2026 தான் சரியான நேரம்.. திராவிடக் கட்சிகளை அடியோடு ஒழிப்பேன்.. அண்ணாமலை சபதம்
சென்னை: திராவிட அரசியலை அடியோடு ஒழிக்க 2026 தேர்தல்தான் சரியான தருணம். திமுகவுடன் பாஜக எப்போதும் கூட்டணி வைக்காது. இரண்டு திராவிட கட்சிகளையும் இங்கிருந்து அகற்றவே நான் மாநிலத் தலைவராக வந்துள்ளேன் எனக் கூறியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
தமிழக பாஜக சார்பில் சென்னையில் 'தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்' என்ற தலைப்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, நாராயணன் திருப்பதி, மாநில செயலாளர்கள் சுமதி வெங்கடேசன், கராத்தே தியாகராஜன், பிரமிளா சம்பத், முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி, நடிகை குஷ்பு, அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுப் பேசினர்.

இந்தக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், திராவிடக் கட்சிகள் 70 ஆண்டுகளாக தமிழகத்தை சின்னாபின்னமாக்கி உள்ளன. காமராஜர், எம்ஜிஆர் இருவரும் நேர்மையான ஆட்சியை கொடுத்தனர். காமராஜர், எம்.ஜி.ஆருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழ்நாட்டை சீரழித்து விட்டனர். தற்போது தமிழகம் பின்னோக்கி செல்கிறது. தமிழகத்தில் மட்டும்தான் ஒரு குடும்பத்துக்காக வேலை செய்கிறார்கள்.
திமுக ஆட்சியில், தமிழகம் பொருளாதாரத்தில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், அடுத்த 8 ஆண்டுகளில், தமிழகம் ஆறாவது இடத்துக்குத் தள்ளப்படும். உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆனால் திமுக அரசு, ஒரு குடும்பத்துக்காக மட்டுமே சிந்தித்து வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டுமென்று, திமுக அமைச்சர்கள் விரும்புகிறார்கள். அப்போதுதான், அவர்கள் தங்கள் வாரிசுகளைப் பதவியில் அமர்த்த முடியும். இதுதான் திராவிட மாடல். அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு போன்றோர் இருக்கும்போது, அரியணை உதயநிதிக்கு சென்றால் கலவரம் வெடிக்கும் என்பதை ரஜினிகாந்த் தனது பேச்சில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
திமுகவினர் பழநியில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். சனாதன தர்மத்தை வேரறுப்போம் எனக் கூறியவர்கள், பழநிக்கு பால்காவடி எடுப்பதற்கு பதிலாக, அரசியல் காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ் கலாச்சாரத்தை சீரழித்தவர்களை முருகன் தண்டிப்பார்.
பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால், சொந்த பலத்தில் நிற்க வேண்டும். நமக்கு திமுக, அதிமுக இருவரும் எதிரிகள்தான். எடப்பாடி பழனிசாமி என்னைப் பற்றியும், கட்சியை பற்றியும் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். முன்னொரு காலத்தில் சிலுவம்பாளையத்தில் நடந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் பின்னர் திமுக அமைச்சரின் தயவால் அந்த வழக்கை உடைத்து சிலுவம்பாளையம் பஞ்சாயத்து தேர்தலில் நின்று தோற்றவர்தான் இந்த பழனிசாமி. அதன்பிறகு தவழ்ந்து வந்து முதல்வர் ஆகியிருக்கிறார். எனவே பழனிசாமி என்னை பற்றி விமர்சிக்க தகுதி இல்லை.
கூட்டணிக் கட்சி தலைவராக கூட எடப்பாடி பழனிசாமியை நான் ஏற்றது இல்லை. பழனிசாமி எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். திராவிட கட்சிகளை அகற்ற பாஜகவால் மட்டுமே முடியும். திராவிட அரசியலை அடியோடு ஒழிக்க 2026 தேர்தல்தான் சரியான தருணம். திமுகவுடன் பாஜக எப்போதும் கூட்டணி வைக்காது. 2024 தேர்தலில் ஒரு மாற்றுசக்தியாக பாஜக நிரூபித்துள்ளது.
தமிழ்நாட்டில் எப்போதும் பாஜகவிற்கும் திமுகவுக்கும் உறவு இருக்காது. நமக்கு திமுக, அதிமுக இருவருமே எதிரிகள் தான். இரண்டு திராவிட கட்சிகளையும் இங்கிருந்து அகற்றவே என்னை மாநில தலைவராக நியமித்து உள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி முதல் ஊராட்சி வரை 1 லட்சத்து 12 ஆயிரம் இடங்களில் பாஜக தனித்து நிற்கும். வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடங்குகிறது. அன்றைய தினம் தமிழகத்தில் 10 லட்சம் பேரையாவது கட்சியில் சேர்க்க வேண்டும். 2 மாதத்தில் 1 கோடி பேரை உறுப்பினர்களாக சேர்ப்பது என்ற இலக்கை எட்ட வேண்டும்." எனப் பேசியுள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications