பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம்.. கெஜ்ரிவால் அறிவிப்பு!
சண்டிகர்: பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். பஞ்சாபில் மின் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதனால் பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் பஞ்சாப் தேர்தலுக்கு மிக தீவிரமாக தயாராகி வருகின்றன. தலைநகர் டெல்லியில் ஆட்சியில் அமர்ந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி பஞ்சாப் தேர்தலுக்கு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.

300 யூனிட் மின்சாரம் இலவசம்
இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாபில் முகாமிட்டு தேர்தல் குறித்து தனது கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நிருபர்களிடம் பேட்டியளித்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:- பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்.

மின்கட்டணம் அதிகம்
இதன் மூலம் பஞ்சாபில் சுமார் 77 சதவீதம் முதல் 80 சதவீதம் பேர் மின்சார கட்டணம் செலுத்த வேண்டாம் என்ற நிலையை பெறுவார்கள். பஞ்சாபில் உள்ள பெண்கள் மின்சார கட்டணம் சில நேரங்களில் வீட்டு வருமானத்தில் 50 சதவீதமாக இருக்கும் என்று கூறினார்கள். இப்படி இருந்தால் என்ன செய்ய முடியும்? பஞ்சாப் மின் உபரி சக்தியை உருவாக்குகிறது, ஆனால் மாநிலத்தில் மணிநேர மின்தடை உள்ளது.

பழைய பில்கள் ரத்து
இரண்டு விளக்குகள் மற்றும் மின் விசிறி கொண்ட ஒரு நபருக்கு மாதத்திற்கு ரூ.50,000 மின்சார கட்டணம் வருகிறது. இது மிகவும் தவறானது. எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என்பதை உடனடியாக அமல்படுத்துவோம். பழைய நிலுவைத் தொகை மற்றும் நிலுவையில் உள்ள அனைத்து கட்டணங்களும் ரத்து செய்யப்படும் . பழைய பில்களை யாரும் செலுத்த வேண்டியதில்லை.

டெல்லியில் மிக குறைவு
டெல்லியில் எந்த மின்சாரத்தையும் உற்பத்தி செய்யவில்லை. வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வாங்குகிறோம். ஆனால் தற்போதும் டெல்லியில் மின்சார கட்டணம் நாட்டில் மிகக் குறைவு ஆகும். இது எவ்வாறு செய்யப்படுகிறது? பஞ்சாபிலும் ஏன் இதை செய்யக்கூடாது? என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications