2026இல் விஜய்க்கு 2வது இடம்? அதிமுக வாக்குகள் சிதறும்? திருமாவளவன் ஓபன் டாக்
சென்னை: ஆதவ் அர்ஜுன் பேசியது தேவையற்ற பேச்சு என்று அவருக்குச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்று திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகும் விசிக தன் மீதான கவனத்தை அப்படியே தக்கவைத்து வருகிறது. மக்களவைத் தேர்தலில் அதிமுக பக்கம் பேரம் நடக்கிறது என்று பரபரப்பு நிலவியது. அதன்பின்னர் பொதுத் தொகுதி கேட்பதன் மூலம் மீடியாக்களின் கவனத்தை தன் பக்கம் தக்கவைத்து வந்தது.

இப்போது தேர்தல் முடிந்த பிறகு, மது ஒழிப்பு மாநாடு மூலம் திமுக ஆட்சிக்கு ஏதோ நெருக்கடி தருவதைப் போல ஒரு தோற்றத்தைக் கட்டமைத்தது. அப்படியே சர்ச்சை நீடித்து வந்த வேளையில், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் கனவு என ஆதவ் அர்ஜுன் மூலம் மறுபடியும் ஒரு கவன குவிப்பை விசிக நிலையாக தன் பக்கமே வைத்துக் கொண்டுள்ளது.
இந்தச் சலசலப்புக்கள் ஒரு பக்கம் விசிக மற்றும் திமுக கூட்டணிக்குள் விளங்கம் ஏற்படுத்தும் என்ற வாதம் வைக்கப்பட்டாலும் மற்றொரு பக்கம் திமுக அடுத்த சட்டமன்றத் தேர்தலில் கடந்த தேர்தலில் வழங்கிய அதே எண்ணிக்கையிலான தொகுதிகளைக் கொடுத்து சரிக்கட்டி விடலாம் என்ற நினைப்பில் இருந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையை மறைமுகமாக விசிக கொடுத்து வருகிறது என்பதைப் பாமரர் கூட புரிந்துகொள்ள முடியும்.
இந்நிலையில்தான் ஆதவ் அர்ஜுன் சர்ச்சை பேச்சு குறித்து ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், "தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது. இப்போதே கூட்டணி பற்றியும் அதிகார பகிர்வு பற்றியும் பேசுவது தேவையற்றது. அதற்கு ஆதவ் அர்ஜுன், 'நான் திட்டமிட்டுப் பேசவில்லை. பலரும் கேள்வி எழுப்பியதால் நான் அதற்கு விளக்கம் அளித்தேன். எனக்கு உள்நோக்கம் இல்லை' என்றார். ஆக, நான் சொன்னதை அவர் ஏற்றுக் கொண்டார்.
அவர் நாங்கள் பேசியதைத்தான் பேசுகிறார். எங்கள் கொள்கையைத்தான் பேசுகிறார். ஆனால், எதை எப்போது பேச வேண்டும் என்ற இடம் பொருள் ஏவல் உள்ளது. ஆதவ் பேச்சுக்காக அவர் மீது ஆ.ராசா நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம் எனச் சொன்னது நிபந்தனை அல்ல. ஒரு பரிந்துரை. நாங்கள் 2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில்தான் தொடரப் போகிறோம். அதில் சந்தேகமே கிடையாது. விசிக வெளியேற வேண்டிய தேவை என்ன உள்ளது. பதவி, சீட்டு காரணம் என்றால் அதை நாங்கள் இரண்டாவது இடத்தில்தான் வைத்திருக்கிறோம்" என்று பேசி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய திருமா, "திமுக கூட்டணியைப் பலவீனப்படுத்தாமல் தடுப்பதே மிக முக்கியமான போராட்டமாக நான் பார்க்கிறேன். திமுக பாதுகாப்பதற்காக இதை நான் சொல்லவில்லை. அதிமுக தனியாக 2026இல் நிற்கப்போகிறது. பாஜக தனியாக நிற்கப்போகிறது. பாமகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை. விஜய் இப்போதுதான் கட்சி ஆரம்பித்து முதன்முதலாக தேர்தலில் நிற்கப்போகிறார். அவர் முதல் தேர்தலிலேயே கூட்டணிக்குச் செல்ல வாய்ப்பு இல்லை. எனவே தனித்துத்தான் தவெக நின்றாகவேண்டும். முன்பே நாதக தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துவிட்டது.
இப்படியான சூழலில் திமுக கூட்டணியைப் பலவீனப்படுத்த வேண்டிய பல வேலைகள் நடந்துவருகிறது. ஏன் திமுகவைப் பலவீனப்படுத்த வேண்டும். அதிமுகவை மிக எளிமையாகக் கையாள முடியும் என பாஜக நினைக்கிறது. அதிமுகவின் ஓட்டு வங்கி இப்போதும் பெரியதாகச் சிதறிவிடவில்லை. விஜய் வந்த பிறகு அதிமுக இளம் தலைமுறையினர் வாக்கு அணி மாறலாம் என ஒரு கணிப்பும் உள்ளது.
ஆனால், திமுக கட்டமைப்பு ரீதியாகவும் கூட்டணி ரீதியாகவும் வலுவாக உள்ளது பாஜகவுக்கு நெருக்கடியாக உள்ளது. 2026 மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்றவே முடியாது. அந்த அச்சம் பாஜகவுக்கு உள்ளது. திமுக கூட்டணி வென்றுவிட்டால், விஜய் இரண்டாவது அரசியல் சக்தியாக மாறலாம். அதுவும் பாஜகவின் வளர்ச்சியை தடுத்துவிடும். பாஜக ஆட்சிக்கு வருவது முடியாமல் போகும். அதற்கு வாய்ப்பே இல்லை" என்கிறார்.












Click it and Unblock the Notifications