்டும். இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.












Click it and Unblock the Notifications