தமிழகத்தில் இப்போதைக்கு இடைத்தேர்தல் இல்லை.. கைவிரித்த தேர்தல் கமிஷன்.. அப்செட்டில் தவெக
சென்னை: தேர்தல் முடிவு தமிழ்நாடு அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இடைத்தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று, தங்களின் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படாமல் இருக்க தவெக திட்டமிட்டுள்ளது. தொகுதிகள் காலியான 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. இதனால் விரைவில் இடைத்தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போதைக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்தும் எண்ணத்தில் தேர்தல் ஆணையம் இல்லை. அதனால் தவெக அப்செட்டாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுகவை தோற்கடித்து தவெக ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சியமைப்பதற்கு 118 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். தவெகவுக்கு ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், ஐயூஎம்எல், விசிக ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்தது.

தமிழக இடைத்தேர்தல்
விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். விஜய் முதலமைச்சராக பதவியேற்றதும் திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். ஆயிரம் விளக்கு தொகுதி தவெக எம்எல்ஏ ஜே.சி.டி பிராபகர் சபாநாயகராக பொறுப்பேற்றார். இதனால், சட்டமன்றத்தில் தவெகவின் பலம் 106 ஆக குறைந்தது. நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு அதிமுக மற்றும் அமமுக எம்எல்ஏ ஆதரவு தெரிவித்தனர்.
ஆதரவு தெரிவித்த அதிமுகவினருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. அதிமுகவில் நிலவி வரும் பிரச்சனைகளால் பல முன்னாள் அமைச்சர்கள் கட்சியை விட்டு விலகி வருகிறார்கள். கம்யூனிஸ்ட்கள், ஐயூஎம்எல், விசிக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தாலும், தற்போதுவரை காங்கிரஸ் மட்டுமே தவெகவின் கூட்டணியில் இணைந்துள்ளது. மற்ற கட்சிகள் வெளியில் இருந்து தான் தவெகவுக்கு ஆதரவு வழங்கியுள்ளன.
வெளியாகாத அறிவிப்பு
முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். இதனால் 7 சட்டமன்ற தொகுதிகள் காலியாகியுள்ளன. அங்கு இடைத்தேர்தல் நடப்பது உறுதியாகியுள்ளது. தவெக ஆட்சியை கலைக்க திமுக சதி செய்வதாக புகார் எழுந்துள்ளது. ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடிக்கு பேரம் பேசிய வழக்கில் செந்தில் பாலாஜி தம்பி உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது.
12 தொகுதிகளுக்கு மேல் இடைத்தேர்தல் நடைபெற்றால் எந்த சிக்கலும் இல்லாமல் 5 வருடங்கள் ஆட்சியை கடந்துவிடலாம் என்று தவெக நினைக்கிறது. பீகார், மத்தியபிரதேசம், குஜராத் மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளில் வருகிற 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. இதனுடன்
தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தவெக அப்செட்
ஆனால் அறிவிப்பு வெளியாகவில்லை. அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா தொடர்பாக அந்தக் கட்சியினர் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதனால் தமிழகத்தில் இப்போதைக்கு இடைத்தேர்தல் வேண்டாம். வழக்கு நிலவரத்தை வைத்து முடிவு செய்து கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் முடிவை தள்ளி வைத்துள்ளது. இப்போதைக்கு இடைத்தேர்தல் இல்லை என்பதால் தவெக தலைமை அப்செட்டாகியுள்ளது.












Click it and Unblock the Notifications