ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயல்.. சண்டிகர் மேயர் தேர்தல்.. உச்ச நீதிமன்றம் விளாசல்
சண்டிகர்: சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயக படுகொலை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கடுமையாக விமர்சித்துள்ளார். அப்படி என்னதான் நடந்தது அந்த தேர்தலில்? என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
பஞ்சாப் மாநிலத்திற்கும், ஹரியானா மாநிலத்திற்கும் சண்டிகர் தலைநகரமாக செயல்பட்டு வருகிறது. சண்டிகர் நகராட்சியில் மொத்தம் 35 இடங்கள் இருக்கின்றன. இதில் பாஜக சார்பில் 14 கவுன்சிலர்களும், அகாலிதளம் சார்பில் 1 கவுன்சிலர் என மொத்தம் 15 கவுன்சிலர்கள் பாஜக பக்கம் இருக்கின்றனர். மற்றொருபுறம் 13 கவுன்சிலர்கள் ஆம் ஆத்மி சார்பிலும், 7 கவுன்சிலர்கள் காங்கிரஸ் சார்பிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி எனும் பெயரில் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் இணைந்து போட்டியிட உள்ள நிலையில், இதற்கு முன்னோட்டமாக சண்டிகர் மேயர் தேர்தலில் இணைந்து போட்டியிட காங்கிரஸும், ஆம் ஆத்மியும் முன் வந்தன. இயல்பாகவே இந்த கூட்டணிக்குதான் அதிக வாக்குகள் இருக்கிறது என்பதால் இவர்கள் தரப்பிலிருந்தே மேயர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கருதப்பட்டது.
மேயர் வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமார் நிறுத்தப்பட்டார். கடந்த 30ம் தேதி திட்டமிட்டபடி தேர்தல் தொடங்கியது. இந்த தேர்தலில் எம்பியும் வாக்களிக்க முடியும் என்பதால், பாஜக எம்பியான கிர்ரோன் கெர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தார். 20ம் தேதி வாக்குப்பதிவு திட்டமிட்டபடி நடைபெற்றது. அன்றே வாக்குகளும் எண்ணப்பட்டன.
பாஜக சார்பில் மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட மனோஜ் சோங்கர் 16 வாக்குகளை பெற்றிருந்தார். அதேபோல காங்கிரஸ்+ஆம் ஆத்மி கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட குல்தீப் குமாருக்கு 20 வாக்குகள் கிடைத்தன. ஆனால் அதில், 8 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. எனவே பாஜகவின் மனோஸ் சோங்கர் புதிய மேயராக அறிவிக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
தேர்தல் அதிகாரி பாஜகவுக்கு சாதகமாக நடந்துக்கொண்டதாக கூறி காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். அதில், தேர்தல் அதிகாரி வாக்குச்சீட்டில் எதையோ எழுதுவது தெரிந்தது. இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், "சண்டிகர் மேயர் தேர்தலில், ஜனநாயகத்தை கொன்று குவித்துள்ள பாஜக டெல்லியில் தொடர்ந்து ஆட்சியில் இருக்க என்ன செய்யும் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நாளில் கோட்சே காந்தியை கொன்றார். இன்று கோட்சே ஆதரவாளர்கள் காந்தியின் கொள்கைகளையும் அரசியலமைப்பு விழுமியங்களையும் பலி கொடுத்துள்ளனர்" என்று காட்டமாக விமர்சித்திருந்தார்.
வெறுமென விமர்சனங்களோடு நிற்காமல் பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கு அவசர வழக்காக கடந்த 31ம் தேதி விசாரிக்கப்பட்டது, விசாரணையின் இறுதியில், மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து சண்டிகர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகம் பதிலளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.
இதன் தொடர்ச்சியாகத்தான் உச்சநீதிமன்ற படியை காங்கிரஸும், ஆம் ஆத்மியும் ஏறின. இந்நிலையில் வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல். ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயல். வாக்கு சீட்டுகளை சிதைத்த தேர்தல் அதிகாரியை விசாரிக்க வேண்டும். அடுத்த உத்தரவு வரும் வரை நகராட்சியின் கூட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications