தனி ஒருவன் நினைத்து விட்டால்! மாசடைந்த ஆற்றை தனி ஆளாக சுத்தம் செய்த இந்திய இளைஞர்! யார் இந்த பிட்டு
சென்னை: தனி ஒரு ஆளாக, ஆஜ்னார் ஆற்றை சுத்தப்படுத்தி வரும் இந்திய இளைஞர் "பிட்டு தபாஹி" சமீப நாட்களாக சமூக வலைத்தளத்தில் கொண்டாடப்பட்டு வருகிறார். தனி ஒருவன் நினைத்துவிட்டால்.. இந்த உலகத்தில் தடைகள் இல்லை.. என்பதன் படி, ஒற்றை ஆளாக ஒரு ஆற்றையே சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு உலக அளவில் டிரெண்ட் ஆகி இருக்கிறார்.
கடந்த சில நாட்களாகவே இது தொடர்பான படங்கள், வீடியோக்களும் இணையத்தில் டிரெண்ட் ஆகின. அதாவது "பிட்டு தராஹி தூய்மைப் பணியை தொடங்கும் முன்பு குப்பைகளாக காட்சியளிக்கும் ஆஜ்னார் ஆறும், இப்போது குப்பையில்லா ஆஜ்னார் ஆறும்" என இரு படங்களையும் கம்பேர் செய்த படங்களும் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன. இதையடுத்து நெட்டிசன்கள் பலரும் யார் இந்த பிட்டு தராஹி என விவாதம் செய்ய தொடங்கினர். தற்போது அவர் யார்? எதற்காக இந்த பணியினை செய்தார் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.

பிஎஸ்சி 2 ஆம் ஆண்டு மாணவர்
எந்தவித பின்னணியும், வசதியும் இல்லாத ஒரு சாதாரண கிராமத்து இளைஞன் தான் இந்த பிட்டு தராஹி. இவரது பெயர் சுரேந்திர சிங் சௌத்ரி (வயது 20). மத்திய பிரதேச மாநிலம் பியோராவைச் சேர்ந்தவர். அங்குள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி படித்து வருகிறார். இவர் வசித்து வரும் பகுதியில் அஜ்னார் என்ற ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றில் பலரும் குப்பைகளை வீசி வருவதாலும், கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் குவியலாக அசுத்தமாக காட்சியளித்தது.
இதை பார்த்த பிட்டு என்ற சுரேந்திர சிங் சௌத்ரி முதலில் தன் நண்பர்களுடன் சேர்ந்து சுத்தம் செய்ய முயன்றுள்ளார். கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி இந்த பணியை தொடங்கியுள்ளார். ஆனால் அவர்கள் சிறிது நாட்களுக்கு பிறகு வரவில்லை. இதனால் தனி ஒரு ஆளாக சுத்தம் செய்ய ஆரம்பித்தார். இதற்காக தனது சொந்த பணத்தை பயன்படுத்தினார். முதலில் குப்பைகளை மீண்டும் ஆற்றில் போடாதவாறு இருக்க ஆற்றுப்பகுதியில் குப்பைத் தொட்டிகளை தன் சொந்த செலவில் வாங்கி வைத்துள்ளார்.
காலில் தொற்று ஏற்பட்டது
ஆற்றைச் சுத்தம் செய்வதற்குத் தேவையான பொருட்கள் மற்றும் குப்பைத் தொட்டிகளை வாங்குவதற்காக பிட்டு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளார். அவரது நண்பர்களும் இதற்கு பணம் உதவி செய்துள்ளனர். எனினும் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இன்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டதால் பிட்டுவுக்கு கை, கால்களில் தோல் உரிதல், தொற்று நோய்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காலில் ஏற்பட்ட தொற்றால் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய தேவையும் ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இனி நீ ஆற்றில் இறங்கி சுத்தம் செய்யக் கூடாது என சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதனையும் மீறி இந்த தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதே போன்று அந்த ஆற்றின் அருகே உள்ள கோவில் வழிபாடுகளில் பயன்படுத்தப்பட்டு ஆற்றில் வீசப்படும் பொருட்களை எல்லாம் சேகரித்து அதனை கம்போஸ்டாக மாற்றியதாவும் சொல்லப்படுகிறது.
A man single-handedly cleans an entire river in his village.
— Massimo (@Rainmaker1973) September 3, 2026
A 20-year-old student in India is going viral for cleaning a polluted river by himself. Bittu Tabahi has removed plastic and trash from the water, spending his own money on supplies despite getting infections on his… pic.twitter.com/YIiYMOVj7z
ஆனந்த் மகிந்திரா போட்ட ட்வீட்
இவரது இந்த தூய்மைப் பணி பற்றி கேள்விப்பட்ட நாடறிந்த தொழிலதிபரான ஆனந்த் மகிந்திரா, பிட்டுவின் இந்த செயலை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார். இதையடுத்து தான் பிட்டு பற்றிய செய்திகள் இணையதளத்தில் டிரெண்ட் ஆக தொடங்கின. இதனை பார்த்த முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சனும் பிட்டு செய்து வரும் தூய்மைப் பணியை பாராட்டினார். இப்படியாக தற்போது அவரது செயல் நாடு முழுக்க ட்ரெண்ட் ஆனது.
ஆரம்பத்தில் கேலி, கிண்டலுக்கு ஆளான பிட்டு
ஆரம்பத்தில் பிட்டுவின் இந்த செயலை பார்த்து அப்பகுதி மக்களே கேலியும், கிண்டலும் செய்து இருக்கிறார்கள். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார். இது பற்றி பிட்டு கூறுகையில், நான் இந்த பணியை பிரபலம் அடைவதற்காக செய்யவில்லை. எங்க ஊரில் உள்ள ஆறு அசுத்தமாக இருந்தது. சுத்தம் செய்ய வேண்டும் என்று தான் நினைத்தேன். அவ்வளவு தான். இந்த பணியை இன்னும் பெரிய அளவில் செய்ய உள்ளேன்" என்று கூறினார்.
இணையத்தில் அதிகம் ட்ரெண்ட் ஆன நிலையில், நெதர்லாந்து நிறுவன சி.இ.ஓ, எங்கள் நிறுவனத்தில் வந்து வேலை செய்யுங்கள் என பிட்டுவை வேலைக்கும் அழைத்துள்ளார். நெதர்லாந்தை சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் அமைப்பான ஓஷன் கிளீனப் நிறுவனத்தின் நிறுவனரும், சி.இ.ஓவான போயன் ஸ்லாட், "பிட்டு தபாஹியின் வேலையை கண்டு வியந்து, எங்கள் நிறுவனத்தில் வந்து பணியாற்றுங்கள்" என்று அவரது எக்ஸ் தளத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications
