பதவியை விட்டு போங்க.. தமிழக தேர்தல் ஆணையருக்கு பிரஷர் போடும் முதல்வர் விஜய் அரசு.. ஷாக் பின்னணி
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் உள்ளாட்சி தேர்தல்களை நடத்தும் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்று ஐஏஎஸ் அதிகாரி ஜோதி நிர்மலாசாமியிடம் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பொறுப்பில் ஜோதி நிர்மலாசாமியை முந்தைய திமுக அரசு நியமனம் செய்த நிலையில் அவரை மாற்றம் செய்யும் வகையில் தவெக அரசு பிரஷர் போடுவதாகவும், அதன் பின்னணி குறித்தும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி செயல்பட்டு வருகிறார். 2002ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான இவர் கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த பொறுப்பில் நியமனம் செய்யப்பட்டார்.

இவர் 5 ஆண்டுகள் வரை இந்த பொறுப்பில் செயல்பட ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். இதன்மூலம் அவர் 2029 ம் ஆண்டு வரை இந்த பொறுப்பில் நீடிக்க முடியும். இந்த பொறுப்பு என்பது மிகவும் முக்கியமானது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது தான் இந்த தமிழக தேர்தல் ஆணையரின் பணியாகும்.
பதவி விலக அழுத்தம்
அதன்படி தற்போது தமிழக தேர்தல் ஆணையராக இருக்கும் ஜோதி நிர்மலா சாமியின் பதவிக்காலம் இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது. ஆனால் அவரை அந்த பதவியில் இருந்து விலக வேண்டும் என்று முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்தி தவெக ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து திமுக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட வாரியம் மற்றும் அரசு துறை சார்ந்த அமைப்புகளில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர்.
அதன்படி தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, தமிழ்நாடு தீயணைப்பு பிரிவு ஆணையராக இருந்த ஓய்வு டிஜிபி சங்கர் ஜிவால், தமிழ்நாட மின்சார ஒழுங்குமுறை ஆணையராக இருந்த ஆர் மணிவண்ணன் உள்பட இன்னும் பலர் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் திமுக ஆட்சிக்காலத்தில் இந்த பொறுப்பில் நியமனம் செய்யப்பட்ட நிலையில் தவெக ஆட்சி அமைந்ததால் ராஜினாமா செய்துள்ளனர்.
ராஜினாமாவை விரும்பாத அதிகாரி
அந்த வகையில் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பதவியை ஜோதி நிர்மலாசாமி ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ராஜினாமா செய்யவில்லை. மேலும் அவர் ராஜினாமா செய்யவும் விரும்பவில்லை. தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
'பெல்' நிறுவனத்திடம் இருந்து 50 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். அதுமட்டுமின்றி வார்டு மறுவரையறை செய்யும் ஆணையத்தின் தலைவராகவும் உள்ளார். வார்டு மறுவரையறை பணி என்பது தற்போது 27 மாவட்டங்களில் நடந்து வருகிறது. 4 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள், சில கிராம பஞ்சாயத்துகளும் இதில் அடங்கும். இதனால் இந்த பணியை முடிக்கும் வரை பதவியில் தொடர அவர் நினைக்கிறார்
அழுத்தம் கொடுப்பது ஏன்?
ஆனால் தவெக அரசு அதனை விரும்பவில்லை. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பொறுப்பில் இருந்து ஜோதி நிர்மலாசாமிக்கு பதில் தங்களுக்கு நெருக்கமானவரை நியமிப்பதில் உறுதியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தான் தற்போது ஜோதி நிர்மலாசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் மாநில தேர்தல் ஆணையர் பதவிக்கு அரசியலமைப்பு ரீதியாக பாதுகாப்பு உள்ளது. பிற ஐஏஎஸ் அதிகாரிகளை போல் இவர்களை மாநில அரசால் எளிதாக இடமாற்றம் செய்யவோ, நீக்கவோ முடியாது.உயர்நீதிமன்ற நீதிபதியை நீக்கும் முறைப்படியே இவரையும் நீக்க முடியும். அதேபோல் புதியவர்களை ஆளுநர் ஒப்புதலின்படி தான் நியமனம் செய்ய முடியும். இதனால் தான் ஜோதி நிர்மலா சாமியை தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தவெக அரசின் இந்த செயல் தற்போது பலரையும் அதிருப்திக்குள்ளாக்கி உள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதியை நீக்கும் நடைமுறையை பயன்படுத்துவதற்கு பதில் அதிகாரியை ராஜினாமா செய்ய வைக்க தவெக அரசு அழுத்தம் கொடுப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
யார் இவர்?
இவர் 2002ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் தமிழகத்தில் பல்வேறு துறைகளில் வெவ்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மணல் மாபியாவிற்கு எதிராக எடுத்த அதிரடி நடவடிக்கையால் மாநில அரசு சார்பில் கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. இந்த விருது பெற்ற ஒரேயொரு ஐஏஎஸ் அதிகாரி இவர் மட்டும் தான். இவருக்கே இந்த நிலையா? என அதிகாரிகள் நொந்து கொள்கின்றனர். மேலும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பதவிக்கு வரும் முன்பு இவர் தமிழக பத்திரப்பதிவு துறை செயலாளராக பணியாற்றி வந்தவர் என்பது கவனிக்கத்தக்கது.
உள்ளாட்சி தேர்தல் எப்போது?
தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள கிராம உள்ளாட்சி நிர்வாகங்களுக்கான பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முடிவடைந்தது. பிற மாவட்டங்களில் உள்ளவர்களின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 19ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதேபோல் அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் 1ம் தேதி நிறைவு பெறுகிறது. இதனால் அடுத்த ஆண்டு மொத்தமாக தேர்தல் நடத்த தவெக அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications