வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!
சென்னை: தமிழ்நாட்டில் 2016 ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வைகோவின் முயற்சியால் மக்கள் நலக் கூட்டணி என்ற மூன்றாவது அணி உருவானது. அது திமுகவின் வெற்றி வாய்ப்பை எந்தளவுக்குப் பாதித்தது என்பதை அறிவோம்.
அண்ணா தலைமையிலான திமுக1967இல் ஆட்சிக்கு வந்த காலந்தொட்டு, திராவிடக் கட்சிகளே தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்டு வருகின்றன. அதற்கு மாற்று இல்லை என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. இந்த இருமுனைவாத அரசியலை மீறி, 2016 சட்டமன்றத் தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 'மக்கள் நலக்கூட்டணி'யை கட்டமைத்தார். தேர்தலுக்கு முன் பல மாதங்களாக இதற்கான முயற்சியை அவர் முன்னெடுத்தார். அவர் விரித்த வலையில் விசிக, சிபிஎம், சிபிஐ, தாமாக ஆகிய கட்சிகள் முதலில் குதித்தன. அதைப் பலரும் தற்கொலை முடிவு என்றே விமர்சித்தனர்.

காரணம், அதிமுக ஆட்சியை அகற்றுவதற்கு உதவாமல், மீண்டும் ஆளும் கட்சியே ஆட்சிக் கட்டிலில் அமர இது பாதை அமைத்துத் தருகிறது என்றே பேசினர். அதனால், அதிமுகவின் 'பீ டீம்' ஆக வைகோ செயல்படுகிறார். ஆளும் கட்சியை விமர்சிக்காமல் திமுகவை அவர் விமர்சிப்பதிலேயே அவரது உள்நோக்கம் தெளிவாகிறது என்றனர் அரசியல் விமர்சகர்கள்.
ஆனால், "ஆளும் கட்சியை வீட்டுக்கு அனுப்புவதே எங்கள் திட்டம். மாறி மாறி இந்த இரண்டு கட்சிகளும் ஆண்டு ஊழலில் ஊறிப்போய்விட்டன. இதற்கு மாற்றான அணி தேவை" என்றார் வைகோ.
வைகோ வீழ்ந்த வரலாறு
மதிமுக முதன்முதலாக 1996இல் 177 இடங்களில் தனி அணியாகக் களம் கண்டது. 2001இல் மீண்டும் 211 இடங்களில் தனியாக நின்றது. ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அயர்ந்துபோன வைகோ 2006இல் அதிமுக அணியில் 35 இடங்களில் நின்றார். திமுக எதிரியான ஜெயலலிதா அவருக்கு நண்பனானது இயற்கை. 2011இல் இறுதியில் ஜெயலலிதா அணியிலிருந்து வஞ்சகமாக வெளியேற்றப்பட்டதாகக் கூறிய வைகோ, வேறு வழியின்றி தேர்தலைப் புறக்கணித்தார். அவருக்குப் போக்கிடமில்லை.
அரசியலில் தனிமரமாகிவிட்டோம் என உணர்ந்த அவர், மூப்பனார் மூலம் தேர்தல் பாதைக்குத் திரும்பி, திமுக சின்னத்தில் நின்று முதன்முதலாகச் சட்டமன்றத்திற்குள் நுழைந்த திருமாவளவனை, ஈழ ஆதரவு கருத்தியல் மூலம் தன்வசப்படுத்தி மக்கள் நலக் கூட்டணிக்குள் கொண்டுவந்தார். அதை உணரக்கூடிய சக்தி அன்று திருமாவளவனுக்கு இல்லை என்று சிலர் கருதினர்.
ஈழப் பிரச்சனையில் வைகோவின் நேரெதிர் நிலைப்பாட்டிலிருந்த இடதுசாரிகளை 'குறைந்த பட்ச செயல்திட்டம்' என்ற வரைவு திட்டத்தில் பேசி உள்ளே இழுத்தார் வைகோ. அதாவது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஈழமக்களைப் படுகொலை செய்த இலங்கை அரசு மீது சர்வதேச நீதிமன்ற விசாரணை நடத்துவது என்பது செயல்திட்டமானது. அதில், இடதுசாரிகள் ஒன்றுபட்டன.
ஜெயலலிதா கூட்டணியில் இடம்பெற்று எதிர்க்கட்சி தலைவர் என்ற அரசியல் வளர்ச்சியைப் பெற்றிருந்த விஜயகாந்த்தை, இந்தக் கூட்டணிக்குள் கொண்டுவர வைகோ முயன்றார். 'மக்கள் நலக் கூட்டணிக்கு யார் முதல்வர் வேட்பாளர்?' என திமுக தேரை இழுத்துத் தெருவில் விட்டது. 'குறைந்தபட்ச செயல்திட்டம்தான் முதல்வர்; தனிப்பட்ட ஒருவரை முன்னிறுத்தப்போவதில்லை" என்ற வைகோ இறுதியில் தேமுதிகவை உள்ளே அரவணைத்து 'விஜயகாந்த்தான் கூட்டணிக்கு முதல்வர் வேட்பாளர்' என்றார்.
அந்தக் கூட்டணி பலத்தைத் தாங்கும் சக்தி விஜயகாந்த் உடலுக்கு அன்றைக்கு இல்லை. அவர் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். அவர் ஜெயலலிதாவுடன் மோதல் போக்கை மேற்கொண்ட போதே அவரது பலம் முக்கால்வாசியாகக் குறைந்தது. தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களைப் பிரித்து அக்கட்சியை பலத்தைச் சரித்தார் ஜெயலலிதா.
விசிக, மதிமுக, தேமுதிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ, தாமாக ஆகிய இரண்டாம் கட்டத்தலைவர்கள் அனைவரும் திமுகவைப் புறக்கணித்ததால் கருணாநிதி நிலை கவலைக்கிடமானது. அவர், "கூட்டணிக்கான கதவு திறந்தே உள்ளது. யார் வேண்டுமானாலும் வரலாம்" எனக் கூறும் அளவுக்கு மோசமானது.
2006இல் தனியாகக் களம் கண்ட தேமுதிகவில் விருத்தாசலம் தொகுதி மட்டுமே விஜயகாந்த்திற்கு (61,337 வாக்குகள். அதாவது 40.42%) கைக்கு வெற்றிக்கனியாக எட்டியது. அடுத்து 2011 அவர் அதிமுக உடன் இனைந்து ரிஷிவந்தியத்தில் நின்றதால், அவர் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு உயர்ந்தார். அவரை 2016இல் வைகோ மேலும் கீழே இழுத்தார். இம்முறை உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட அவர் வைப்புத்தொகை இழந்து மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
திருமா சொன்ன பாம்பு கதை
2006 முதல் 2011 வரையான அதிமுக ஆட்சிக்காலத்தில் குதிரை பேர அரசியல் தலை தூக்கியது. திமுக அண்ணா சாலையில் கட்டி திறந்த புதிய தலைமைச் செயலகத்தை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையாக மாற்றினார் ஜெயலலிதா. அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் திருமண மண்டபமாக மாற்ற முயன்றார். திமுக நீதிமன்றத்தை நாடியது. சென்னையில் பெருவெள்ளச் சேதத்தால் மக்கள் அழிவைச் சந்தித்தனர். ஆகவே, ஜெயலலிதா ஆட்சிக்கே வரமுடியாது என மக்கள் கொத்து பேசினர். தலைநகரில் அவருக்கு எதிரான அலை வீசியது. அதன் தீவிரத்தை மக்கள் நலக் கூட்டணி மங்கச் செய்தது.
