தமிழக அமைச்சரவையில் இன்று 3 முக்கிய மாற்றங்கள்.. ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் இலாகா அளித்த ஸ்டாலின்!
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று 3 முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பொன்முடி மீண்டும் அமைச்சராகி உள்ள நிலையில் மேலும் 2 அமைச்சர்களின் போர்ட்ஃபோலியோ மாறியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் அவர் சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவிகளை இழந்தார்.

பொன்முடி அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த உயர்கல்வித்துறை இலாகாவானது, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு மாற்றப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு உயர்கல்வித் துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதேபோல, அமைச்சர் ராஜகண்ணப்பன் வசம் கூடுதலாக இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் துறை, கைத்தறித்துறை அமைச்சர் காந்திக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதுகுறித்த முதலமைச்சரின் பரிந்துரைக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கினார்.
இந்நிலையில், ஐகோர்ட் விதித்த தீர்ப்பையும், தண்டனையையும் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்ததால் மீண்டும் எம்.எல்.ஏ பதவியைப் பெற்றார் பொன்முடி. இதையடுத்து, பொன்முடியை அமைச்சராக நியமிக்க முதல்வர் பரிந்துரை செய்தும் ஆளுநர் ஏற்காத நிலையில், உச்ச நீதிமன்றம் தலையிட்டு, ஆளுநருக்கு கெடு விதித்தது.
இந்நிலையில், இன்று பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க அழைப்பு விடுத்தார் ஆளுநர் ரவி. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ரவி. அமைச்சராக பதவி ஏற்றுள்ள பொன்முடிக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம், பொன்முடி அமைச்சர் பதவியை இழந்ததால் அவர் வகித்து வந்த உயர்கல்வித்துறை, ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ராஜகண்ணப்பன் வசம் கூடுதலாக இருந்த உயர்கல்வித்துறை திருப்பி பெறப்பட்டு அது மீண்டும் பொன்முடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சர் காந்தி கவனித்து வந்த கதர் மற்றும் கிராம தொழில்கள் வாரியம் மீண்டும் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான ராஜகண்ணப்பன் கதர் மற்றும் கிராம தொழில்கள் துறையையும் இனி கவனிப்பார். அதேசமயம், அமைச்சர் காந்தி 3 மாதங்களுக்கு முன்பு இருந்ததைப் போல கைத்தறித்துறையை மட்டும் கவனிப்பார்.


Click it and Unblock the Notifications
