SIR ஒன்னும் தப்பு இல்லையே! முன்னாள் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் 124 பேர்.. நாட்டு மக்களுக்கு கடிதம்
டெல்லி: டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் எஸ்ஐஆர் ஆகியவற்றிற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், 124 ஓய்வு பெற்ற ஐஏஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் உள்ளிட்ட முன்னாள் உயர் அதிகாரிகள், தேர்தல் ஆணையம் மற்றும் எஸ்ஐஆர் ஆகியவற்றிற்கு ஆதரவு தெரிவித்து நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதி இருக்கின்றனர்.
எஸ்ஐஆர் நடவடிக்கை எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த விஷயத்தில் தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக செயல்பட்டார் என்கிற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. எனவே தலைமை தேர்தல் ஆணையரை நீக்க கோரியும், எஸ்ஐஆர் நடைமுறையை கைவிட்டு பழைய வாக்காளர் பட்டியலை பயன்படுத்த கோரியும் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் காக்ரோச் ஜனதா பார்ட்டி மற்றும் இடதுசாரி மாணவர் இளைஞர் அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் பங்கேற்க முயன்ற போது, காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். இதனால் மொத்த டெல்லியும் பரபரப்பாக இருக்கிறது. இப்படி இருக்கையில் கன்வல் சிபல், ஆர்.டி கபூர் மற்றும் பீகாரை சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் உள்ளிட்ட 124 ஓய்வு பெற்ற ஐஏஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகள் இணைந்து இந்திய குடிமக்களுக்கு கடிதத்தை எழுதியுள்ளனர்.
அதில், இந்திய தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையும் வாக்காளர் பட்டியலை சீரமைப்பதற்கான மேற்கொள்ளப்படும் சிறப்பு தீவிர திருத்த முறையையும் இந்த அதிகாரிகள் முழுமையாக ஆதரிக்கின்றனர்.
நீங்கள் தேர்தலில் வெற்றி பெறும்போது நேர்மையாக இருக்கும் தேர்தல் முறை, நீங்கள் தோற்கும் போது மட்டும் எப்படி முறைகேடாக மாற முடியும்? என்று அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மத்திய ஆளும் பாஜக அரசு இந்த தேர்தல் ஆணையத்தின் கீழ் பல மாநில தேர்தல்களிலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரும்பான்மையை இழந்ததை அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
கேள்வி கேட்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. ஆனால், அதற்கான ஆதாரங்களை நிரூபிக்க வேண்டியது குற்றம் சாட்டுபவர்களின் கடமை என்று அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் தேர்தல் முறைகேடு புகார்களை கூறுவது மக்களாட்சியின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைத்து விடும் என்றும் எச்சரித்துள்ளனர்.
என்னதான் இவர்கள் கடிதம் மூலம் மக்களிடையே கேள்வி எழுப்பியிருந்தாலும்.. எதிர்க்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன.
இந்திய தேர்தல் ஆணையத்தில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்கள் இருக்கின்றனர். எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும்.. மூன்று ஆணையர்களும் கலந்து ஆலோசித்து தான் எடுக்கப்பட வேண்டும். ஆனால், எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர், எங்களின் கருத்துக்களை கேட்கவில்லை. எங்களுடைய அதிருப்திகளுக்கு பதிலளிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து இருக்கிறார் என்று மற்ற இரண்டு ஆணையர்கள் தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
அப்படியெனில் இந்த எஸ்ஐஆர் நடவடிக்கை என்பது தன்னிச்சையாக எடுக்கப்பட்டதுதான். எனவே இதனை ரத்து செய்து பழைய வாக்காளர் பட்டியலை பயன்படுத்த வேண்டும் என்று எதிர் கட்சிகள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செய்தி ஊடகத்தில் வெளியான செய்திக்கும், எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கும் இந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் எழுதியுள்ள கடிதத்தில் பதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications
