காங்கிரசுக்கு ஓட்டு போடுங்க..வைரலாகும் பஞ்சாப் பாஜக தலைவரின் வீடியோ..நல்லதுதான் எனக்கூறும் காங்கிரஸ்
சண்டிகர் : காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என பேசியதாக பஞ்சாப் பாஜக தலைவரின் வீடியோ வைரலாகப் பரவி வரும் நிலையில், அது தங்களுக்கு நல்லது தான் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. ஆனால் தனது பேச்சு தவறாக திரிக்கப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் அஸ்வினி சர்மா கூறியுள்ளார்.
பஞ்சாப் சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு ஒரே கட்டமாக இன்று நிறைவடைந்துள்ள நிலையில், மார்ச்சில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கேப்டன் அமரீந்தர் சிங்கின் புதிதாக உருவாக்கப்பட்ட கட்சியான பஞ்சாப் லோக் காங்கிரஸுடன் பாஜக கூட்டணி வைத்து பஞ்சாப் தேர்தலில் போட்டியிட்டது.

பஞ்சாப் தேர்தல்
ஆளும் கட்சியான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகியவற்றுக்கு இடையே கடந்த ஆண்டு கூட்டணியை முறித்துக் கொண்ட பாஜக, அதன் முன்னாள் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளம் இடையே முக்கோணப் போட்டியாக இந்த தேர்தல் போர் இருந்தது. விவசாயிகள் அமைப்புகளின் அரசியல் முன்னணியான சம்யுக்த சமாஜ் மோர்ச்சாவும் தேர்தலில் போட்டியிட்டது. உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.

சர்ச்சைப் பேச்சு
பஞ்சாப் மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி அதன் முக்கிய போட்டியாளராக வெளிப்பட்டுள்ளது. நீண்ட பரபரப்புக்கு இடையே வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் ஆட்சிக் கட்டிலில் அமர போவது யார் என்ற கேள்வி இந்தியா முழுவதும் எழுந்துள்ளது. பாஜக எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என தீவிரமாக முயன்று வரும் நிலையில் பாஜக மாநிலத் தலைவரான அஸ்வினி குமார் சர்ச்சை வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது.

காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்
அந்த வீடியோவில், பதான்கோட் சட்டமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளராக இருக்கும் சர்மா, பாஜகவுக்கு வாக்களிக்க விரும்பவில்லை என்றால், ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்க விரும்பவில்லை என்றால் "காங்கிரஸுக்கு வாக்களியுங்கள்" என்று மக்களிடம் கூறுவது கேட்கப்படுகிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, அஸ்வினி ஷர்மா தனது அரசியல் எதிரிகளால் பேச்சு திரிக்கப்பட்டது என்று ஒரு விளக்கத்தை வெளியிட்டார்.

வரவேற்ற காங்கிரஸ்
ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிப்பது என்பது பயங்கரவாதத்திற்கு வாக்களிப்பது எனவும், ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்கும் எவரும் நாட்டிற்கும் பஞ்சாபிற்கும் துரோகம் இழைத்து விடுவார்கள். நீங்கள் எங்களுக்கு (பாஜக) வாக்களிக்க விரும்பவில்லை என்றால், காங்கிரஸுக்கு வாக்களியுங்கள். ஆனால், நாட்டைக் காட்டிக் கொடுக்கும் ஒருவருக்கு வாக்களிக்காதீர்கள் என்று சர்மா கூறியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்து கூறியுள்ள காங்கிரஸ் கட்சி, சர்மாவின் இந்த பேச்சு தங்களுக்கு நல்லதுதான் எனக் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications