ஸ்டாலின் துவக்கி வைத்த 2 இயந்திரங்கள்! ஆண்டுக்கு அரசுக்கு ரூ.80 கோடி செலவு மிச்சம்! என்ன ஸ்பெஷல்?
அரசுக்கு ஆண்டுக்கு ரூ.80 கோடி செலவு மிச்சப்படும் வகையில் புதிய நடவடிக்கை
சென்னை: தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்காக அங்குள்ள துறைமுகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 2 நிலக்கரி இறக்கும் இயந்திரங்களின் செயல்பாடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த புதிய இயந்திரங்கள் மூலம் நிலக்கரியை கையாளும் சரக்குக் கட்டணம் டன் ஒன்றிற்கு ரூ.700-லிருந்து ரூ.540 ஆக குறையும் என்றும் இதன் மூலம் ஆண்டுக்கு அரசுக்கு ரூ.80 கோடி செலவு மிச்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விவரம் வருமாறு;

தூத்துக்குடி அனல் மின் நிலையம்
எரிசக்தித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்காக தூத்துக்குடி துறைமுகத்தில் புதிதாக 325 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள அதிக திறன் கொண்ட இரண்டு நிலக்கரி கையாளும் இயந்திரங்களின் (Shore Unloader) செயல்பாடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு தொடங்கி வைத்தார்.

நிலக்கரியை கையாள
தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்காக தற்போது, தூத்துக்குடி துறைமுகம் தளம்-1 மற்றும் தளம் 2-ல் நிலக்கரியை கையாள்வதற்கு சுமார் 50,000 மெட்ரிக் டன் முதல் 55,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிரேனுடன் கூடிய சிறிய கப்பல்கள் மாதம் ஒன்றிற்கு 10 முதல் 12 வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

325 கோடி ரூபாய் செலவில்
அதிக அளவு நிலக்கரியை குறுகிய காலத்தில் கையாள்வதற்காகவும், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 5 அலகுகளிலும் (5x210 மெகாவாட்) முழு அளவில் மின் உற்பத்தி தங்கு தடையின்றி நடைபெறுவதற்காகவும், தமிழ்நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் 70,000 மெட்ரிக் டன் முதல் 75,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பெரிய கப்பல்களிலிருந்து நிலக்கரியை விரைவாக இறக்குவதற்காக திட்டம் தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினால் 325 கோடி ரூபாய் செலவில் இந்த இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

ஆண்டுக்கு ரூ.80 கோடி மிச்சம்
இப்புதிய இயந்திரங்கள் வாயிலாக குறுகிய காலத்தில் 6 முதல் 8 பெரிய கப்பல்கள் மூலம், கப்பல் ஒன்றிற்கு 70,000 டன் முதல் 75,000 டன் வரை அதிக கொள்ளளவு நிலக்கரியை இறக்க முடிவதால் நிலக்கரியை கையாளும் சரக்குக் கட்டணம் டன் ஒன்றிற்கு ரூ.700-லிருந்து ரூ.540 ஆக குறையும். இதனால், ஆண்டொன்றிற்கு சுமார் 80 கோடி ரூபாய் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு சேமிப்பாகக் கிடைக்கும். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், செந்தில்பாலாஜி, தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications