13 சவரன் தங்கம் நகை.. தொழிலதிபர் வீட்டு வாசலில் கோலம் போட வந்த வசந்தா.. அதிகாலையில் விழித்த சென்னை
சென்னை: சென்னையில் வீட்டின் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணின் குடும்பத்தை கட்டிப்போட்டு, பெரும் தொகையை சூறையாடிய கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்து 5 நாட்களாகியும் குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை.. அந்தவகையில் சென்னை தொழிலதிபர் வீட்டு கொள்ளை சம்பவம், போலீசாருக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
சென்னை புழல் காவாங்கரை மகாவீர் கார்டன் பகுதியில் வசித்து வரும் ஜவுளி வியாபாரி விஜயகுமார்.. இவரது வீட்டில்தான் இந்த துணிகரச் சம்பவம் அரங்கேறியது.

கடந்த ஜனவரி 30ம் தேதி அதிகாலை நேரத்தில், விஜயகுமாரின் மனைவி வசந்தா வழக்கம்போல வீட்டின் முன்பு கதவைத் திறந்து வைத்துவிட்டு வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தார். வசந்தா தினமும் இந்த நேரத்தில்தான் வாசலில் கோலம் போடுவாராம்.. இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், அந்த சந்தர்ப்பத்தை 30ம் தேதி பயன்படுத்திக் கொண்டுள்ளனர்..
13 சவரன் தங்க நகைகள்
திடீரென 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று, வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த 5 பேரையும் கத்தி முனையில் மிரட்டி கயிறுகளால் கட்டிப்போட்டுள்ளனர்.. பிறகு வீட்டின் பீரோவில் இருந்து நகை பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றதாக தெரிகிறது.. முதலில் 50 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 35 சவரன் நகைகளை கொள்ளை போனதாக தகவல்கள் பரவின..
இருந்தாலும் காவல்துறை தரப்பில் நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வில், சுமார் 25 லட்சம் ரூபாய் ரொக்கம், 13 சவரன் தங்க நகைகள் மற்றும் கால் கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்துப் புழல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததோடு, குற்றவாளிகளைப் பிடிக்க 3 உதவி ஆணையர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது.
ஜாமீன் வழக்கறிஞர்
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கொள்ளையர்கள் தப்பிச் செல்லப் பயன்படுத்திய காரின் பதிவு நம்பரை கொண்டு துப்பு துலக்கப்பட்டது. இதன் விளைவாக புழல் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் மற்றும் எண்ணூரை சேர்ந்த ராகுல் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் விசாரிக்கும்போது அதிர்ச்சியூட்டும் விஷயம் ஒன்று வெளியானது, அது என்னவென்றால், கைதான பிரவீன்குமார் ஒரு வழக்கறிஞர் என்பதும், ராகுல் சட்டப்படிப்பு முடித்துவிட்டு இன்னும் வழக்கறிஞராகப் பதிவு செய்யாமல் இருந்தவர் என்பதும் தெரியவந்தது.
வெள்ளி பொருட்கள், தங்க நகைகள்
பிரவீன்குமார் பொதுவாக போதைப்பொருள் கடத்தல் மற்றும் ரவுடியிசம் தொடர்பான வழக்குகளில் கைதாவோரை ஜாமீனில் எடுக்கும் வேலையை பார்த்து வந்தாராம்.. இதன் காரணமாகவே அவருக்கு சமூக விரோதிகளுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது..
ஜவுளி வர்த்தகர் விஜயகுமாரின் தொழில் மற்றும் பொருளாதார நிலை குறித்த முழு விவரங்களையும் சேகரித்த பிரவீன்குமார், ராகுல் மற்றும் சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி குமார் என்பவருடன் இணைந்து இந்தக் கொள்ளைத் திட்டத்தைத் தீட்டி உள்ளார்..
ஊட்டி, கொடைக்கானல்
இவர்கள் அனைவருமே சம்பவத்தன்று முகமூடி அணிந்து கொண்டு திட்டமிட்டபடி கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். தற்போது கைதாகியுள்ள இருவரிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால், கொள்ளையடிக்கப்பட்ட பெரும் பணமும், நகைகளும், தப்பிச் சென்ற ரவுடி குமார் உள்ளிட்ட நான்கு பேரிடம்தான் உள்ளதாம்.. அவர்கள் இன்னும் பிடிபடவில்லை.
அவர்கள் ஊட்டி, கொடைக்கானல் மற்றும் குற்றாலம் எனத் தங்களின் இருப்பிடங்களை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருப்பதால், அவர்களை பிடிப்பதில் காவல்துறையினருக்குப் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. இந்தத் தலைமறைவு கும்பலைத் தனிப்படை போலீசார் தொடர்ந்து துரத்தி வருகின்றனர். விரைவில் பிடித்து விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது...!!












Click it and Unblock the Notifications