ஹரியானாவின் அடுத்த முதல்வர் யார்? மக்களின் நம்பர் 1 சாய்ஸ் இவர் தான்! 3வது இடத்தில் யார்னு பாருங்க!
சண்டிகர்: ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும் என்று பெரும்பான்மையான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் கணித்துள்ளன. பூபிந்தர் சிங் ஹூடா முதலமைச்சர் ஆவார் என பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முதல்வர் சாய்ஸில் மூன்றாவது இடத்தில் காங்கிரஸ் எம்.பி தீபேந்தர் சிங் ஹூடா இருக்கிறார்.
பல்வேறு ஊடக நிறுவனங்கள் வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் எனக் கணித்துள்ளன. மொத்தமுள்ள 90 இடங்களில் 50 - 60 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் பெரும்பான்மை பெறும் என்றும், பாஜக, 22-31 இடங்களை மட்டுமே பெறும் என்றும் எக்ஸிட் போல் முடிவுகள் கணித்துள்ளன.

அடுத்த முதல்வர் யார்?: அதேபோல, ஹரியானாவின் அடுத்த முதல்வராக உங்கள் சாய்ஸ் யார் என மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா முன்னிலை வகிக்கிறார். பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் தற்போதைய ஹரியானா முதல்வருமான நயாப் சிங் சைனி, முதல்வர் ரேஸில் வாக்காளர்களின் இரண்டாவது தேர்வாக உள்ளார்.
காங்கிரஸ் எம்.பியும், பூபிந்தர் சிங் ஹூடாவின் மகனுமான தீபேந்தர் சிங் ஹூடா, காங்கிரஸ் மூத்த தலைவர் குமாரி செல்ஜா மற்றும் முன்னாள் முதல்வரும் மத்திய அமைச்சருமான மனோகர் லால் கட்டார் ஆகியோர் ஹரியானாவில் ஆட்சியைப் பிடிக்க மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது விருப்பமான வேட்பாளர்கள் என்று இந்தியா டுடே-சிவோட்டர் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூபிந்தர் சிங் ஹூடா: முதல்வர் சாய்ஸ் யார் என்ற கருத்துக்கணிப்பில் பூபிந்தர் சிங் ஹூடா 30.8 சதவீத வாக்குகளுடன் பட்டியலில் முதலிடத்திலும், நயாப் சிங் சைனி 22.1 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் எம்.பி தீபேந்தர் ஹூடா 9.5 சதவீத வாக்குகளும், குமாரி செல்ஜா 4.9 சதவீத வாக்குகளும், மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான மனோகர் லால் கட்டார் 4.5 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: ஹரியானாவில் ஆக்சிஸ் - மை இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கட்சிக்கு 53 - 65 இடங்களும், பாஜகவுக்கு 18 - 28 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 4 - 13 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டியா டுடே - சி வோட்டர் எக்ஸிட் போலில் காங்கிரஸ் கட்சிக்கு 50 - 58 இடங்களும், பாஜகவுக்கு 20 - 28 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 10 - 14 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் பாரத் - மேட்ரிஸ் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 55 முதல் 62 இடங்கள், ஆளும் பாஜகவுக்கு 18 முதல் 24 இடங்கள், இதர கட்சிகளுக்கு 2 முதல் 5 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டைனிக் பாஸ்கர் நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸுக்கு 44-54, பாஜகவுக்கு 19-29 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.
பீப்பிள்ஸ் பல்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸுக்கு 49-61 இடங்கள், பாஜகவுக்கு 20-32 இடங்கள், இதர கட்சிகளுக்கு 3-5 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
பி மார்க் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 27-35, காங்கிரஸுக்கு 51-61 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
துரூவ் ரிசர்ச் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 22-32, காங்கிரஸ் கட்சிக்கு 50-64, மற்ற கட்சிகளுக்கு 2-8 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட எல்லா எக்ஸிட் போல் கணிப்புகளுமே ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்றே கணித்துள்ளன.












Click it and Unblock the Notifications