வீடு தேடி வரும் ஜாக்பாட் பணம்.. பெண்கள் + அரசு ஊழியர்கள் + மாணவர்கள்! தமிழக அரசு அடித்த 3 சிக்ஸர்கள்
சென்னை: தமிழ்நாடு அரசு 3 முக்கியமான அறிவிப்புகளை கடந்த 1 வாரத்தில் வெளியிட்டுள்ளது. மக்களுக்கு வீடு தேடி பணம் கொடுக்கும் விதமாக 3 அறிவிப்புகளை அரசு வெளியிட்டு உள்ளது. வீட்டு பெண்கள், அரசு ஊழியர்கள், விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவ, மாணவியருக்காக இந்த அறிவிப்பை ஆளும் திமுக வெளியிட்டு உள்ளது.
விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்கள்: தமிழ்நாட்டை சார்ந்த விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நல உதவிகள் பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டினை விளையாட்டின் தலைநகரமாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் மாநிலத்தில் அதிநவீன விளையாட்டு உட்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தவும், தமிழ்நாடு விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் விளையாட்டு சூழலை உருவாக்கிடவும் தமிழ்நாடு அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும், உரிய பயிற்சிகள் பெறவும் மற்றும் போட்டிகளில் பங்கேற்றிட தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்கிடவும் போதிய நிதிவசதி இல்லாத விளையாட்டு வீரர் / வீராங்கனைகளுக்கு தேவையான நல உதவிகள் வழங்கிடும் வகையில் "தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை" (Tamil Nadu Champions Foundation) உருவாக்கப்பட்டு 08.05.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டது.
விளையாட்டுத் துறை சிறப்பாக இயங்கிட நிதி ஆதாரம் என்பது மிக அவசியமான ஒன்றாகும். விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிடும் வகையில் "தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை" (Tamil Nadu Champions Foundation) தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த அறக்கட்டளையானது வருமானவரிச் சட்டம் 1961 ன் பிரிவு 12 AA மற்றும் 80G யின் கீழ் வரிவிலக்கு சான்று பெற்றுள்ளது. இந்த அறக்கட்டளையின் நிர்வாக நடைமுறைகளை சிறப்பாக செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசால் முதற்கட்டமாக 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை வழங்கியுள்ளார்கள். பல்வேறு பெருநிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட நிதியிலிருந்து தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் உதவித் தொகையாக ரூ.3,96,48,649/- (ரூபாய் மூன்று கோடியே தொண்ணூற்று ஆறு லட்சத்து நாற்பத்து எட்டு ஆயிரத்து அறுநூற்று நாற்பத்து ஒன்பது மட்டும்) வழங்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பெண்களுக்கு மேல்முறையீடு செய்யலாம்; 1000 ரூபாய் மகளிர் உரிமை திட்டத்தில் பெண்கள் தொடர்ந்து பயனாளிகள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதாவது இதுவரை பணம் கிடைக்காமல் விடுபட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்ய முடியும். அவர்களுக்கான கால அவகாசம் முடிந்துவிட்டது என்றே முதலில் கருதப்பட்டது.
ஆனால் கால அவகாசம் முடியவில்லை. அவர்கள் தொடர்ந்து மேல்முறையீடு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 27.03.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத்தொகை குறிந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 12,000/- உரிமைத்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது ஆகும் இந்த திட்டம்.
கடந்த மாதம் 15ம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த மாதமே 14 மற்றும் 15 தேதிகளில் பயனாளிகளுக்கு பணம் அனுப்பப்பட்டது. அதேபோல் இந்த மாதமும் வங்கிகள் விடுமுறை என்பதால் 15ம் தேதிக்கு பதிலாக 14ம் தேதியே பணம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டத்தில் மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டது.
அரசு ஊழியர்கள்: கடைசியாய் நேற்று அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை 42% இருந்து 46% உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்பால் மாநில அரசுக்கு 2546.16 கோடி செலவு ஏற்படும். இதன்மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர். 42% அகவிலைப்படி 01.07.2023 முதல் 46%ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications