சென்னையில் புது தலைவலி.. வீட்டு தனிமையில் இருப்பவர்களால் குடும்பத்தினருக்கு வேகமாக கொரோனா பரவுதாம்
சென்னை: தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இது குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்றைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், ஆக்டிவ் கேஸ்களும் 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
வைரஸ் பரவலைக் கையை மீறிச் செல்லாமல் இருப்பதைத் தடுக்க தமிழக அரசு இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது.

தலைநகர் சென்னை
குறிப்பாகத் தலைநகர் சென்னையில் தான் நிலைமை மிக மோசமாக உள்ளது. தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்பில் கிட்டதட்ட சரிபாதி சென்னையில் தான் உள்ளது. தலைநகர் சென்னையில் நேற்று ஒரே நாளில் 6186 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. பாசிட்டிவ் விகிதமும் அச்சமூட்டும் அளவுக்கு 15.5ஆக உள்ளது. தலைநகர் சென்னையில் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசு கடந்த டிச. இறுதியிலேயே மாநில அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.

நடவடிக்கை
இதையடுத்து வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு 2ஆம் அலை ஏற்பட்ட சமயத்தில் கொரோனா படுக்கைகளுக்கு சில இடங்களில் பற்றாக்குறை ஏற்பட்டது இதைக் கருத்தில் கொண்டு இந்த முறை தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ளவேண்டிய வழி காட்டு நெறிமுறைகளை நிலைமைக்கு ஏற்றவாறு அரசு வெளியிட்டு வருகிறது.

வீட்டுத் தனிமை
அதன்படி தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், அறிகுறி இல்லாதவர்கள், குறைவான பாதிப்பு இருப்பவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என பொதுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தீவிர கொரோனா பாதிப்பு உடையவர்கள், மூச்சுத் திணறல் கொண்டவர்கள், முதியவர்கள் ஆகியோர் மட்டுமே மருத்துவமனைகளில் அட்மிட் ஆனால் போதும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் மருத்துவ உதவி தேவைப்படுவோர்க்குச் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்படும்.

ஷாக் தகவல்
இந்நிலையில், கொரோனா பாதிப்பு தொடர்பாகச் சென்னை மாநகராட்சி நேற்று ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது சென்னையில் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 30 சதவீதம் பேர், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள்தான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத்தனிமையில் இருப்பவர்கள் முறையாக எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் பின்பற்றாமல் இருப்பதால் அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு வைரஸ் பாதிப்பு எளிதாகப் பரவுகிறது என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.

குடும்ப உறுப்பினர்கள்
எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரும் கட்டாயம் முககவசம் அணியவேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சென்னையில் வைரஸ் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், அதிகாரிகளின் இந்த கருத்து மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளைச் சென்னை மாநகராட்சி ஏற்கனவே தெளிவாக வெளியிட்டுள்ளது, பொதுமக்கள் அதை முறையாகப் பின்பற்றினாலே வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தலாம்.

வீட்டு தனிமை விதிமுறைகள்
வீட்டில் உள்ளவர்கள் உங்கள் அறையில் நுழையக் கூடாது.
சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும், மற்றவர்களிடம் தொடர்பு இல்லாதவாறு உணவைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
போதுமான அளவு தண்ணீர், பழரசம் குடிக்கவும், பிறரிடம் பேசுவதைத் தவிர்த்து விடுங்கள், மீறி தொடர்பு கொள்ள நேரிட்டால் சர்ஜிக்கல் அல்லது N95 முகக்கவசம் அணிந்து பேசுங்கள்.
போதிய ஓய்வும், தூக்கமும் அவசியம், சோர்வு ஏற்படுத்தும் செயல்கள் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

இதை பின்பற்றுங்கள்
அடிக்கடி சோப்பு உபயோகித்துக் குறைந்தது 20 நொடிகள் நன்கு தேய்த்து நன்றாக கைகளைக் கழுவுங்கள் அல்லது ஆல்கஹால் கலந்து கிருமி நாசினியை பயன்படுத்துங்கள்.
மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டும் சரியான நேரத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் துணிகள் மற்றும் பாத்திரங்களை நீங்களே சுத்தம் செய்யுங்கள், பொருட்களை மற்றவர்களிடம் பகிரக் கூடாது.
கழிவுகளைத் தனி பையில் சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
பல்ஸ், ஆக்சிமீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவையும், அபாய அறிகுறிகளையும் கண்காணிக்க வேண்டும்
சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள இந்த கொரோனா வழிகாட்டுதல்களைத் தனிமையில் இருக்கும் கொரோனா நோயாளிகள் முறையாகப் பின்பற்ற வேண்டும்.












Click it and Unblock the Notifications