சென்னையில் 2.1 லட்சம் கிலோ பட்டாசு குப்பை! தூய்மை பணியாளர்களால் மீண்டும் உயிர்த்தெழுந்தது மாநகரம்
சென்னை: சென்னையில் தீபாவளியையொட்டி சுமார் 213.61 மெட்ரிக் டன் (2.1 லட்சம் கிலோ) பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டிருப்பதாக மாநாகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். இதை அகற்றுவதற்கு தூய்மை பணியாளர்கள் இரவும் பகலும் கடுமையாக உழைத்துள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த 31ம் தேதி தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக சென்னையில் தீபாவளி வெகு சிறப்பாக கொண்டாப்பட்டது. கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் அதிகமான அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதனால் அதிகமான அளவில் காற்று மாசு ஏற்பட்டது. தீபாவளியன்று பிற்பகல் நிலவரப்படி, சென்னையில் பிரதான பகுதிகளில் காற்று மாசு அபாகரமான அளவை எட்டியிருந்தது. அன்று இரவு காற்று மாசு நகர் முழுவதையும் சூழ்ந்தது.

இதனால் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் கண் எரிச்சல், மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்னையால் பாதிக்கப்பட்டனர். நேற்று மாலை வரை சென்னையில் காற்று மாசு குறையவில்லை. இன்று அதிகாலையில் பெய்த மழை காரணமாக தற்போது காற்று மாசு குறைந்திருக்கிறது. ஆனால், தீபாவளி என்றால் சென்னைக்கு மற்றொரு பிரச்னையும் இருக்கிறது. அது பட்டாசு கழிவுகள்தான்.
சென்னை மக்காத குப்பைகளை கையாளவே கடுமையாக திணறி வருகிறது. இப்படி இருக்கையில் பட்டாசு கழிவுகள் எனப்படும் ரசாயன குப்பைகளை மாநகராட்சி எப்படி கையாளும் என்று கேள்வி எழுந்தது. ஆனால், தூய்மை பணியாளர்கள் இரவும், பகலும் உழைத்து இந்த குப்பைகளை அப்புறப்படுத்தியுள்ளனர். தீபாவளி அன்று மட்டும் சுமார் 53,000 கிலோ ராசயன கழிவுகளை தூய்மை பணியாளர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர். அன்றைய தினம் அதிகபட்சமாக பெருங்குடியிலிருந்து 6,040 கிலோவும், அதை தொடர்ந்து வளசரவாக்கத்தில் 5,570 கிலோ பட்டாசு கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
அடுத்த நாள், அதாவது நவம்பர் 1ம் தேதியன்று சென்னை முழுவதும் 1.59 லட்சம் கிலோ பட்டாசு கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக அண்ணாநகரில் இருந்து 15,480 கிலோ கழிவுகளும், அம்பத்தூரில் 14,780 கிலோ கழிவுகளும் அப்புறப்படுத்தப்பட்டிருப்பதாக DTNEXT தெரிவித்திருக்கிறது.
தீபாவளி, அதற்கு அடுத்த நாள் என இரண்டு நாட்களில் மொத்தம் 2.1 லட்சம் கிலோ அளவுக்கு பட்டாசு கழிவுகளை தூய்மை பணியாளர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர். இரண்டு நாட்கள் என சேர்த்து பார்க்ககும் போது வளசரவாக்கத்தில் 21,000 கிலோவும், தேனாம்பேட்டையில் 20,000 கிலோவும், அண்ணாநகரில் 19,000 கிலோ பட்டாசு கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் கும்மிடிப்பூண்டியில் உள்ள செயலாக்க ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.
இவ்வளவு குப்பைகளை அள்ளி, அடுத்த நாளே சென்னையை தூய்மையாக வைத்திருக்கும், தூய்மை பணியாளர்களுக்கு நிரந்தர பணி என்பது கிடையாது. தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர் வேலைக்கு ஒப்பந்த அடிப்படையிலேயே ஆட்களை தேர்வு செய்கிறது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் எந்த சலுகையும், இந்த தொழிலாளர்களுக்கு கிடையாது. தங்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும் என்பது என்பது தூய்மை பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications