கோட்டைக்கு அருகில் விஜய்.. தடுத்து நிறுத்துவது ஒரே விஷயம் தான்! அடுத்தடுத்து 10 திக்திக் ட்விஸ்ட்கள்
சென்னை: தமிழக அரசியலில் இப்போது நடக்கும் அரசியல் நிகழ்வுகள் ஒரு மெகா ஹிட் பொலிட்டிக்கல் த்ரில்லர் படத்தையே மிஞ்சிவிட்டன. விஜய் கோட்டைக்கு மிக அருகில் சென்று, முதலமைச்சர் நாற்காலியைத் தொடப்போகும் கடைசி நிமிடத்தில், நம்பர் கேம் மீண்டும் மர்மமாக மாறியுள்ளது. கடந்த சில நாட்களில் மாநிலத்தில் நடந்த முக்கியமான ட்விஸ்ட்கள் குறித்து நாம் பார்க்கலாம்!
தமிழ்நாடு அரசியலில் இப்போது குழப்பமான சூழலே இருக்கிறது. இப்போது வரை யார் ஆட்சி என்பதில் குழப்பமே இருக்கிறது. கடந்த சில நாட்களாக மாநில அரசியலில் ஏகப்பட்ட ட்விஸ்ட்கள் அரங்கேறி வருகிறது. மறைமுகப் பேச்சுவார்த்தைகள், மாயமான எம்.எல்.ஏ-க்கள், துணை முதல்வர் பேரம் எனத் தமிழக அரசியல் களம் கிட்டத்தட்ட சினிமா ஸ்டைலில் மாறியுள்ளது. சமீபத்தில் நடந்த 10 அதிரடித் திருப்பங்கள் குறித்து நாம் பார்க்கலாம்!

1. 116-ல் நின்ற வண்டி!
108 இடங்களைப் பெற்ற தவெக, விஜய் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டியுள்ளதால் அதன் பலம் 107 ஆனது. காங்கிரஸ் (5), சிபிஐ (2), சிபிஎம் (2) ஆகியோரின் ஆதரவுடன் விஜய்யின் பலம் 116 ஆக உயர்ந்தது. மெஜாரிட்டிக்கு இன்னும் 2 இடங்களே தேவைப்பட்ட நிலையில், விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆதரவு தரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆளுநரிடம் விஜய் சமர்ப்பித்த பட்டியலில் 116 கையெழுத்துகள் மட்டுமே இருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2. கொண்டாட்டம்.. அடுத்து குறைந்த உற்சாகம்
ஆதரவு உறுதியானதாகக் கருதி விஜய்யின் பனையூர் இல்லம் முன்பாகத் தவெக தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். சனிக்கிழமை காலையிலேயே பதவியேற்பு விழா இருக்கும் எனப் பேச்சு கிளம்பியது. ஆனால், மாலை நேரத்து அரசியல் மாற்றங்கள் அந்த உற்சாகத்தை காலி செய்தது.
3. விசிக - 'மர்ம' முடிச்சு!
இப்போது இந்த அரசியலில் கேமில் மிக முக்கியமான நபராக மாறியுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன். இடதுசாரிகளின் நிலைப்பாட்டையே விசிகவும் எடுக்கும் என முதலில் கூறப்பட்டாலும், இரவு வெளியான அறிக்கையில் இன்று சனிக்கிழமை தான் இறுதி முடிவு என்று தெரிவித்து ட்விஸ்ட் கொடுத்தார்.
4. திருமாவுக்காக 2 மணிநேரக் காத்திருப்பு!
மெஜாரிட்டிக்கான அந்த இறுதி இடங்களைப் பெறத் தவெக நிர்வாகிகள் திருமாவளவனைத் தொடர்பு கொள்ள சுமார் 2 மணிநேரம் முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில், அவர் இபிஎஸ் மற்றும் திமுக தரப்புடன் பேச்சுவார்த்தையில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பின.
5. துணை முதல்வர் பதவி
விசிகவின் ஆதரவுக்குப் பின்னால் ஒரு பெரிய கோரிக்கை இருப்பதாகப் பேசப்படுகிறது. விஜய்யை ஆதரிக்கத் திருமாவளவனுக்கு 'துணை முதலமைச்சர்' பதவி வேண்டும் என விசிக தரப்பு கேட்டதாகவும், ஆனால் தவெக தரப்பில் 'நகர்ப்புற வளர்ச்சித் துறை' மட்டுமே தர முன்வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த இழுபறியே ஆதரவு தாமதத்திற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
6. 'நோ' சொன்ன ஐயுஎம்எல்
தவெகவுக்கு ஆதரவு தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முடியாது என ட்விஸ்ட் கொடுத்தது ஐயுஎம்எல்.! "நாங்கள் நேற்று திமுகவுடன் இருந்தோம், இன்று இருக்கிறோம், நாளையும் இருப்போம்" என கதவை மூடியது விஜய்க்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
7. திருமாவளவனே முதல்வர்?
இதற்கு நடுவே ஒரு விசித்திரமான வதந்தி பரவியது. அதாவது விஜய்யைத் தடுக்க திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களும் இணைவதாகவும் திருமாவளவனையே முதலமைச்சராக வேட்பாளராக முன்னிறுத்தப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கிளம்பிய செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இருப்பினும், திமுக இதை மறுத்துவிட்டது.
8. ரிசார்ட் அரசியல்
கூவத்தூர் பாணியில் ரிசார்ட் அரசியல் மீண்டும் தலைதூக்கியுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ஹைதராபாத்திற்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படும் நிலையில், அமமுக தலைவர் டிடிவி தினகரன் தனது மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜ் மாயமானதாகப் புகார் அளித்துள்ளார். மறுபுறம் அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
9. போலி கையெழுத்து விவகாரம்!
மாயமானதாகச் சொல்லப்படும் காமராஜின் கையெழுத்தைத் தவெக தரப்பு போலியாக உருவாக்கியதாக டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார். ஆனால், காமராஜ் கையெழுத்திடும் வீடியோ ஒன்றை தவெக தரப்பு வெளியிட்டுப் பதிலடி கொடுத்தது. இருப்பினும், இது தொடர்பாக டிடிவி தினகரன் புகார் அளித்துள்ளதால், ஆளுநர் பதவியேற்பு விழாவைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.
10. இடதுசாரிகளின் பிடிவாதம்!
இதில் இடதுசாரிகள் ஆதரவு என்பது தவெகவுக்கு முழுமையான வெற்றி இல்லை.. அதாவது ஆளுநர் ஆட்சி அமைவதைத் தடுக்கவே விஜய்யை ஆதரிப்பதாகவும் திமுகவுடன் இணைந்து பயணிப்போம் என இடதுசாரிகள் ட்விஸ்ட் கொடுத்துள்ளனர். வெளியில் இருந்து ஆதரவு என்பது கத்தி மேல் நடப்பது போலத் தான்! எப்போது வாபஸ் பெற்றாலும் ஆட்சி கவிழும்!












Click it and Unblock the Notifications