பிரதமர் வேட்பாளர்.. வடஇந்தியாவில் பிராண்ட் செய்யப்படும் விஜய்.. கடுப்பான ராகுல் காந்தி?
சென்னை: விஜய்யை நம்பி தவெக உடன் கூட்டணி வைத்தது காங்கிரஸ் கட்சிக்கே எதிராக திரும்பி உள்ளதாம். விஜய்யின் எழுச்சியை பார்த்து ராகுல் காந்தி கடுமையாக அப்செட் ஆகி உள்ளாராம்.
தேசிய அரசியலில் காங்கிரஸ் மேலிடம் வகுத்த கணக்குகள் ஒவ்வொன்றாகத் தலைகீழாக மாறத் தொடங்கியுள்ளன. இந்தியா கூட்டணியில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலினின் செல்வாக்கு ராகுல் காந்தியை பின்னுக்கு தள்ளுவதாக காங்கிரஸ் தரப்பில் நீண்டகாலமாக ஒரு புகைச்சல் இருந்துவந்தது.

2024 மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளையும் கைப்பற்றி, மோடி-ஷா கூட்டணிக்குத் தென்முனையில் இருந்து சிம்மசொப்பனமாக விளங்கிய ஸ்டாலின், தேசியக் கூட்டணியின் தவிர்க்க முடியாத முகமாக மாறினார். இந்திய கூட்டணியின் தேசிய முகமாக ராகுலை விட ஸ்டாலினே முன்னிலையில் இருந்தார்.
திமுகவின் இந்த அதீத ஆதிக்கத்தால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு சிறிய கட்சியாகவே சுருங்கிப்போனது.. தேசிய அளவிலும் ராகுலுக்கு பெரிய முகம் இல்லாமல் போனதாக அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி கருதியது.
இதன் காரணமாகவே ராகுல் - ஸ்டாலின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது தமிழக அரசியலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து திமுக உடன் கூட்டணியை முறித்துக்கொண்டு தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துக்கொண்டது.
ஆனால் ஸ்டாலினின் நிழலில் இருந்து விடுபட்டு, புதிய கூட்டணிக் கணக்கு மூலம் தென் இந்தியாவில் தனது இருப்பைத் தக்கவைக்க ராகுல் காந்தி போட்ட திட்டம் தற்போது புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது.
வட மாநிலங்களை நோக்கிப் பாயும் தவெகவின் வியூகம்
தமிழகத்தில் ஆட்சியமைத்த சில மாதங்களிலேயே, விஜய் தலைமையிலான தவெக எடுத்துவரும் தேசிய அளவிலான முன்னெடுப்புகள் காங்கிரஸ் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வெறும் மாநில அளவிலான ஆட்சியாக மட்டுமே தவெகவை மட்டுப்படுத்த விஜய் தரப்பு தயாராக இல்லை என்பதையே தற்போதைய நகர்வுகள் காட்டுகின்றன.
குறிப்பாக, தவெகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் அவருக்கு நெருக்கமான ஐடி விங் அமைப்புகள் சில விஜய்யை வடஇந்தியாவில் பிராண்டு செய்து வருகின்றனர். இந்தி பேசும் வட மாநிலங்களிலும் பெருநகரங்களிலும் செல்வாக்கு மிக்க இன்ஃப்ளூயன்சர்கள் மூலம் ஒரு பிரம்மாண்ட டிஜிட்டல் பிம்பத்தை கட்டமைத்து வருகிறது.
ஊழலற்ற, மதச்சார்பற்ற, இளைஞர்களை ஈர்க்கும் ஒரு மாற்றுத் தலைவராக விஜய்யை முன்னிறுத்தும் திட்டமிட்ட பிரச்சாரங்கள் தேசிய அளவில் தீவிரமடைந்துள்ளன.
2029 பிரதமர் வேட்பாளர் ரேஸில் விஜய்?
இதன் தொடர்ச்சியாக, தவெக சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சியின் முக்கிய ஆலோசகரான ராதன் பண்டிட் உள்ளிட்டோரும் விஜய்யை 2029-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் என்று வெளிப்படையாகப் பேசத் தொடங்கியுள்ளனர்.
வட இந்தியாவில் பாஜகவை வீழ்த்தும் அளவுக்கு விஜய்க்கு பான்-இந்தியா அளவில் ஒரு கவர்ச்சிகரமான பிம்பம் உள்ளதாகவும், காங்கிரஸின் வழக்கமான முகங்களைவிட விஜய் போன்ற ஒரு புதிய முகம் தேசிய அளவில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்றும் ராதன் பண்டிட் தரப்பு அழுத்தமாக முன்வைத்து வருகிறது.
இந்த நகர்வு ராகுல் காந்தியின் தேசியத் தலைமையை, அவரின் பிரதமர் ஆசையைப் உரசிப் பார்க்கத் தொடங்கியுள்ளது. பாஜகவுக்கு எதிரான தேசிய கூட்டணியின் ஒற்றை முகமாக ராகுல் காந்தியை நிலைநிறுத்த நினைத்த காங்கிரஸ் தலைமைக்கு, விஜய்யின் இந்த அதிரடி தேசிய அரசியல் புதிய முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.
ராகுல் காந்தியின் மௌனமும் தமிழக காங்கிரஸின் தர்மசங்கடமும்
இந்த விவகாரத்தில் என்ன எதிர்வினை ஆற்றுவது என்று தெரியாமல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் அகில இந்தியத் தலைமையும் கடுமையான தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளன. தமிழகத்தில் தவெக கூட்டணியில் அங்கம் வகிப்பதால், விஜய்யின் தேசிய ஆசைகளை பகிரங்கமாக எதிர்க்கவும் முடியாமல், அதேநேரம் ராகுல் காந்தியின் பிரதமர் கனவை விட்டுக் கொடுக்கவும் முடியாமல் காங்கிரஸ் தலைவர்கள் தவித்து வருகின்றனர்.
வட மாநிலங்களில் பரவி வரும் விஜய் அலையைக் கட்டுப்படுத்துவது தற்போதைய சூழலில் காங்கிரஸுக்கு எளிதான காரியமாகத் தெரியவில்லை. ஸ்டாலினின் ஆதிக்கத்தைத் தவிர்க்க நினைத்து விஜய்யுடன் கைகோர்த்த ராகுல் காந்தி, இப்போது அதைவிடப் பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
விஜய்யின் இந்த அரசியல் மூவ் காரணமாக 2029-ஐ நோக்கிய களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் காங்கிரஸ் மற்றும் தவெக இடையே ஒரு மறைமுக அதிகாரப் போட்டியாக உருவெடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications
