சென்னையில் ஒரே நாளில் 28 லட்சம் சம்பாத்தியம்.. நில பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவோர் உஷார்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த சேக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி இருதயராஜ் என்பவர் தனக்கு சொந்தமான 1,054 சதுர அடி வீட்டு மனையை அடமானம் வைத்து கடன் பெற முயன்றுள்ளார். அவரது நிலையை புரிந்து கொண்ட இரண்டு பேர் கடன் பெற்றுவதாக ஆசை வார்த்தை கூறி நிலப்பத்திரத்தை வாங்கியுள்ளனர். அந்த நிலத்தை பொதுஅதிகார பத்திரம் எழுதி வாங்கி கொண்டு ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்தை கொடுத்துள்ளனர். பின்னர் பத்திரத்தை தனியார் வங்கியில் அடகு வைத்து 28 லட்சம் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ஆவடி அடுத்த சேக்காடு பகுதியைச் சேர்ந்த 60 வயதாகும் விவசாயி இருதயராஜ், சேக்காடு பிரதான சாலையில் தனக்கு சொந்தமான 1,054 சதுர அடி மனையை அடமானம் வைத்து கடன் பெற முயன்றிருக்கிறார். இந்த நிலையில் மணலி ஜலகண்ட மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 40 வயதாகும் ஆனந்த் மற்றும் ஆவடி வெள்ளானூர் பகுதியைச் சேர்ந்த 33 வயதாகும் ரஹி மோனிஷா ஆகியோர், கடன் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி கடந்த ஆண்டு இருதயராஜிடமிருந்து நிலப் பத்திரத்தை பெற்றுள்ளார்.

அந்த ஆவணங்களை பயன்படுத்தி, ஆனந்த் மற்றும் மோனிஷா வங்கி கணக்கு தொடங்கி, மோகன் என்பவர் பெயரில் பொது அதிகார பத்திரம் எழுதி, ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்தை மட்டுமே இருதயராஜிடம் வழங்கி உள்ளார்.
பின்னர் மீதித் தொகை தருவதாக கூறி, மோகன் பெயரில் இருந்த பொது அதிகாரத்தை ரத்து செய்திருக்கிறார். அதே நாளில் நரேஷ் நவீன் என்பவர் பெயரில் பத்திரத்தை அடமானம் வைத்து தனியார் வங்கியில் ரூ.28 லட்சத்து 25 ஆயிரம் கடன் பெற்றதாக சொல்லப்படுகிறது. அந்த தொகையை தங்களது வங்கி கணக்குகளில் மாற்றிக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து நிலத்தின் உரிமையாளர் இருதயராஜ் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஆவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் ஆனந்த் மற்றும் மோனிஷாவை கைது செய்தனர்.
வீட்டு மனை பத்திரத்தை வைத்து கடன் வாங்கும்போது ஏமாறாமல் இருக்கவும், உங்கள் சொத்தைப் பாதுகாக்கவும் பின்வரும் வழிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுவது நல்லது
"பொது அதிகாரம்" ஒருபோதும் தரக்கூடாது
கடனுக்காக நிலப் பத்திரத்தைக் கொடுக்கும்போது, "பராமரிப்புக்காகப் பத்திரம் எழுதித் தாருங்கள்" அல்லது "பாதுகாப்பிற்காகப் பொதுப் பத்திரம் வேண்டும்" என்று கேட்பார்கள். நீங்கள் பொதுப் பத்திரம் எழுதிக் கொடுத்தால், உங்கள் அனுமதி இல்லாமலேயே அந்த நபரால் உங்கள் சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் எளிதாக விற்க முடியும். கடனுக்காகப் பொதுப் பத்திரம் எழுதித் தருவது சட்டப்படி தேவையற்றது. அதை அறவே தவிர்க்க வேண்டும்
"கிரையப் பத்திரம்" செய்யாதீர்கள்
சிலர் கடன் தரும்போது, "பாதுகாப்பிற்காக உங்கள் சொத்தை என் பெயருக்குப் பத்திரம் செய்து கொடுங்கள், பணத்தைத் திருப்பிக் கொடுத்ததும் நான் மீண்டும் உங்கள் பெயருக்கே மாற்றித் தருகிறேன்" என்று கேட்பார்கள். ஒருமுறை உங்கள் சொத்து அவர்கள் பெயருக்கு மாறிவிட்டால், அவர்கள் அதைத் திருப்பித் தர வேண்டிய கட்டாயம் இல்லை. நீங்கள் சட்டப்படி சொத்தை விற்றுவிட்டதாகவே கருதப்படும். எனவே எந்தச் சூழ்நிலையிலும் கடனுக்காகச் சொத்தை மாற்றிக் கொடுக்காதீர்கள்.
பாதுகாப்பான வழி: "அடமானப் பத்திரம்"
நீங்கள் ஒரு தனிநபரிடம் கடன் வாங்கினாலும், அதைச் சட்டப்படி "அடமானப் பத்திரம் ஆகப் பதிவு செய்யுங்கள். இதில் நீங்கள் எவ்வளவு கடன் வாங்கினீர்கள், எவ்வளவு வட்டி, எவ்வளவு காலத்தில் திருப்பித் தருவீர்கள் என்ற விவரங்கள் மட்டுமே இருக்கும். சொத்து உங்கள் பெயரிலேயே இருக்கும். கடன் முடிந்ததும் 'அடமான ரத்து பத்திரம்' மூலம் அதைச் சரிசெய்து கொள்ளலாம்.
மோசடியைத் தவிர்க்க என்ன செய்யலாம்
எந்தக் காரணத்தைக் கொண்டும் வெற்றுப் பத்திரங்களிலோ அல்லது காசோலைகளிலோ (Blank Cheques) கையெழுத்திடாதீர்கள். பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு உங்களை அழைத்துச் சென்றால், அங்கு நீங்கள் கையெழுத்திடும் ஆவணத்தை முழுமையாகப் படியுங்கள் அல்லது ஒரு தெரிந்த வழக்கறிஞரை உடன் அழைத்துச் செல்லுங்கள். தனியார் நபர்களிடம் அதிக வட்டிக்கு வாங்குவதை விட, வங்கிகளில் சொத்து பிணைக் கடன் வாங்குவது 100% பாதுகாப்பானது.
வில்லங்கச் சான்று
உங்கள் பத்திரம் உங்களிடம் இருந்தாலும், அவ்வப்போது உங்கள் சொத்திற்கு வில்லங்கச் சான்று (EC) போட்டுப் பாருங்கள். யாராவது போலிப் பத்திரம் தயாரித்துள்ளார்களா என்பது தெரிந்துவிடும்.
கந்துவட்டி புகார்
யாராவது உங்களை மிரட்டிப் பத்திரம் எழுதி வாங்க முயன்றால், உடனடியாக 'கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின்' கீழ் மாவட்ட ஆட்சியரிடமோ அல்லது காவல்துறையிடமோ புகார் அளிக்க வேண்டும்
ஏற்கனவே ஏமாற்றப்பட்டிருந்தால் என்ன செய்வது?
உங்கள் சொத்து மோசடியாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால், அதை ரத்து செய்ய இப்போது புதிய சட்டம் (Tamil Nadu Registration Act - Section 77A) வழிவகை செய்கிறது. நீங்கள் சம்பந்தப்பட்ட மாவட்டப் பதிவாளரிடம் புகார் அளித்து, போலிப் பதிவை ரத்து செய்யக் கோரலாம்.












Click it and Unblock the Notifications