கால்பந்து வீராங்கனை பிரியா இறப்பு.. அந்த 2 அரசு மருத்துவர்களும் தலைமறைவு?.. அமைச்சர் சொல்வது என்ன?
சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தலைமறைவாக இருந்தால் அவர்களை தேடி பிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
"கால்பந்து கால்பந்து" என சிறு வயது முதல் அந்த விளையாட்டின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் சென்னை வியாசர்பாடி பிரியா. இவர் 17 வயது கல்லூரி மாணவி, ராணி மேரி கல்லூரியில் விளையாட்டு பிரிவில் பட்டம் படித்து வந்தார்.
கல்லூரிக்கு தினமும் காலை 4 மணிக்கு செல்லும் பிரியா, இரவு 8 மணிக்குதான் வீட்டுக்கு வருவாராம். கல்லூரி படிப்பு, காலையில் கால்பந்து பயிற்சி என எப்போதும் துருதுருவென இருப்பாராம். யாரிடமும் அதிர்ந்து கூட பேசாதவர்.

கால்பந்து போட்டி
இவர் கால்பந்து ஆடிய கடைசி வீடியோவை பார்க்கும் போது நெஞ்சை உலுக்குகிறது. எத்தனை நேர்த்தியாக விளையாடிய பிரியாவின் கால்கள் இன்று உயிரற்று கிடக்கின்றன. அவருடைய தோழிகள் ஜெர்சியை கொடுத்து எழுந்து வாடி , ஜெர்சியை போடு விளையாடலாம் என அழைத்தும் இவர்கள் அழைப்பு கேட்கும் தூரத்தில் பிரியா இல்லை.

பிரியா கனவு
கால்பந்து வீரர்களை போல் ஜொலிக்க நினைத்த பிரியா தனது கனவு நிறைவேறாமல் 17 வயதிலேயே இறந்துவிட்டார். சாகும் வயசா இது என கேட்டு உறவினர்கள் அழும் காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரியாவுக்கு நடந்தது என்ன? கல்லூரியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது காலில் அடிபட்டது.

வலி இருந்தது
காலில் தொடர்ந்து வலி இருந்ததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு காலில் ஜவ்வு கிழிந்துவிட்டதால் மைனர் ஆபரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து தங்கள் வீடு எங்கே என கேட்ட போது பிரியாவின் பெற்றோர் வியாசர்பாடி என தெரிவித்தனர். இதனால் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் கூட நீங்கள் ஆபரேஷன் செய்து கொள்ளலாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்ததாக தெரிகிறது.

பெரியார் நகர்
இதையடுத்து பெரியார் நகரில் பிரியாவுக்கு ஆபரேஷன் நடந்தது. சின்ன லேப்ராஸ்கோபி ஆபரேஷன் என சொல்லிவிட்டு முட்டி முதல் கெண்டை கால் வரை கட்டு கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆபரேஷன் செய்தும் பிரியாவின் கால் வலி குறையவே இல்லை. இந்த நிலையில் கால் திடீரென வீங்கிவிட்டது. இதையடுத்து அவரை மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கே அனுப்பி வைத்தனர்.

மருத்துவர்கள்
அங்கு சோதனை செய்த மருத்துவர்கள் கால் அழுகிவிட்டதாக கூறினர். இதையடுத்து காலை அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்தனர். பிரியாவின் கால் அகற்றப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிரியா நேற்று காலை உயிரிழந்தார். இவரது இறப்புக்கு பெரியார் நகர் மருத்துவர்கள் இறுக்கமாக கட்டு கட்டியதே காரணம் என தெரிகிறது.

பிரியாவுக்கு சிகிச்சை
இது குறித்த விசாரணையில் பிரியாவுக்கு சிகிச்சை அளித்த சோமசுந்தரம், பால் ஆகிய இரு மருத்துவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மருத்துவர்கள் மீதான நடவடிக்கை குறித்த கோரிக்கை எழுந்த நிலையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில் மருத்துவ குழுவின் முழு அறிக்கை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும். சட்டரீதியாக வழக்கு பதியப்பட்ட பிறகுதான் மாணவியின் உடலுக்கு உடல் கூராய்வு செய்யப்பட்டது. மருத்துவர்கள் தலைமறைவாக இருந்தால் காவல் துறை தேடி கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் என்றார். இரு மருத்துவர்களின் செல்போன் சிக்னல் , அவர்களுடைய வீடு இருக்கும் பகுதிகளை போலீஸார் கண்காணித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications