35,000 மன்றங்கள்; 3 லட்சம் ரசிகர்கள்; சாதித்த விஜயகாந்த்! மீண்டு எழுமா தேமுதிக?
சென்னை: தேமுதிக உருவாக்கப்படுவதற்கு முன்பாக விஜயகாந்த் தனது அரசியல் பயணத்தை எப்படி படிப்படியாக முன்வைத்து முன்னேறி வந்தார்? அவரது வெற்றி, தோல்வி சொல்லும் பாடம் என்ன?
தேமுதிகவின் 20 ஆண்டு விழாவை மிக அமைதியாகக் கொண்டாடி முடித்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். கடந்த 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி தனது அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் விஜயகாந்த். அவர் மதுரை மாநகரில் இந்தக் கட்சியை முறைப்படி ஆரம்பித்தார். அவர் தனது கட்சிக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனப் பெயர் வைத்துள்ளதாகத் தெரிவித்தபோது பலரும் அதை விமர்சித்தனர். தேசியம் வேறு, திராவிடம் வேறு. இது என்ன கருவாட்டுச் சாம்பார் என அரசியல் விமர்சகர்கள் விளாசி எடுத்தனர்.

விஜயகாந்த் 2005இல் கட்சி அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கு முன்பே 2003 ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றங்களுக்கு எனத் தனிக் கொடியை அறிமுகம் செய்தார். சிகப்பு கருப்பு ஆகிய இரு வண்ணங்கள் இடையே மஞ்சள் வட்டத்தில் ஒரு தீச் சுடர் போட்ட கொடியை லியாகத் அலிகான் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது ஊடகங்கள் 'அரசியலில் களம் இறங்கும் கள்ளழகர்’ என்று தலைப்பிட்டு கட்டுரைகள் வெளியிட்டன. திமுக தொடங்கப்பட்டு 56 ஆண்டுகள் கழித்து தேமுதிக தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் இந்தப் புதிய கட்சி அப்படி என்ன மாற்றத்தைக் கொடுத்துவிடப் போகிறது என்று பேசியவர்கள் பலர். ஏனென்றால், சிவாஜி முதல் கொண்டு பல சினிமா பிரபலங்கள் அரசியல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அதை வைத்து விஜயகாந்த் வருகை மிக எளிமையாகவே எடைபோடப்பட்டது.
விஜயகாந்த் அப்பா அழகர்சாமி கடந்த 50 ஆண்டுகள் முன்பாக மதுரை நகர்மன்ற தேர்தலில் கவுன்சிலர் தேர்தலில் நின்று 7 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். அடுத்த தேர்தலில் மீண்டு அப்பாவைக் களம் இறக்கி, அவருக்காகப் பிரச்சாரம் செய்து 370 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவைத்தார் விஜயகாந்த். அப்போது அவர் சினிமா பிரபலம் இல்லை. வெறும் விஜயராஜ் ஆக இருந்தார். இதுதான் விஜயகாந்த் சந்தித்த முதல் தேர்தல் களம்.
அதைத் தொடர்ந்து சினிமா உலகில் நடிக்க வந்த விஜயகாந்த், 2000 வரை தன்னை ஒரு திமுக தொண்டனாகவும், கருணாநிதியின் விசுவாசியாகவுமே அடையாளப்படுத்திக் கொண்டார். 2003இல் விஜயகாந்த் ரசிகர் மன்ற கொடியை லியாகத் அலிகான் அறிமுகம் செய்த காலத்தில் மொத்தம் 35 ஆயிரம் விஜயகாந்த் ரசிகர் மன்றங்கள் இருந்தன. அன்றைய கணக்குப்படி 5 லட்சம் ரசிகர்கள் இவருக்கு இருந்தனர்.
பதிவு செய்த ரசிகர்களின் எண்ணிக்கையே 3 லட்சம் என ஒரு புள்ளிவிவரம் தெரிவித்தது. அந்தப் பலத்தில்தான் அவர் ரசிகர் மன்ற கொடியை வானத்தில் பறக்கவிட முடிவு செய்தார். இவர் ரசிகர் மன்றக் கொடியை அறிமுகம் செய்த காலகட்டத்தில் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை ஆட்டம் கண்டு இருந்தது. 2002இல் ஜெயலலிதா சிறைக்குச் சென்றார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக அறிவிக்கப்பட்டார். அதன்பின்னர் 2003இல் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தத் தொடங்கிய போது ஜெயலலிதா சிறையிலிருந்து மீண்டு மறுபடியும் முதல்வராக அமர்ந்தார்.
ஜெயலலிதாவின் சிறை வாழ்க்கை தமிழக அரசியலில் ஒரு தடுமாற்றத்தை உண்டாக்கியது. அதனைத் தொடர்ந்து விஜயகாந்த் தனக்கு ஒரு வாய்ப்பு உள்ளதாக நம்பத் தொடங்கினார். ஆகவே, 2005இல் அவர் அதிகாரப்பூர்வமாகக் கட்சியை அறிவித்தார். ஜெவின் அரசியல் தடுமாற்றம் ஏற்பட்ட காலத்தில் ரசிகர் மன்றங்களை வலுப்படுத்தி வந்த விஜயகாந்த்தை திமுக ஆட்சியில் நடந்த கோயம்பேடு திருமண மண்டபம் இடிப்பு விவகாரம் வேகம் எடுக்க வைத்தது. அவர் நேரடியாக திமுகவுடன் மோதினார்.
ஒருவகையில் இதை ஜெயலலிதா மறைமுகமாக ரசித்தார். இரண்டு முறை நடிகர் சங்கத் தலைவராகப் பதவி வகித்த விஜயகாந்த்துக்குக் கருணாநிதி மீது ஒரு பாசம் நிலவியது. அவர் கருணாநிதிக்காக விழா எடுத்தார். அப்படி இருந்தும் அவரது மண்டபம் இடிக்கப்பட்ட விவகாரம் அவரை ஆவேசம் கொள்ள வைத்தது. இதனிடையே 2003க்கு பிற்பாடு விஜயகாந்த் நடித்த கஜேந்திரா, சுதேசி, அரசாங்கம், தர்மபுரி, விருதகிரி பல படங்கள் தொடர்ச்சியாகத் தோல்வியை தழுவின. இனிமேல் சினிமா வாழ்க்கை வேலைக்கு ஆகாது என்பதை விஜயகாந்த் உணர்ந்தார்.
ஒரு பக்கம் சினிமா புகழை இழந்த விஜயகாந்த், ரசிகர் மன்ற விழாக்களில் பங்கேற்கும் போது அவரைக் காண லாரிகளில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். 2003 ஜூன் மாதம் வேலூரில் நடந்த ரசிகர் மன்ற கூட்டத்திற்கு 10 ஆயிரம் பேர் திரண்டனர். அப்போது அவருக்கு வயது 51. அரசியல் வருகை பற்றி ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போது, 'எனக்கு அரசியலுக்கு வர இன்னும் வயது இருக்கிறது’ என்றார். மேலும், 'அரசியலுக்கு வரவேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் வரத் தயங்கமாட்டேன். யாருக்கும் பயப்படமாட்டேன்’ என்றார். இதைச் சொன்ன 2 வருடத்தில் கட்சியை ஆரம்பித்தார்.
2006 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக 232 தொகுதிகளில் முரசு சின்னத்தில் போட்டியிட்டது. கடையநல்லூர், திருநெல்வேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டும் மோதிரம் சின்னத்தில் களம் கண்டது. இதில் விருத்தாசலம் தொகுதியில் நின்ற விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். ஆனால், அவரது கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றனர். 2009 மக்களவைத் தேர்தலில் தனித்து களம் கண்டது தேமுதிக. ஆனால், பொது சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்தது. அதை எதிர்த்து வழக்குப் போட்டு முரசு சின்னத்தை மறுபடியும் பெற்றார்.
அடுத்து 2011இல் வந்த சட்டமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை என்றுதான் சொன்னார் விஜயகாந்த். 'கடவுளுடனும் மக்களுடனும் தான் கூட்டணி’ என்றார். இறுதியில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். ஒரு காலத்தில் ஊழல் முதல்வர் என்று ஜெயலலிதாவை வர்ணித்த விஜயகாந்த் அந்தப் பக்கம் போனதைப் பலர் விமர்சித்தனர். ஆனாலும் ஜெயலலிதாவுடனான கூட்டணியில் தாமரை இலை நீர் போல் ஒட்டாமல் இருந்தார் விஜயகாந்த். அதிமுக 41 தொகுதிகளை ஒதுக்கியது. 29 இடங்களில் வென்று, தமிழ்நாட்டில் நிரந்தர எதிர்க்கட்சி தலைவர் என வர்ணிக்கப்பட்ட கருணாநிதியை அந்தப் பதவியிலிருந்து கீழே இறக்கினார். அது மாபெரும் வெற்றியாகப் பேசப்பட்டது.
அதன்பின்னர் ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்த்திற்கும் சட்டசபையில் நடந்த மோதல் உலகம் அறிந்தது. மறைமுகமாக ஜெயலலிதா தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரை தன் பக்கம் இழுத்தார். எதிர்க்கட்சி தலைவர் என்ற பலம் விஜயகாந்த்தை விட்டுச் சென்றது. கட்சி மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. அதன்பின்னர் அவர் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமானது. அவர் உடல்நிலை பற்றி பல வதந்திகள் வந்தன. இடையே இடையே அவர் பத்திரிகையாளர்களிடம் மோதல் போக்கைக் கடைப்பிடித்தார். அது சர்ச்சையானது. மக்கள் நலக்கூட்டணி என்று 2016இல் உருவானது. பெயர் நலக்கூட்டணி என்று இருந்தாலும் அது விஜயகாந்த்துக்குப் பலன் தரவில்லை. அதன்பின்னர் அவர் மீண்டும் அரசியல் ரீதியாக எழவே இல்லை.
இப்போது அவரது இடத்தைப் பிடிக்க விஜய் முயற்சி செய்கிறார். விஜயகாந்த் 51 வயதுக்கு மேல் அரசியலுக்கு வந்தார். விஜய் 50 வயதில் அரசியலுக்கு வந்துள்ளார். இவரது வருகை தேமுதிகவைப் பாதிக்கும் என்பதுதான் பலரது கணிப்பாக உள்ளது. 20 ஆண்டுகள் தாக்குப்பிடித்த தேமுதிக சமாளித்து நிற்குமா என்பதுதான் இப்போது பலர் முன் உள்ள கேள்வி. விஜயகாந்த் வாழ்ந்த காலத்திலேயே மீண்டு எழாத தேமுதிகவை பிரேமலதா மீட்டுக் கொண்டு வந்துவிடுவார் என்பதற்கு எந்த முகாந்திரமும் இப்போது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தென்படவில்லை.












Click it and Unblock the Notifications