மகளிர் உரிமைத்தொகை.. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை.. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி கொண்டு வர முடிவு?
சென்னை: தமிழகத்தில் 1 கோடி மகளிருக்கு மாதம், 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம், வரும் செப்டம்பர் முதல் செயல்படுத்தப்பட இருக்கும் நிலையில், இது தொடர்பாக தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் ஆட்சி நடத்தி வரும் திமுக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம். இந்த திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு குடும்ப தலைவிகள் மத்தியில் நிலவிய நிலையில், பெண்களுக்கு 1000 ரூபாய் அறிவிப்பு குறித்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி நிதியமைச்சர் அறிவித்தார்.

மகளிர் உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பும் வெளியிட்டிருந்தது. இந்த திட்டத்திற்காக 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் மகளிர் உதவித் தொகைக்கு தகுதியானவர்கள் குறித்த வரைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.
எனினும், அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகையை வழங்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் கோரிக்கையாக உள்ளது. 1 கோடி மகளிருக்கு மாதம், 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம், வரும் செப்டம்பர் முதல் செயல்படுத்தப்பட இருக்கும் நிலையில், இதற்கு தகுதியான பயனாளிகள் தேர்வுகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கான பணிகளை சமூக நலத்துறை மற்றும் நிதி, வருவாய் துறைகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
மகளிருக்கான உரிமைத்தொகை வங்கிகளில் நேரடியாக வரவு வைக்கப்படுமா? அல்லது ரேஷன் மாநில தலைமை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் சார்பில், ரேஷன் கடைகளில், மைக்ரோ ஏடிஎம் கருவிகள் வாயிலாக பட்டுவாடா செய்யப்படுமா? என்று இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இன்னும் ஒரு சிலமாதங்களே இருப்பதால் தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் தான், இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இந்த திட்டம் தொடர்பாக நிதித்துறை, வருவாய்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆயத்த பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆன்லைன் மூலமாக இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் வசதியை கொண்டு வர முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், ஆஃப்லைன் முறையிலும் விண்ணப்பிக்கும் வசதி இருக்கும் எனவும் தெரிகிறது. இது தொடர்பான விரிவான அறிவிப்பு இன்று வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications