பிரதமர் பற்றி அமித் ஷா தப்பான நோக்கத்தில் கருத்து சொல்லவில்லை.. சர்ச்சைக்கு சத்யபால் மாலிக் விளக்கம்
மேகாலயா ஆளுநர் தன் கருத்து குறித்து விளக்கம் தந்துள்ளார்
சண்டிகர்: பிரதமர் மோடியை அமித்ஷா தவறாக எதுவும் சொல்லவில்லை என்றும் பிரதமரை அவர் மிகவும் மதிக்கிறார் என்றும், தான் பேசிய கருத்துக்கள் குறித்து மேகாலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் விளக்கம் தந்துள்ளார்.
பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதற்கு, வரவேற்பும், விமர்சனமும் இன்றுவரை இருந்துகொண்டே இருக்கிறது..
காரணம், நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான நடைமுறைகள் நடந்து முடியும் வரையில் போராட்டம் தொடரும் என்று போராடும் விவசாயிகள் அறிவித்துவிட்டனர்.

பரிசீலனை
இதனிடையே, மறுபடியும் வேளாண் சட்டங்களைக் கொண்டு வருவது குறித்து பரிசீலிப்போம் என்று கடந்த மாதம் கடந்த மாதம், மத்திய விவசாயத்துறை அமைச்சர் தோமர் சொல்லியிருந்தது மேலும் கிலியையும் சர்ச்சையையும் கிளப்பி விட்டது... இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.. பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுவோரும் விவசாய சட்ட நீக்கத்தை முன்வைத்து விமர்சித்து வருகின்றனர்.

சத்யபால் மாலிக்
இதில் மிக முக்கியமானவர் மேகாலயா மாநிலத்தின் ஆளுநர் சத்யபால் மாலிக்.. இவர் எற்கனவே, ஜம்மு காஷ்மீர், கோவா மாநிலங்களில் ஆளுநராக பொறுப்பு வகித்தவர்... தற்போது மேகலாயா ஆளுநரான மாலிக், மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு கரம் நீட்டி வருகிறார்.. அவர்களுக்காக பரிந்து பேசிவருகிறார்.

போராட்டம்
இப்படித்தான், கடந்த நவம்பர் மாதம் ஒரு பேட்டியில், "போராடி வரும் விவசாயிகள் தங்களின் போராட்டத்தில் வெற்றி பெறாமல் வெறும் கையோடு ஊர் திரும்பமாட்டார்கள்.. நாடு இப்படியொரு பெரும் போராட்டத்தை இதற்கு முன்பு பார்த்ததில்லை.. இந்த போராட்டத்தில் 600 பேர் உயிர் நீத்துள்ளனர்... ஒரு நாயின் மரணத்துக்கு கூட இரங்கல் தெரிவிக்கும் டெல்லி தலைவர்களிடமிருந்து இதற்கு ஒரு இரங்கலும் வரவில்லை என்று காட்டமாகவே கூறியிருந்தார்.

தத்ரி விழா
இந்நிலையில், நேற்றைய தினம் மீண்டும் ஒரு பரபரப்பு பேட்டி தந்துள்ளார் மாலிக்.. ஹரியானாவில் உள்ள தத்ரியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசியபோது: நான் சமீபத்தில் பிரதமரை சந்தித்தேன்... வேளாண் சட்ட பிரச்சினை குறித்து அவரிடம் பேச ஆரம்பித்தேன்.. ஆனால் நான் பேச ஆரம்பித்த 5வது நிமிஷத்திலேயே அது ஒரு வாக்குவாதமாக மாறி விட்டது... பிரதமர் முகமே இறுகிப்போய்விட்டது.. அவர் என்னிடம், அமித்ஷாவை சந்தித்து பேசுமாறு சொன்னார்.. நானும் அமித் ஷாவை போய் பார்த்தேன்.. பிரதமருக்கு சிலர் தவறாக வழிகாட்டுகிறார்கள் என்று அமித் ஷா கூறினார்" என்று பேசியிருந்தார் மாலிக்.

விளக்கம்
மாலிக் இவ்வாறு பேசியது தேசிய அரசியலில் பரபரப்பை கிளப்பியது.. இந்நிலையில், தன் பேச்சு குறித்து மாலிக் விளக்கம் ஒன்றை தந்துள்ளார்.. அதில், அமித்ஷா மோடிஜியை மிகவும் மதிக்கிறார்.. மக்கள் பிரதமரை தவறாக வழிநடத்துகிறார்கள் என்று அமித்ஷா என்னிடம் சொன்னார்.. ஒரு நாள் இந்த வேளாண் 3 சட்டங்கள் மீதான விவசாயிகளின் சர்ச்சை குறித்து பிரதமர் புரிந்துகொள்வார் என்றேன்.. அதை நான் இங்கு தெளிவுபடுத்த இப்போது விரும்புகிறேன். மற்றபடி பிரதமரைப் பற்றி அமித் ஷா தவறான உள்நோக்கத்துடன் எதுவும் சொல்லவில்லை" என்று தெளிவுபடுத்தி உள்ளார்.

விமர்சனம்
எனினும், இந்த விஷயத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது அதைவிட டென்ஷனை கூட்டி வருகிறது.. மாலிக் பேசிய பேச்சை சுட்டிக் காட்டி காங்கிரஸ் கட்சி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது... அதுமட்டுமல்ல, சத்யபால் மாலிக் பேச்சு அடங்கிய வீடியோவையும் தன்னுடைய அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் ஷேர் செய்துள்ளது. அந்த வீடியோவில், மேற்கூறிய வார்த்தைகளை ஒன்றுவிடாமல் பதிவிட்டு, "இது ஜனநாயக நாடு கவனிக்க வேண்டிய விஷயம்" என்றும் பதிவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications