முதல்வர் ஸ்டாலின் இதில் உறுதியா இருக்காரு.. “எதிர்கட்சியா இருக்கும்போதே அப்படி” - மா.சு சொன்ன தகவல்!
சென்னை : தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 102 டன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு குட்கா விற்றதால் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் போதை பொருட்கள் இருக்கக் கூடாது என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் எண்ணம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

புகையிலை எதிர்ப்பு தினம்
ஆண்டுதோறும் மே 31-ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள பிரம்ம குமாரிகள் இயக்கமும் குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையும் இணைந்து ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் போதையில்லா தமிழ்நாடு என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் நடைபயண நிகழ்ச்சியை இன்று நடத்தின.

அமைச்சர்கள் பங்கேற்பு
இந்த நடைபயணத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் டாக்டர் ரேலா இன்ஸ்டிடூட் அன்ட் மெடிக்கல் சென்டரின் தலைவர் பேராசிரியர் முகமது ரேலா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த நடைபயணத்தில் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியதோடு புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளையும் கையில் ஏந்திச் சென்றனர்.

ஸ்டாலினின் எண்ணம்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, தமிழ்நாட்டை போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதில் முதல்வர் மு.க ஸ்டாலின் முனைப்புடன் இருக்கிறார். 100% போதை பொருட்கள் இல்லாத மாநிலமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் குட்கா இருக்கக்கூடாது என்பதற்காக எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போதே பேரவையில் சுட்டிக்காட்டியவர் முதல்வர் ஸ்டாலின். அந்த வகையில் போதைப் பொருட்கள் விற்பதை அரசு தடை செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.

100 டன் போதை பொருட்கள்
மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 4.8 கோடி மதிப்பிலான 102 டன் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், மூவாயிரத்துக்கு மேற்பட்ட கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விடுக்கப்பட்டு 21 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன என்றும் மாநில எல்லைகளிலும் சோதனை நடத்தி, போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications