ஆத்தீ.. 8 மாதத்தில் 3.60 லட்சம் பேருக்கு தெருநாய்க் கடி.. தமிழ்நாட்டில் 22 பேர் ரேபிஸ் நோயால் பலி!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 8 மாதங்களில் ரேபிஸ் நோயால் 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், இந்த ஆண்டில் மட்டும் 3.60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தமிழ்நாட்டில் தெரு நாய்க் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சமீபகாலமாக தெருநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நாய்க்கடிகளைத் தடுப்பதற்கும், நாய் இனப்பெருக்கத்தை குறைக்கவும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தெருநாய்களுக்கு உணவளிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் உணவளிப்பதற்கான கூடங்களை உள்ளாட்சி அமைப்புகள் ஒதுக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று உணவளிக்கும் கூடங்களை உருவாக்குவதற்கான பணிகளைத் தொடங்குவதில் சென்னை மாநகராட்சி அலட்சியமாக செயல்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
அண்மையில் சென்னையில் தெருநாய் கடித்து ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பலியாகியுள்ளார். சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் முகமது நஸ்ரூதீன் (50). இவர் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் திருவல்லிக்கேணி பெசன்ட் சாலையில் உள்ள மீர்சாகிப்பேட்டை மார்க்கெட் அருகே தெருநாய் ஒன்று முகமது நஸ்ருதீனின் முழங்கால் பின்புறம் கடித்துள்ளது.
இதையடுத்து அவர் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அங்கு அவருக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் முகமது வீட்டிற்கு வந்துவிட்டார். இந்த நிலையில் பின்னர் கடந்த 12 ஆம் தேதி முகமது நஸ்ருதீனுக்கு காய்ச்சல் வந்ததால், மீண்டும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அப்போது அவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் முகமது நஸ்ருதீனை உடனடியாக தனி அறையில் வைத்து சிகிச்சை மேற்கொண்டு வந்தனர். ஆனால், அவருக்கு நோயின் வீரியம் அதிகரித்து சாப்பிட முடியாமலும், தண்ணீர் குடிக்க முடியாமலும் அவதிக்குள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் செப்.13 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி முகமது நஸ்ருதீன் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் ராயப்பேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ் ஹவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் தெரு நாய்களை கட்டுப்படுத்த தவறியதால் தான், முகமது நஸ்ரூதீன் ரேபிஸ் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். தெருநாய்களைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 8 மாதங்களில் ரேபிஸ் நோயால் 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், இந்த ஆண்டில் மட்டும் 3.60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நாய்க் கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தெருநாய்க்கடிகளைத் தடுப்பதற்கும், நாய் இனப்பெருக்கத்தை குறைக்கவும் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பொது சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. நாய் கடித்த இடத்தை உடனே சோப்பு, சுத்தமான நீர், கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும், நாய் கடித்த காயத்தில் மிளகாய், கடுகு எண்ணெய் போன்ற எதையும் தேய்க்கக் கூடாது; நாய் கடித்தவுடன் ரேபிஸ் தடுப்பூசியின் அனைத்து தவணைகளையும் செலுத்த வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications