நோட்டு கொடுத்தாத்தான் சீட்டு? 169 சீட்டில் நடந்த 10 கோடி ரூபாய் டீல்.. ஆட்டத்தை கலைக்கும் விஐபி?
சென்னை: தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சிக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு முடிந்த கையோடு, தற்போது தேர்தல் செலவினங்களுக்கான நிதிப் பகிர்வில் எழுந்துள்ள குளறுபடிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, 169 இடங்களில் களம் காணும் அந்த முக்கிய கட்சியின் தலைமை, வேட்பாளர்களுக்கு ஒதுக்கிய நிதியில் காட்டிய 'பாரபட்சம்' இப்போது உட்கட்சிப் பூசலாக உருவெடுத்துள்ளதாம்.. அதுகுறித்த ஒரு பிரத்யேக தகவல் நமக்கு கிடைத்துள்ளது.. அது என்ன தெரியுமா?
தேர்தல் அறிவிக்கப்பட்ட போதே, ஒவ்வொரு தொகுதிக்கும் அந்த கட்சித் தலைமையிலிருந்து தலா 5 கோடி ரூபாய் தேர்தல் நிதியாக வழங்கப்படும் என்று வேட்பாளர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டிருந்தது. வேட்பாளர்களும் அந்த நம்பிக்கையிலேயே களப்பணிகளைத் தொடங்கினார்கள்.

169 சீட் ட்விஸ்ட்
ஆனால், நடைமுறையில் நிதி வந்து சேர்ந்தபோதுதான் அதில் மிகப்பெரிய அரசியல் கணக்குகள் அரங்கேறியிருப்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கட்சித் தலைமையின் மிக நெருக்கமான வட்டாரத்தை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் "நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும்" எனத் தலைமை கருதும் சில முக்கியப் புள்ளிகளுக்கு, வாக்குறுதி அளித்தபடி 5 கோடி ரூபாய் முழுமையாகச் சென்றடைந்துள்ளது. அதுமட்டுமின்றி, சிலருக்குத் தேர்தல் வியூகங்களுக்காகக் கூடுதலாக ஒரு 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டு, மொத்தம் 10 கோடி ரூபாய் வரை வாரி வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
எதிர்க்கட்சி தலைமை
மற்றொருபக்கம், தலைமையின் நேரடி ஆதரவு இல்லாத அல்லது மாவட்டச் செயலாளர்களின் பரிந்துரையின் பேரில் சீட் பெற்ற பல வேட்பாளர்களுக்குப் பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாம்.
இவர்களுக்குப் பேசியபடி 5 கோடி வழங்கப்படாமல், முதல் தவணையாக ஒரு கோடி, இரண்டாம் தவணையாக ஒரு கோடி என வெறும் 2 கோடி ரூபாய் மட்டுமே கைக்கு வந்துள்ளது. மற்ற வேட்பாளர்களுக்கு முழுத்தொகையும், சிலருக்குக் கூடுதலாகவும் நிதி சென்றதை அறிந்த இந்த "இரண்டாம் தர" வேட்பாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்..
"ஒரே கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்குள் ஏன் இந்த பாகுபாடு?" என்ற கேள்வி இப்போது மாவட்ட அளவில் பூதாகரமாகியுள்ளது. தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து அந்தந்த மாவட்ட முன்னாள் அமைச்சர்களிடம் வேட்பாளர்கள் நேரடியாகவே முறையிட்டு விட்டார்களாம்.. இந்த விவகாரம்தான் இப்போது கட்சியின் உயர்மட்டக் குழு வரை சென்றுள்ளதாக கூறப்படுகிறது..
5 கோடி ரூபாய் பாரபட்சம்
நிதியில் பாரபட்சம் காட்டப்பட்டால் தேர்தல் வேலைகளில் தொய்வு ஏற்படும் என்று முன்னாள் அமைச்சர்கள் பலரும் தலைமையிடம் நேரடியாகவே தங்கள் அதிருப்தியைப் பதிவு செய்து வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் பணம் எப்படி கையாளப்படுகிறது என்பதுதான் பல இடங்களில் வெற்றி - தோல்வியை முடிவு பண்ணும்.. ஆனால், "வேட்பாளர்களுக்குள்ளேயே "யாரு முக்கியம், யாரு இல்ல" என்கிற உணர்வு உருவாக ஆரம்பித்துள்ளதாம்.. இதுவே கட்சிக்குள் பிளவை பெருசாக்கும் அபாயமும் உள்ளதால், தலைமையின் இத்தகைய பாரபட்சமான அணுகுமுறையால், களத்தில் வேலை வேகம் குறையலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
ஆக, தொண்டர்களை வழிநடத்த வேண்டிய தலைமை, அனைத்து வேட்பாளர்களையும் சமமாகப் பாவிக்கத் தவறினால், அது உட்கட்சிப் பிரிவினைக்கே வழிவகுக்கும் என்பதே உண்மை... இந்த நிதி விவகாரத்தால் வேட்பாளர்களுக்குள் அதிருப்தி எழுந்துள்ள நிலையில், இதன் ரிசல்ட் என்ன ஆகும் என்பது வாக்கு போடும் நாளில் தான் தெரிய வரும்....!!!
- எழில்












Click it and Unblock the Notifications