திமுக கூட்டணி 20 சீட் கூட ஜெயிக்க முடியாது! ஏன்? எப்படி? பாரிவேந்தர் புதிய கணிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணி 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது என்று ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 தேர்தலைவிட பாரிவேந்தர் இந்த மக்களவைத் தேர்தலில் வைப்ரண்ட் ஆக இருக்கிறார். கூடவே திமுக கூட்டணியை மிக வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்.

20 seats for DMK alliance Paarivendhar prediction

கடந்த முறை திமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்ற இவர், இத்தனை ஆண்டுகளாகக் கூட்டணிக் கட்சியான திமுகவை வெளிப்படையாக விமர்சித்ததே இல்லை. கூட்டணியிலிருந்து 4 ஆண்டுகளுக்கு முன்பே சைலண்ட் ஆக ஒதுங்கிவிட்டார்.

எதற்காக வெளியேறினார்? திமுக மீதான விமர்சனம் என்ன? அந்தக் கட்சியுடனான கூட்டணி உடைந்ததற்கு யார் காரணம் என்பது பற்றி அவர் தேர்தல் வரும்வரை வாய் திறந்ததே இல்லை.

சரியான தருணம் வரும்வரை காத்திருந்து, இப்போது திமுகவை விமர்சித்து வருகிறார். கூடவே பாஜக உடனான தனது கொள்கை ரீதியான தோழமை குறித்துப் பேசி வருகிறார்.

2024 தேர்தல் களம் திமுகவுக்கு ஆதரவாகவே இருந்து வருகிறது எனப் பலரும் சொல்லி வரும்போது, அந்தக் கூட்டணி 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது என அடித்துச் சொல்கிறார் பாரிவேந்தர்.

அது மட்டும் அல்ல. பாஜக கூட்டணியில் இவர் இருப்பதாலேயே புதிய தலைமுறை தொலைக்காட்சி அக்கூட்டணி 18% வாக்குகளைப் பெறும் என்று கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளதாகப் பலரும் பேசி வரும்போது, அந்தத் தொலைக்காட்சி தன்னுடையதல்ல என்றும், அது தன்னை இதுவரை புரமோட் செய்ததே இல்லை என்றும் பல உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளார்.

20 seats for DMK alliance Paarivendhar prediction

திமுக கூட்டணி 20 சீட்தான் பிடிக்கும்:

பாரிவேந்தர் அளித்துள்ள ஒரு நேர்காணலில், "இந்த முறை திமுக கூட்டணி 40/40 தொகுதிகளிலும் வெற்றி பெறாது. அதிகபட்சமாக 20 முதல் 25 தொகுதிகளை அந்தக் கூட்டணி வெல்லலாம்.

ஏனெனில் திமுக கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு எதையும் செய்யவில்லை. மத்திய அரசை எதிர்ப்பதை மட்டுமே வேலையாகச் செய்திருக்கிறார்கள்.

மோடி எதிர்ப்பு மட்டுமே திமுகவின் மூலதனம். நாடாளுமன்றத்தைச் செயல்படாமல் முடக்குவது, கூச்சல் போடுவது, அதன் மூலம் ஒரு ஊடக வெளிச்சத்தை உருவாக்குவது, கட்சியை வளர்ப்பது இதுதான் திமுகவின் திட்டமாக இருந்துள்ளது. அவர்களால் மக்களுக்கு ஒரு பலனும் இல்லை.

ஆக, பலமான கூட்டணிதான் வெல்லும் என்பது எல்லாம் பழைய மனநிலை. ஏன் ஒரு புதிய மாற்றம் ஏன் நடக்காது என்று நினைக்கிறீர்கள்? பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை வந்த பிறகு தமிழ்நாட்டு அரசியல் களம் மாறியுள்ளது.

திமுக பிடிக்கவில்லை என்றால் அதிமுக. அதிமுகவைப் பிடிக்கவில்லை என்றால் திமுக. இப்படியான கணக்குகள் இனி செல்லுபடி ஆகாது. அந்த அரசியல் மலையேறிவிட்டது. இப்போது பாஜகவை ஒரு புதிய வாய்ப்பாக மக்கள் பார்க்கிறார்கள்" என்று கூறியுள்ளார் பாரிவேந்தர்.

திமுக கூட்டணி முறிவு ஏன்?:

மேலும் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது பற்றிப் பேசும் போது, "ஒவ்வொரு தேர்தலின் போது ஒரு அரசியல் கட்சி இன்னொரு அரசியல் கட்சியோடு கூட்டணி வைப்பது சகஜம். அப்படித்தான் ஒரு தேர்தல் கூட்டணியாக திமுகவுடன் நாங்கள் தோழமை கொண்டோம். அதற்கு முன்பாக 2014இல் இருந்தே பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தோம்.

20 seats for DMK alliance Paarivendhar prediction

இன்னும் சொல்லப் போனால், மோடி பிரதமராவதற்கு முன்பாகவே எங்கள் பல்கலைக் கழக விழாவுக்கு அவர் அழைக்கப்பட்டார். அப்போதே நான் சொன்னேன், இன்னும் 4 மாதத்தில் நீங்கள்தான் பிரதமர் என்று. நான் சொன்னதைப் போலவே பிரதமராக மோடி பதவியில் அமர்ந்தார்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், தொடக்கம் முதல் பாஜக கூட்டணியில்தான் நான் இருந்து வருகிறேன். 2019 தேர்தல் போதுகூட பாஜக கூட்டணியில் தொடரவே விரும்பினேன்.

அந்தக் காலகட்டத்தில் பாஜக தமிழ்நாட்டில் அதிமுகவை நம்பி இருந்தது. அந்தக் கூட்டணியின் போது பாஜகவுக்கு 5 தொகுதிகளைத்தான் அதிமுக ஒதுக்கியது. அந்த ஐந்தில் ஒன்றை எனக்குக் கொடுங்கள் என பாஜகவை அழுத்தம் தர நான் விரும்பவில்லை. அது நியாயமும் இல்லை.

அப்போதுதான் முடிவெடுத்து திமுக கூட்டணிக்குள் சென்றோம். மாற்றுக் கருத்து கொண்டவர்கள் கூட சேர்ந்து கூட்டணி அமைப்பதே தேர்தல் ஜனநாயகம். அதை திமுக செய்தால் சரி என்கிறார்கள். நாங்கள் செய்தால் பொருந்தாத கூட்டணி என்கிறார்கள். இது என்ன நியாயம்? " என்று கேள்வி எழுப்புகிறார்.

புதியதலைமுறை Vs பாரிவேந்தர்:

இதை எல்லாம் கடந்து பாஜக தொடர்பாக பு.த. தொலைக்காட்சி வெளியிட்ட கருத்துக் கணிப்புகள் பற்றி மிக வெளிப்படையாக சில உண்மைகளைப் போட்டு உடைத்துள்ளார் பாரிவேந்தர்.

"புதிய தலைமுறை என்னை புரமோட் செய்வதைப் போல ஒருமுறை கூட செய்தி வெளியிட்டதில்லை. அவர்கள் என்னை முன்னிலைப்படுத்தவும் மாட்டார்கள். ஆரம்பக் காலத்திலிருந்து இதுதான் நிலை. இதை நான் பொது மேடையிலேயே சொல்லி இருக்கிறேன்.

ஒருவிழாவில் 5 கட்சிகள் கலந்து கொண்டால், 4 பேரைக் குறிப்பிட்டுச் சொல்வார்கள். எங்கள் கட்சியைச் சொல்ல மாட்டார்கள். அது நிர்வாகத்தின் முடிவா? அல்லது அங்கு பணிபுரியும் ஊழியர்களின் முடிவா என எனக்குத் தெரியாது. 'புதிய தலைமுறை' என்பது முதலாளிகள் தொலைக்காட்சி அல்ல. அது ஊழியர்களின் தொலைக்காட்சி என்று நான் வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறேன்.

புதியதலைமுறை என்பது என்னுடையது அல்ல. என் குடும்பத்தில் உள்ளவர்கள் அவரவருக்குப் பிடித்தமான துறையில் இயங்கி வருகிறார்கள். அதில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

அவர்கள் மற்ற கட்சிகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை எங்களுக்கும் அளித்திருந்தால், நாங்கள் தமிழ்நாட்டில் பெரிய கட்சியாக வளர்ந்திருப்போம். அப்படி அவர்கள் செய்ததே இல்லை.

20 seats for DMK alliance Paarivendhar prediction

நான் பாஜக கூட்டணியில் உள்ளதற்கும் புதிய தலைமுறை கருத்துக் கணிப்பு வெளியிடுவதற்கும் எந்தத் தொடர்புமே கிடையாது. 100% இதுதான் உண்மை. அவர்கள் பாஜக கூட்டணிக்கு 18% அளித்திருந்தார்கள்.

அது வெளியான பிறகு டிவியை பார்த்து நானும் தெரிந்து கொண்டேன். இவர்கள் எப்படி இந்தளவுக்கு ஒரு முக்கியத்துவத்தை பாஜகவுக்கு அளித்தார்கள் என்று நானே ஆச்சரியப்பட்டேன்.

பாஜக கூட்டணி பற்றி அவர்கள் எடுத்த கருத்துக் கணிப்பு முதலில் பாஜகவுக்கு அதிக ஆதரவு உள்ளதை வெளிப்படுத்தியது. அதில் அவர்களுக்கே சந்தேகம். எனவே மீண்டும் புதியதாக ஒரு கருத்துக்கணிப்பு எடுத்தார்கள். அதிலும் பாஜக 18% வந்தது. அதன்பின்னர் தான் வெளியிட்டுள்ளார்கள் எனப் பின்னர் செய்திகள் மூலம் அறிந்து கொண்டேன்" என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+