சென்னையை அதிர வைத்த பைனான்ஸ் மோசடி! 10 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நீதி! சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்!
சென்னை: அதிக வட்டி தருவதாக 587 பேரிடம் ரூ.47.68 கோடி மோசடி செய்த விஸ்வபிரியா பைனான்ஸ் நிதி நிறுவன இயக்குநர் சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அடையாறு காந்தி நகரில், 'விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்' என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக வாக்குறுதியளித்திருந்து. இதனை நம்பி 500க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்தனர். ஆனால், முதலீடு செய்தவர்களுக்கு குறிப்பிட்ட முதிர்வு காலத்தில் பணத்தை திரும்ப அளிக்கவில்லை. எனவே இந்த நிதி நிறுவனத்தின் மீது வேளச்சேரியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் கடந்த 2013 ஆண்டு புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட், அதன் துணை நிறுவனங்களான அக்ஷயபூமி இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் என, 17 நிதி நிறுவனங்கள் மற்றும் அதன் இயக்குநர்கள் சுபிக்ஷா சுப்பிரமணியன், நாராயணன், ராஜரத்தினம், பாலசுப்பிரமணியன், அகஸ்டின், கணேஷ் உள்பட 17 பேர் மீது, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்த காவல்துறை, கடந்த 2020 ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
அதில், 587 முதலீட்டாளர்கள் புகார்களின்படி, 3,800க்கும் மேற்பட்ட வைப்பீடுகள் வாயிலாக, ரூ.47.68 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது தெரிவிக்கபட்டது. இந்த வழக்கின் விசாரணை காலகட்டத்தில் இயக்குநர்கள் நாராயணன், ராஜரத்தினம், ராமசாமி ஆகியோர் உயிரிழந்தனர். தலைமறைவான இயக்குனர் அப்பாதுரையை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.
வழக்கு விசாரணை, சென்னையில் நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர்கள் டி.பாபு ஆஜராகி வாதாடி வந்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.கருணாநிதி இன்று தீர்ப்பளித்துள்ளார்.
அதில், "இயக்குநர் சுபிக்ஷா சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகளும், இயக்குநர் ஸ்ரீவித்யாவுக்கு 4 ஆண்டுகளும், மற்ற இயக்குநர்கள், ஊழியர்களுக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. அத்துடன் ரூ.191 கோடியே 98 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமாகவும் விதிக்கப்படுகிறது. இதில் ரூ.180 கோடியை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு வழங்க உத்தரவிடுகிறேன்" என்று தீர்ப்பளித்துள்ளார்.

அதேபோல நிதி நிறுவன இயக்குநர் ராகவன், மோகன் ராமசாமி ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதால் அவர்களை விடுதலை செய்வதாகவும், இறந்த மூவரின் மீதான வழக்கு கைவிடப்படுவதாகவும் நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
அதிக வட்டி தருவதாக 587 பேரிடம் ரூ.47.68 கோடி மோசடி செய்த நிதி நிறுவன இயக்குநருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணனை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications