திடீரென சென்னையில் கூட்டம் கூட்டமாக குழந்தைகள் மருத்துவமனையில் காய்ச்சலால் அட்மிட்.. மா.சு. விளக்கம்
சென்னை: தமிழகத்தில் 282 குழந்தைகள் இன்புளுன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காலக்கட்டமான கடந்த 2 ஆண்டுகளில். பொதுமக்கள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற நடவடிக்கைகள் அரசு சார்பில் கடுமையாக்கப்பட்டு வந்தன. இதனால், அந்தக் காலக்கட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பரவாமல் குறைந்திருந்தது. தற்போது இந்த நடைமுறைகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால், வைரஸ் காய்ச்சல் போன்ற காய்ச்சல் நோய்கள் மெல்ல மெல்ல தலைதூக்க ஆரம்பித்துள்ளன.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை மற்றும் வெயில் என மாறுபட்ட சீதோஷ்ணம் நிலவி வருவதால், வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இந்த காய்ச்சல் வேகமாக பரவுகிறது. அந்த வகையில், சென்னை எழும்பூர் மருத்துவனையில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டனர். 300 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், கூடுதலாக படுக்கைகள் அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை மட்டுமின்றி, மதுரை, திருச்சி, நெல்லை போன்ற மாவட்டங்களிலும் குழந்தைகளுக்கு இதுபோன்ற வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் 282 குழந்தைகள் இன்புளுன்ஸா என்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சென்னை எழும்பூர் குழதைகள் நல மருத்துவமனையில் 121 குழந்தைகள் சாதாரண காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 8 குழந்தைகள் டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 282 குழந்தைகள், இன்புளுன்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 13 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், டெங்கு காய்ச்சலால் தமிழகம் முழுவதும் 243 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவை ஒழிக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. தேவையான அளவு மருந்து அரசிடம் கையிருப்பில் உள்ளது.
வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்க அடிக்கடி கைகளை கழுவுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்ள வேண்டும். இதனால் வைரஸ் காய்ச்சல் வராமல் தடுக்க, பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தருமாறு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications