சாமியார் ராம் ரஹீம் பார்த்த வேலையா? எதிராகத் திரும்பிய வாக்குகள்.. முக்கிய ஏரியாவில் சறுக்கிய பாஜக!
சண்டிகர்: ஹரியானாவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது பாஜக. காங்கிரஸ் கட்சி - பாஜக இடையே வாக்கு சதவீத வித்தியாசம் வெறும் 0.85% என்றபோதிலும், பாஜக மெஜாரிட்டி சீட்களை வென்று ஆட்சியை பிடித்துள்ளது. தேர்தலையொட்டி பரோலில் வெளியே வந்த சாமியார் குர்மீத் ராம் ரஹீமின் தேரா சச்சா சவுதா ஆதரவாளர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
ஹரியானா மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தல் 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 5ஆம் தேதி நடந்து முடிந்தது. தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவியது. ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகளும் போட்டியில் இருந்தன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தன.

ஹரியானா தேர்தல் முடிவுகள்: இந்த நிலையில் ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. ஆரம்பத்தில் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகித்த நிலையில், 10 மணிக்கு மேல் நிலைமை மாறியது. பாஜகவின் கை ஓங்க ஆரம்பித்தது. இறுதியில் பாஜக 48 இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைத்தது. காங்கிரஸ் கட்சி 37 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3வது முறையாக ஹரியானாவில் பாஜக தொடர்ந்து ஆட்சி அமைக்க உள்ளது.
குர்மீத் ராம் ரஹீம்: சிர்சாவை சேர்ந்த தேரா சச்சா சவுதா ஆசிரமத்தின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். ஆசிரம பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குர்மீத் ராம் ரஹீமுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குர்மீத்துக்கும் அவரது கூட்டாளிகள் 3 பேருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவில் 5 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடந்த நிலையில், அதற்கு முன்னதாக குர்மீத் ராம் ரஹீம் தன்னை 20 நாள் பரோலில் விடுவிக்குமாறு ஹரியானா அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தார். ஹரியானாவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் ராம் ரஹீமின் மனுவை மாநில தலைமை தேர்தல் அதிகாரியின் பரிசீலனைக்கு சிறைத்துறை அனுப்பி வைத்தது. இதையடுத்து குர்மீத் ராம் ரஹீமுக்கு 20 நாள் பரோல் வழங்கி செப்டம்பர் 30 ஆம் தேதி அரசு அனுமதி அளித்தது.
பரோலில் வந்த ராம் ரஹீம்: இதையடுத்து குர்மீத் ராம் ரஹீம் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். பரோலில் செல்லும் போது தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடவோ, பொது இடங்களில் பேசவோ கூடாது என்பது உள்பட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. எனினும், அவர் பாஜகவுக்கு ஆதரவான சூழலை உருவாக்கக்கூடும் என விமர்சிக்கப்பட்டது.
கற்பழிப்பு மற்றும் கொலைக் குற்றவாளியான சாமியார் குர்மித் ராம் ரஹீமின் ஆதரவைப் பெறுவதற்காக அவருக்கு பரோல் வழங்கியதாக பாஜக மீது குற்றம்சாட்டப்பட்டது. இருப்பினும், தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கும் பலன் அளித்துள்ளதைப் பார்க்க முடிகிறது.
காங்கிரஸுக்கு கை கொடுத்த ஏரியா: தேரா ஆதரவாளர்கள் அதிகமாக வசிக்கும் 28 சட்டமன்றத் தொகுதிகளில், 15 தொகுதிகளில் காங்கிரஸ், 10 இடங்களில் பாஜக, இரண்டு இடங்களில் இந்திய தேசிய லோக்தளம் மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றனர்.
அதாவது, தேரா சச்சா ஆசிரம ஆதரவாளர்கள் வசிக்கும் இந்த 28 தொகுதிகளில் காங்கிரஸ் 53.57 சதவீதமும், பாஜக 35.71 சதவீதமும், ஐஎன்எல்டி 7 சதவீதமும், சுயேச்சை வேட்பாளர் 3.57 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர். பெரும்பாலான ஹரியானா காங்கிரஸ் தலைவர்கள், ராம் ரஹீமுக்கு பரோல் கொடுக்கப்பட்டது குறித்து அதிகமாக குரல் கொடுக்காததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தேரா ஆதரவாளர்களின் வாக்குகள்: ஃபதேஹாபாத், ரதியா, தோஹானா ஆகிய சட்டசபை தொகுதிகள் தேராவை பின்பற்றுபவர்கள் அதிகம் உள்ளவர்கள் இருக்கும் தொகுதிகள். இந்த தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. அக்டோபர் 3 ஆம் தேதி, தேரா சச்சா சவுதா தலைவர் குர்மித் ராம் ரஹிம், சிர்சாவில் உள்ள தேரா ஆதரவாளர்களிடம் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு உத்தரவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தேரா சச்சா சவுதா, குறிப்பிடத்தக்க அளவில் அரசியல் செல்வாக்கு கொண்டது. இந்த அமைப்பு முன்பு சிரோமணி அகாலி தளம், பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை தேர்தல்களில் ஆதரித்துள்ளது. 2007 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் தேரா காங்கிரஸை ஆதரித்தது. 2014ல், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், பாஜகவை ஆதரித்தது. 2015 ஆம் ஆண்டில், டெல்லி மற்றும் பீகார் தேர்தல்களில் பாஜகவை வெளிப்படையாக ஆதரித்தது.
இந்நிலையில் தான் தேரா சச்சா சவுதா ஆதரவாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ராம் ரஹீமை வைத்து பாஜக போட்ட திட்டங்கள் பலிக்கவில்லையா என ஹரியானா அரசியலில் விவாதங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications