உயருகிறது முக்கிய பொருட்களின் விலை.. 148 பொருட்களின் ஜிஎஸ்டி வரி மாறுகிறது.. விரைவில் முடிவு?
சென்னை: காற்று நிரப்பப்பட்ட பானங்கள், சிகரெட்டுகள், புகையிலை மற்றும் தொடர்புடைய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை தற்போதைய 28 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக ஜிஎஸ்டி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் ரூ.1,500 வரையிலான ஆயத்த ஆடைகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டியும், ரூ.1,500 முதல் ரூ.10,000 வரை உள்ள ஆடைகளுக்கு 18 சதவீதமும் வரி விதிக்கப்படும். 10,000 ரூபாய்க்கு மேல் உள்ள ஆடைகளுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படும்.

மொத்தத்தில், ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு 148 பொருட்களுக்கான வரி விகிதங்களை மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவுகள் ஜிஎஸ்டி கவுன்சிலில் ஆலோசனை செய்யப்பட்டு இறுதி செய்யப்படும். ஜிஎஸ்டி கவுன்சில் முடிவிற்கு பிறகே இந்த வரி விகிதங்கள் அமலுக்கு வரும்.
புகையிலை மற்றும் தொடர்புடைய பொருட்கள் மற்றும் காற்றூட்டப்பட்ட பானங்கள் மீது 35 சதவீத சிறப்பு வரியை கொண்டு வர பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. பொருட்கள் மீது 5, 12, 18 மற்றும் 28 சதவிகிதம் என்ற நான்கு அடுக்கு வரி ஸ்லாப் எப்போதும் போல தொடரும். மேலும் 35 சதவிகிதம் சிறப்பு வரி என்ற புதிய வரி அறிமுகப்படுத்தப்படும். தற்போது, ஜிஎஸ்டி என்பது நான்கு அடுக்கு வரி அமைப்பாகும். இது போக சிறப்பு வரி கொண்டு வர வாய்ப்புள்ளது.
ஜிஎஸ்டியின் கீழ், சில அத்தியாவசியப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. சில பொருட்களுக்கு மிகக் குறைந்த ஸ்லாப்பில் வரி விதிக்கப்படுகிறது, அதே சமயம் ஆடம்பர மற்றும் அலங்கார பொருட்கள் மிக உயர்ந்த வரியை ஈர்க்கும். கார், வாஷிங் மெஷின் போன்ற ஆடம்பர பொருட்கள் மற்றும் காற்று நிரப்பப்பட்ட நீர் மற்றும் புகையிலை பொருட்கள் போன்ற பொருட்கள் அதிகபட்ச வரியை பெறுகின்றன.
கடந்த அக்டோபரில் நடந்த கூட்டத்தில், 20 லிட்டர் மற்றும் அதற்கு மேற்பட்ட பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் மீதான ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க முன்மொழியப்பட்டது. மேலும், 10,000 ரூபாய்க்கும் குறைவான சைக்கிள்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க கவுன்சிலில் முன்மொழியவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், உடற்பயிற்சி நோட் புக்குகள் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும். ரூ. 15,000 ஜோடிக்கு மேல் உள்ள ஷூக்கள் மீதான ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தவும் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு முன்மொழியப்பட்டது.
25,000 ரூபாய்க்கு மேல் உள்ள கைக்கடிகாரங்கள் மீதான ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டது.
அதேபோல் கூகுள் பே மூலமாக இனி ரீசார்ஜ் செய்வதற்கு கூடுதலாக ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கூகுள் பே மூலம் செய்யப்படும் ரீசார்ஜ் பிளான்களுக்கு 1 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்போதெல்லாம் நாடு முழுக்க ஆன்லைன் வர்த்தகம் அதிகம் ஆகிவிட்டது. முக்கியமாக கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற யுபிஐ சாதனங்கள் மூலம் பணம் செலுத்துவது அதிகம் ஆகிவிட்டது. சாதாரணமாக டீ குடிப்பது தொடங்கி வீட்டு வாடகைக்கு, மின்சார பில் கட்டுவது வரை பல விஷயங்களுக்கு மக்கள் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையை பின்பற்றுகிறார்கள்.
இதன் காரணமாக நேர விரயம் குறைகிறது. ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏடிஎம் சார்ஜ் இல்லை. அதோடு உடனடியாக பணம் செலுத்த முடிகிறது. கையில் எப்போதும் பணத்தோடு இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் யுபிஐ பேமெண்ட் மக்களின் வாழ்க்கையில் ஒரு அங்கம் ஆகிவிட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் கூகுள் பே மூலமாக இனி ரீசார்ஜ் செய்வதற்கு கூடுதலாக ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications