ஹரியானா ரிசல்ட் தலைகீழானது எப்படி? லேட் ஆகுதே! காங்கிரஸ் கிளப்பிய சந்தேகம்.. தேர்தல் ஆணையம் மறுப்பு!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஹரியானாவில் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை தேர்தல் ஆணையம் தாமதமாக பதிவேற்றுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு பாஜக, மறைமுக அழுத்தம் தருவதாக ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி உள்ளார். இன்று காலை 9.20 வரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த நிலையில் தற்போது பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 5 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், முதல் அரை மணி நேரம் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை பெற்றது.

haryana assembly election results 2024 jammu kashmir assembly election results 2024

ஆரம்பத்தில் காங்கிரஸ் முன்னிலை: அதைத்தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை ஆரம்ப நிலவரத்தின்படி காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்தது. 9 மணியளவில், காங்கிரஸ் கட்சி 70க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்தது. அப்போது பாஜக 9 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருந்தது.

ஹரியானாவில் ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். 9 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 74 தொகுதிகளிலும், பாஜக 9 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் எனத் தெரிவித்த நிலையில், தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலை வகித்தது அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தலைகீழாக மாறிய ஆட்டம்: ஆனால், அடுத்த சில நிமிடங்களில் எல்லாமே தலைகீழாக மாறியது. 9.30 மணி அளவில் காங்கிரஸுக்கு இணையாக பாஜகவும் 40க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கத் தொடங்கியது. அதன் பிறகு அப்படியே களம் மாறியது. தற்போதைய நிலவரப்படி (மாலை 5 மணி), பாஜக 49 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 36 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. ஹரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது உறுதியாகியுள்ளது. 3வது முறையாக தொடர்ந்து ஹரியானாவில் ஆட்சி அமைக்கிறது பாஜக.

இந்நிலையில், ஹரியானா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தரவுகளை தேர்தல் ஆணையம் தாமதமாக பதிவேற்றுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு பாஜக, மறைமுக அழுத்தம் தருவதாக ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி உள்ளார்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு: காங்கிரஸ் பொதுச் செயலாளரும், செய்தி தொடர்பு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "லோக்சபா தேர்தலைப் போலவே, ஹரியானா சட்டசபை தேர்தலிலும், தேர்தல் ஆணைய இணையதளத்தில் வாக்குப்பதிவு நிலவரத்தைப் பதிவேற்றுவது மெதுவாக நடப்பதை பார்க்கிறோம். தவறான தகவல்களை பகிர்வதன் மூலம் அழுத்தத்தை உருவாக்க பாஜக முயற்சிக்கிறதா?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவும், தொலைக்காட்சிகளில் காட்டப்படும் வாக்கு எண்ணிக்கை சுற்றுகளின் எண்ணிக்கையிலும், தேர்தல் கமிஷன் இணையதள டேட்டா தெரிவிக்கும் சுற்றுகளின் எண்ணிக்கையிலும் வேறுபாடுகள் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாதிரி வேகம் இல்லை: பவன் கேரா கூறுகையில், "தேர்தல் ஆணைய டேட்டா பின்தங்கியுள்ளது. 11 சுற்றுகள் எண்ணப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் இன்னும் நான்காவது அல்லது ஐந்தாவது சுற்று டேட்டாவை காட்டுகிறார்கள், எங்கள் பொதுச் செயலாளர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை பதிவு செய்வதில் தாமதப்படுத்துவதன் மூலம் வாக்கு எண்ணும் மைய உள்ளூர் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கின்றனர். ஜம்மு காஷ்மீரில் தரவுகளை பதிவேற்றுவது போல் ஹரியானாவில் வேகமாக நடக்கவில்லை" எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

பறந்த கடிதம்: இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதப்பட்டது. "காலை 9 -11 மணிக்கு இடையே இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் முடிவுகளைப் புதுப்பிப்பதில் மோசமான மந்தநிலை ஏற்பட்டது. இவை தவறான தகவல்களை பரப்ப நினைப்பவர்களுக்கு சாதகமாக அமைகிறது.

பெரும்பாலான வாக்கு எண்ணும் மையங்களில், இத்தகைய வதந்திகளை சிலர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதும் எங்கள் அச்சம். துல்லியமான புள்ளிவிவரங்களுடன் வலைத்தளத்தைப் புதுப்பிக்க உங்கள் அதிகாரிகளுக்கு உடனடி வழிமுறைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என அந்தக் கடிதத்தில் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டிருந்தார்.

தேர்தல் ஆணையம் மறுப்பு: ஹரியானா தேர்தல் முடிவு தாமதமாக பதிவேற்றம் செய்யப்படுவதாக காங்கிரஸ் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. அனைத்து தொகுதிகளிலும் வாக்குகள் எண்ணப்பட்டு ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் பதிவேற்றம் செய்யப்படுவதாக விளக்கம் அளித்துள்ளது. உரிய சட்ட விதிகளின்படியே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+