அமெரிக்கா இந்தியா வர்த்தக ஒப்பந்தம்.. 2,700 லட்சம் கோடி கிடைக்கும்.. பியூஸ் கோயல் விளக்கம்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு முக்கியமான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான வரைமுறைக்கு வந்துள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் மூலமாக இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சுமார் $30 டிரில்லியன் மதிப்புள்ள அமெரிக்கச் சந்தை திறந்துவிடப்படுகிறது என்று கூறியுள்ளார். இது இந்திய ரூபாய் மதிப்பில் 2700 லட்சம் கோடியாகும்.
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பியபடி இருந்தன. அமெரிக்காவிடம் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டதாகவும், இந்தியா விவசாயிகளை அடகு வைத்துவிட்டதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தன. மொத்த நாடாளுமன்றம் ஸ்தம்பித்து போயிருந்தது. தற்போது இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்து கூட்டறிக்கை வெளியாகி உள்ளது.

அமெரிக்கா உடனான இந்தியாவின் இந்த ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSME), விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் பியூஷ் கோயலின் முக்கிய அறிவிப்புகள்:
அமைச்சர் தனது சமூக வலைதளப் பதிவில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்போகும் நன்மைகளைத் தெளிவாகப் பட்டியலிட்டிருக்கிறார்.
$30 டிரில்லியன் சந்தை வாய்ப்பு: இந்த ஒப்பந்தம் மூலமாக இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சுமார் $30 டிரில்லியன் மதிப்புள்ள அமெரிக்கச் சந்தை திறந்துவிடப்படுகிறது.
வேலைவாய்ப்பு பெருகும்: ஏற்றுமதி அதிகரிப்பதன் மூலம் இந்தியப் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
வரி குறைப்பு: அமெரிக்கா தனது பரஸ்பர இறக்குமதி வரிகளை 18% ஆகக் குறைக்கிறது. இதனால் ஜவுளி, ஆடை, தோல் பொருட்கள், காலணிகள், பிளாஸ்டிக், ரப்பர், ரசாயனங்கள் மற்றும் கைவினைப் பொருட்களின் ஏற்றுமதி பெருமளவு அதிகரிக்கும்.
பூஜ்ஜிய வரி : ஜெனரிக் மருந்துகள், ரத்தினங்கள், வைரங்கள் மற்றும் விமான உதிரிபாகங்கள் போன்ற பொருட்களுக்கு வரி முற்றிலும் நீக்கப்பட்டு பூஜ்ஜியம் ஆக்கப்படும். இது 'மேக் இன் இந்தியா' திட்டத்திற்குப் பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
விவசாயிகள் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரப் பாதுகாப்பு: இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய விவசாயிகளின் நலன் காக்கப்படுவதை அமைச்சர் பியூஷ் கோயல் உறுதிப்படுத்தி இருக்கிறார். நமது விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதிலும், கிராமப்புற வாழ்வாதாரத்தைத் தக்கவைப்பதிலும் இந்தியா உறுதியாக உள்ளது.
இதன் அடிப்படையில் சோளம், கோதுமை, அரிசி, சோயா, பால் பொருட்கள் (பால், சீஸ்), கோழி இறைச்சி, எத்தனால், புகையிலை மற்றும் சில காய்கறிகள் போன்ற முக்கியமான விவசாயப் பொருட்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கூடுதல் சலுகைகள்:
விமான உதிரிபாகங்களுக்கு அமெரிக்காவின் 'பிரிவு 232'-ன் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாகன உதிரிபாகங்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்குப் பேச்சுவார்த்தை மூலம் சாதகமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
வளர்ச்சியடைந்த இந்தியா நோக்கிய பயணம்
இந்த ஒப்பந்தமானது இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான பொருளாதார உறவை மேலும் ஆழப்படுத்தும் என்றும், இரு நாட்டு மக்களின் நிலையான வளர்ச்சிக்கு இது வழிவகுக்கும் என்றும் அமைச்சர் பியூஷ் கோயல் குறிப்பிட்டிருக்கிறார். "வளர்ச்சியடைந்த இந்தியா" என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் இது ஒரு முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications