பஞ்சாப் தேர்தலில் களமிறங்கும் விவசாயிகள் சங்கம்- அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவிப்பு!
சண்டிகர்: மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடிய பாரதிய கிஷான் யூனியன் என்கிற விவசாயிகள் சங்கத்தின் தலைவர் குர்னம்சிங் சதுனி, பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்யுக்தா சங்ஹர்ஷ் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தமது சம்யுக்தா சங்ஹர்ஷ் கட்சி போட்டியிடும் எனவும் குர்னம்சிங் சதுனி அறிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் தற்போது ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. ஆனால் உட்கட்சி மோதல்களால் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்காது என்கின்றன கருத்து கணிப்புகள்.

பஞ்சாப் தேர்தல் களம்
பஞ்சாப் முன்னாள் முதல்வரும் காங்கிரஸில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியை தொடங்கிய அமரீந்தர்சிங், பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். பஞ்சாப் தேர்தல் களத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலிதளம், பஞ்சாப் லோக் காங்கிரஸ், பாஜக ஆகியவை உள்ளன.

புதிய கட்சி
இந்த கட்சிகளுடன் தற்போது விவசாயிகள் சங்கத் தலைவரான குர்னம்சிங் சதுனியின் சம்யுக்தா சங்ஹர்ஷ் என்கிற புதிய கட்சியும் களத்தில் இறங்கியுள்ளது. சண்டிகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த குர்னம்சிங் சதுனி தனிக்கட்சி அறிவிப்பை வெளியிட்டார். இருந்தபோதும் தாம் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் 117 தொகுதிகளிலும் தனித்தே தமது கட்சி போட்டியிடும் என்றும் குர்னம்சிங் சதுனி தெரிவித்துள்ளார்.

யார் இந்த குர்னம்சிங்?
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஓராண்டுக்கும் மேல் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தனர் குர்னம்சிங் சதுனி. குறிப்பாக ஹரியானாவில் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்தவர் குர்னம்சிங். அதனால் அவரை காங்கிரஸ் கட்சியின் பி டீம் என்று ஹரியானாவில் ஆளும் பாஜக கடுமையான விமர்சித்தது.

புதிய கட்சி ஏன்?
புதிய அரசியல் கட்சி தொடங்கி செய்தியாளர்களிடம் பேசிய குர்னம்சிங் சதுனி, நாங்கள் மிஷன் பஞ்சாப்பை தொடங்கி இருக்கிறோம். பஞ்சாப் மாநிலத்தில் நாங்கள் ஆட்சி அமைத்தால் ஒட்டுமொத்த இந்தியாவும் 2024 லோக்சபா தேர்தலில் எங்களை பின்பற்றும் நிலைமையை உருவாக்குவோம். தற்போதைய நிலையில் அரசியல் மாசுபட்டிருக்கிறது. இதை மாற்ற வேண்டிய தேவை இருப்பதால் அரசியல் கட்சியை தொடங்கி உள்ளோம். முதலாளித்துவத்தை ஊக்கும் வகையில் அரசின் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன. நாட்டின் ஏழைகளுக்கான அரசாங்கமாக செயல்படவில்லை. இதனால் நாங்கள் புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications