ஹரியானா தேர்தல்: முதல்வர் வேட்பாளராக முட்டி மோதும் காங்கிரஸ் 'தலை’கள்! ரேஸில் குமாரி செல்ஜா தீவிரம்!
சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்கிற எதிர்பார்ப்பு நிலவுவதால் 'முதல்வர் வேட்பாளர்' யார் என்பதில் காங்கிரஸ் தலைவர்களிடையே கடும் போட்டி உருவாகி உள்ளது. முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, அவரது மகன் தீபேந்தர் ஹூடா, லோக்சபா எம்பியும் குமாரி செல்ஜா ஆகியோர்தான் ஹரியானா முதல்வர் வேட்பாளர் போட்டியில் தீவிரமாக உள்ளனர்.
ஹரியானாவில் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 1-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குகள் அக்டோபர் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பாஜக எதிர்ப்பு அலை: ஹரியானாவில் ஆளும் பாஜகவுக்கு எதிரான அதிருப்தி அலை வீசுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறது. ஆனால் பாஜக எதிர்ப்பு வாக்குகளை ஆம் ஆத்மி கலைக்கக் கூடும் என்கிற அச்சமும் காங்கிரஸுக்கு இருக்கிறது. அதேபோல ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி)- ஆசாத் கட்சி கூட்டணியும் தங்கள் பங்குக்கு பாஜக எதிர்ப்பு வாக்குகளை பிரிக்கக் கூடிய சூழ்நிலை இருக்கிறது.
காங்கிரஸுக்கு அமோக வெற்றி என ஆரூடம்: ஆனால் ஹரியானா சட்டசபை தேர்தல் தொடர்பாக Lok Poll கருத்து கணிப்பானது காங்கிரஸ்தான் அமோக வெற்றியைப் பெறும் என தெரிவித்திருக்கிறது. பாஜகவுக்கு பெரும் தோல்வி ஏற்படும் என்றும் இதர கட்சிகள் அனைத்துக்குமே சொற்ப எண்ணிக்கையில்தான் இடங்கள் கிடைக்கும் என்கிறது. அதாவது மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக 20 முதல் 29 இடங்கள் (35%- 37% வாக்குகள்); காங்கிரஸ் 58 முதல் 65 இடங்கள் (46%-48% வாக்குகள்); இதர கட்சிகள் -3 முதல் 5 இடங்கள் (7% முதல் 8% வாக்குகள்) பெறும் என்கிறது Lok Poll கருத்து கணிப்பு.
முதல்வர் வேட்பாளர் யார்?: இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி, ஹரியானா வேட்பாளர்கள் தேர்வில் மும்முரமாக இருக்கிறது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த எம்பிக்களான குமாரி செல்ஜா, ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் சட்டசபை தேர்தலில் போட்டியிட தீவிரம் காட்டுகின்றனர். இருவருமே முதல்வர் பதவியை குறிவைத்து சட்டசபை தேர்தலில் களமிறங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால் முன்னாள் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடாவும் அவரது மகன் தீபேந்தர் சிங் ஹூடாவும் 'முதல்வர் பதவி' கனவில் இருந்து வருகின்றனர்.
கொளுத்திப் போடும் பாஜக: இந்த முதல்வர் வேட்பாளர் கோதாவில் பாஜகவும் தம் பங்குக்கு கொளுத்திப் போட்டு வருகிறது. பாஜகவைப் பொறுத்தவரையில் ஹரியானாவில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்தான் முதல்வர் என நாங்கள் அறிவிக்கிறோம்; அதேபோல தலித் சமூகத்துடன் நெருக்கம் காட்டும் ராகுல் காந்தி, ஹரியானா காங்கிரஸின் தலித் முகமான குமாரி செல்ஜாவை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பாரா? என கேள்வி எழுப்பி குட்டையை குழப்பிவிட்டுக் கொண்டிருக்கிறது.
திசை மாறிய ஜாட் வாக்குகள்: 2019-ம் ஆண்டு தேர்தலில் ஹரியானாவில் எந்தக் கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஜேஜேபி கட்சியின் 10 எம்பிக்கள் ஆதரவுடன் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. நான்கரை ஆண்டுகள் கூட்டணியில் இருந்த ஜேஜேபி கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் கூட்டணியை விட்டு வெளியேறியது. 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தம் வசம் இருந்த 5 தொகுதிகளை காங்கிரஸிடம் இழந்தது. பாஜகவின் வாக்கு வங்கியான ஜாட் சமூகத்தை காங்கிரஸ் தம் வசமாக்கி இருப்பதால் ஹரியானா தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications