களத்தில் கனிமொழி.. திமுக தேர்தல் வாக்குறுதிகள் என்ன? இன்று மதுரையில் தேர்தல் அறிக்கை குழு மீட்டிங்
சென்னை: எம்பி கனிமொழி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு இன்று மதுரையில் ஆலோசனை நடத்துகிறது.
அரசியல் கட்சிகள் 2024 மக்களவைத் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் நிலையில் திமுகவும் அந்த பணிகளை முடுக்கிவிட்டு இருக்கிறது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழு, தேர்தல் வியூகங்களை வகுக்கும் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு என திமுக பல்வேறு குழுக்களை அமைத்து பணிகளை தொடங்கி இருக்கிறது.

குறிப்பாக தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு தமிழ்நாடு முழுவதும் பயணித்து பொதுமக்கள், கட்சி நிர்வாகிகளை சந்தித்து அடிப்படை தேவைகள், கோரிக்கைகள் குறித்து கருத்து கேட்டு வருகிறது. அந்த கருத்துக்களை பரிசீலனை செய்து அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கைகளை தயாரிக்க உள்ளது.
திமுக மூத்த தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, திமுக எம்.எல்.ஏக்கள் சி.வி.எம்.பி.எழிலரசன், கோ.வி.செழியன், எழிலன், எம்பிக்கள் எம்.எம்.அப்துல்லா, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், சென்னை மேயர் பிரியா ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்று இருக்கின்றனர். இந்த குழு கடந்த 5 ஆம் தேதி தூத்துக்குடியில் கருத்துக் கேட்பு பயணத்தை தொடங்கியது. வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி சென்னையில் இந்த பயணத்தை குழு நிறைவு செய்கிறது.
இந்த நிலையில் இன்று மதுரை பாண்டிகோயில் அருகே தனியார் திருமண மண்டபத்தில் கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துகிறது. இது குறித்து மதுரை மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி மற்றும் எம்.எல்.ஏ. மணிமாறன் வெளியிட்ட அறிவிப்பில், "இக்குழுக்கூட்டத்தில் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் இளங்கோவன், விவசாய அணி செயலாளர் விஜயன், சொத்து பாதுகாப்பு குழு செயலாளர் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்ட தொழில் துறையினர், மருத்துவர்கள், கல்வியாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், சிறு குறு தொழில் முனைவோர்கள், மாணவர்கள், சங்கங்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் கோரிக்கை மனுக்களை பெற உள்ளனர். இதில் அனைவரும் பங்கேற்று பயனடைய வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications