ஜாட் ஓட்டுகளை குறி வைத்த காங்கிரஸ்.. எதிர் திசையில் போன பாஜக! ஹரியானாவில் ஜாதி அரசியல் முகமே மாறியது
சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலின் முடிவு, எக்ஸிட் போல் கருத்துக்கணிப்புகளின் கணிப்புகளுக்கு மாறாக மாறி, பாரதிய ஜனதா கட்சிக்கு வெற்றியை பரிசாக வழங்கியுள்ளது. வரலாற்று ரீதியாகவே, ஆளும் கட்சியை எப்போதுமே படுமோசமாக தோற்கடிக்கும் மனநிலை கொண்ட ஹரியானா மக்கள், பாஜகவை மட்டும் பாசமாக பார்த்துக்கொள்கிறார்கள். தொடர்ந்து 3வது முறையாக அரியணை ஏறும் வாய்ப்பை அந்தக் கட்சிக்குத் தந்துள்ளார்கள். இதில் காங்கிரசின் ஜாதி வியூகங்கள் எப்படி தோல்வியை சந்தித்தன என பார்க்கலாமா..
ஹரியானாவில், ஜாட் சமூகத்தின் செல்வாக்கு மிக அதிகம், 90 சட்டசபை இடங்களில் 40 இடங்களில் குறிப்பிடத்தக்க மக்கள் தொகை உள்ளது. மாநிலம் 1966 இல் உருவாக்கப்பட்டதிலிருந்து, ஜாட் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் 33 ஆண்டுகள் ஹரியானாவை ஆட்சி செய்துள்ளனர், இது அவர்களின் அரசியல் ஆதிக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.

இருப்பினும், 2014 ஆம் ஆண்டில் இந்த கணக்கு தவறாகி பாஜக வென்றது. ஜாட் தலைவர் பூபேந்தர் சிங் ஹூடாவின் ஆட்சியை அந்த தேர்தல், முடிவுக்குக் கொண்டுவந்து, மனோகர் லால் கட்டார், அதாவது ஒரு ஜாட் அல்லாதவரை, முதல்வராக தேர்ந்தெடுத்தனர் மக்கள். 2019 ஆம் ஆண்டில் பெரும்பான்மை பெறாவிட்டாலும், பாஜக ஜாட் தலைமையிலான ஜனநாயக் ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருந்தது.
2024 சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக நடந்த விவசாயிகள் போராட்டம் மற்றும் மல்யுத்த வீரர்களின் போராட்டம் காரணமாக ஜாட் சமூகத்தினர் பாஜகவுக்கு எதிராக அணி திரண்டுவிட்டதாக கூறப்பட்டது. சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட போதிலும், விளைபயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி) க்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்குவதற்கான கோரிக்கை இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை, இதனால் விவசாய சமூகம் திருப்தியடையவில்லை. ஜாட் சமூகத்தைச் சேர்ந்த மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகட் மற்றும் சாக்சி மாலிக் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக நடத்திய போராட்டம், ஜாட் வாக்காளர்களை மேலும் பாஜகவிலிருந்து அந்நியப்படுத்தியது.
28 ஜாட் வேட்பாளர்களை நிறுத்தி, முன்னாள் முதல்வர் ஹூடாவின் செல்வாக்கை தங்கள் பிரச்சார உத்தியில் பயன்படுத்தி, காங்கிரஸ் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. மாறாக, பிஜேபி 16 ஜாட் வேட்பாளர்களை களமிறக்கியது. ஜாட் அல்லாத வாக்குகளை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தி, ஒபிசி சமூகத்தைச் சேர்ந்த நாயப் சிங் சைனியை, முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்தது.
பாஜகவுக்கு கிடைத்துள்ள வெற்றி தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பதில் ஜாட் சமூகத்தின் குறைந்து வரும் செல்வாக்கை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், மாநிலத்தின் அரசியல் வரையறை மாறிவிட்டதை காட்டுகிறது. ஜாட் சமூகத்தின் நீண்டகால அரசியல் செல்வாக்கு குறைந்து வருவதால், ஜாட் அல்லாத வாக்காளர்களை ஒன்றிணைக்கும் பாஜக உத்தியின் வெற்றி, ஹரியானாவின் அரசியல் எதிர்காலத்தை மறுவடிவமைக்கலாம்.












Click it and Unblock the Notifications