பேனா நினைவு சின்னம்.. கருத்துக் கேட்பு கூட்டத்தில் 22 பேர் ஆதரவு.. எதிர்ப்பு எவ்வளவு தெரியுமா?
பேனா நினைவு சின்னம் தொடர்பாக நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தின் அறிக்கை வெளியாகியுள்ளது.
சென்னை: பேனா நினைவு சின்னம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் 22 பேர் ஆதரவும், 12 பேர் எதிர்ப்பும் தெரிவித்ததாக கூட்ட நிகழ்வுகள் தொடர்பான குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி சீமான், ஆம் ஆத்மி, பாஜக மீனவர் பிரிவு, மே 17 இயக்கம், சமூக செயற்பாட்டாளர் முகிலன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது.

பேனா நினைவு சின்னம்
இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக பொதுமக்களின் கருத்தை கேட்க அரசு முடிவு செய்தது.

கருத்துக்கேட்புக் கூட்டம்
இதனையொட்டி பேனா நினைவு சின்னம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த ஜனவரி 31ம் தேதி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். அதேபோல் பாஜக, ஆம் ஆத்மி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சீமான் ஆவேசம்
இந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், பேனா நினைவு சின்னம் அமைத்தால் 13 மீனவ கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள். உங்கள் கூச்சலுக்கு எல்லாம் பயப்படமாட்டேன். மாற்றுக்கருத்து கூறினாலே கூச்சலிடுவது அநாகரீகம். பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு அல்ல. கடலில் வைக்கவே எதிர்க்கிறோம். கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம். கடலில் பேனாவை வைத்தால் ஒரு நாள் வந்து உடைப்பேன் என்று ஆவேசமாக பேசினார்.

12 பேர் எதிர்ப்பு
இதனைத் தொடர்ந்து பாஜக, ஆம் ஆத்மி, பாமக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் பேனா நினைவு சின்னம் கடலில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கருத்துக் கேட்பு கூட்ட நிகழ்வுகள் தொடர்பாக குறிப்புகளை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தயார் செய்துள்ளது. அதில் 34 பேரின் கருத்துகள் இடம்பெற்றுள்ளது. அதன் விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்ட நிகழ்வு அறிக்கையின்படி பேனா நினைவுச் சின்னம் அமைக்க 22 பேர் ஆதரவும், 12 பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். அதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி சீமான், ஆம் ஆத்மி, பாஜக மீனவர் பிரிவு, மே 17 இயக்கம், சமூக செயற்பாட்டாளர் முகிலன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications