1 நிமிஷம்.. 1 ரூபாய்.. 1 கிலோ.. ரூ.1000.. கருணாநிதி கையெழுத்து.. திடீர்னு உணர்ச்சிவசப்பட்ட தமிழச்சி
கருணாநிதி பேனாவின் சிறப்பு குறித்து தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி தந்துள்ளார்
சென்னை: திமுகவின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை நிதிச் சுமையை காரணம் காட்டி தமிழக முதல்வர் கைவிடவில்லை என்று எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
மதுரை ஏர்போர்ட்டில் தமிழச்சி தங்கபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் சொல்லும்போது:
"தமிழக முதல்வர் பெண்களின் உயர் கல்வி திட்டத்திற்கான மாதந்தோறும் 12-ம் வகுப்பு படித்து முடித்து உயர் கல்வியில் சேர விருப்பமுடைய பெண்களுக்கு ரூ. 1000 வழங்கப்படும் என்கிற திட்டத்தை புதுமைப் பெண் திட்டம் என்ற பெயரில் தொடங்கி வைத்தார்.

1000 ரூபாய்
பெண்கள் கல்வி அறிவு பெற்றால் தான் அவருடைய வாழ்வு நிலை முன்னேறும் என்பதை கருத்தில் வைத்தே, பிற உதவித்தொகை பெற்றுக் கொண்டிருந்தாலும் அதோடு இணைந்து இந்த தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகையானது அவர்களது உயர்கல்விக்கு உதவியாக இருக்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார். பெண்கள் இதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவிற்கே முன்னோடியான திட்டமாக விளங்குவதாகவும்., டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி பேனா
நம் தாய்மார்களும் தங்களது பிள்ளைகளுக்கான இத்திட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள முன் வர வேண்டும்" என்றார். "ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி படம் வைக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு தமிழச்சி, "தெலங்கானாவில் இந்த பிரச்சினை வந்தபோது கேஸ் சிலிண்டரில் மோடி படத்தை வைத்து பதிலடி தந்தார்கள்.. மத்திய அரசிடம் இருந்து மானியம் வந்தாலும், நமக்கான முக்கியமான ஒன்று அனைவருக்கும் அந்த அரிசி சென்று சேர்க்கிறதா என்பதில் தான் கவனம் செலுத்தி வருகிறோம்.

கிரேஸ் + கலைஞர்
அதனால், ஒன்றிய அரசு, மாநில அரசு என்று எதுவுமே இதில் கிடையாது. ஆனால், அரிசிக்கு மானியம் கொடுத்தாலும் அனாவசியமாக விலை ஏற்றம் உள்ளது. சுங்கவரி மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு இப்படி பல பிரச்சினைகளில் ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு சந்திக்க இருப்பதால் நாம் அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது" என்றார். பெண்களுக்கான ஆயிரம் ரூபாய் திட்டம் நிதி சுமையை காரணம் காட்டி தள்ளி வைத்த முதல்வர், கருணாநிதியின் பேனா சிற்பத்திற்கு 80 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டுகள் எழுகிறதே என்று செய்தியாளர்கள் அடுத்த கேள்வியை கேட்டனர்..

கருணாநிதி
அதற்கு தமிழச்சி தங்கப்பாண்டியன், "நிதிச் சுமைக்காக அந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கைவிட வேண்டும் என்று சொல்லவில்லையே.. இப்போது, இந்த திட்டம் இல்லை, அடுத்ததில் கொண்டு வருவோம் என்று சொல்லி இருப்பார்கள்... கொஞ்சம் நினைச்சு பாருங்க, கருணாநிதியின் பேனா எவ்வளவு சிறப்பு வாய்ந்தது? கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு என்று முதன்முதலில் கையெழுத்து போட்ட பேனா அவரின் பேனா.

ஒரு நிமிஷம்.. ஒரு கிலோ
அவர் பேனாவை தூக்கிய ஒவ்வொரு நிமிடமும் தமிழருடைய தலைவிதி நிமிர்த்திருக்கிறது... தமிழக மக்களை தலை நிமிரச்செய்த கருணாநிதி பேனாவிற்கு சிலை வைப்பது என்பது பொருத்தமாக இருக்கும்.. அத்தனை கோடி கையெழுத்துக்களை போட்ட அந்த பேனாவை அவருடைய நினைவு சின்னமாக கொண்டு வருவது என்பது மிகவும் பொருத்தமாகும். எந்த காரணமும் காட்டியும் எந்த திட்டத்தையும் நம்முடைய முதல்வர் ஸ்டாலின் கைவிடவில்லை.. இப்போதைக்கு அப்படி இருக்கிறது, கூடிய சீக்கிரம் அதை அமல்படுத்துவோம் என்பது முதல்வர் மக்கள் முன்பாக வைக்கிற கருத்தாக இருக்கிறது" என்றார் தமிழச்சி தங்கபாண்டியன்.












Click it and Unblock the Notifications