தொடக்கம் என்னவோ உற்சாகம் மிகுந்ததாக இருந்தது. மதுரையில் கூடிய 'மாற்று அரசியல் எழுச்சி மாநாட்டில்' 5 லட்சம் பேர் பங்கேற்றதாகவும் 25 ஆயிரம் வானங்கள் வந்ததாகவும் ஒரு புள்ளிவிவரத்தைச் சொன்னார் வைகோ. அங்கு அவர் மாற்று அரசியல் பேசவில்லை. அரசியலில் மூத்தவர் என்று கூட கருதாமல் கருணாநிதியை வசைபாடினார். திருமாவளவன், அதிமுக, திமுகவை உவமை காட்டி பேசிய, 'கண்ணாடி விரியன், கட்டுவிரியன்' பாம்புக் கதை பெரிய சர்ச்சையானது. தவறாக தன் வாதத்தைப் புரிந்துகொண்டதாக வருத்தம் தெரிவித்து அறிக்கைவிட்டார் அவர்.
பாஜகவை விமர்சித்து 'விஷப் பாம்புகளை விரட்டி அடிப்போம்' என்று ஒரு பக்க விளம்பரம் கொடுத்தாரே கருணாநிதி? அவர் பின்பு ஏன் பாஜக கூட்டணிக்குள் வந்தார்? அப்போது அவர் பாம்பு என்றது சரியா? என எதிர்வாதம் செய்தார் வைகோ.
ஆனால் தேர்தல் முடிவுகள் 'மக்கள் நலக் கூட்டணி' என்பது ஜெயலலிதாவின் பி டீம் என்பதை நிரூபித்தது. 25 தொகுதிகளுக்கு மேல் திமுகவுக்கும் அதிமுகவுக்குமான வெற்றிக்கான இடைவெளி மிகக் குறைந்த அளவிலேதான் இருந்தன. அதற்குக் காரணம் மக்கள் நலக் கூட்டணி பிரித்த வாக்குகள். இதுபோக 50க்கும் மேலான தொகுதிகளில் திமுகவின் வெற்றியை பாமக வரவிடாமல் தடுத்தது.
'மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என பாமக தனி முழக்கத்தை முன்வைத்து பரப்புரை செய்தது. இதன் 5.3% வாக்குகள் திமுக பக்கம் சென்றிருந்தால் ஆட்சி மாற்றம் உறுதியாகி இருக்கும். அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்குப் பிறகு மூன்றாவது கட்சியாக பாமக தன்னை தக்கவைத்தது.
மதுரை போன்ற நகரப் பகுதிகளில் மூன்றாவது அணிக்கு வாக்குகள் கிடைத்த அதே வேளையில் டெல்டா, தென்மாவட்டங்களில் சொல்லிக் கொள்ளும் அளவு இது செல்வாக்கு பெறவில்லை. இறுதியில் செல்லாக் காசாக இந்த அணி அனைத்து தொகுதிகளிலும் தோற்றது. இந்த அணி 6.7% வாக்குகளைப் பெற்றது. திமுகவோ 39.4%, அதிமுகவோ 40.8% அளவு வாக்கு வங்கியை உயர்த்திக் கொண்டது.
மதிமுக கட்சித் தொடங்கியதிலிருந்து ஒருமுறை கூட சட்டமன்றத்திற்குள் வைகோவால் புகமுடியவில்லை. அவரது அரசியல் வியூகங்கள் யாவும் வீழ்ந்துபோயின.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் 'மக்கள் நலக்கூட்டணி'யை கலைத்ததாக அறிவித்தார் வைகோ. ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் வந்ததால், சிபிஎம் தனி வேட்பாளரை அறிவித்தது. எனவே 'போராட்டக் களத்தில் மக்கள் நலக் கூட்டணி தொடரும், தேர்தல் களத்தில் மக்கள் நலக் கூட்டணி கலைக்கப்பட்டது' என்றார் திருமாவளவன்.
எழுதியவர்: கடற்கரய்
-
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
2021 vs 2026: திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு முழு விவரம்! விசிக, தேமுதிக-வின் லாபம் என்ன? -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
விஜயகாந்த் வெற்றி பெற்ற அதே தொகுதி.. சட்டசபை தேர்தலில் களம் இறங்கும் பிரேமலதா? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications