தமிழக மின் வாரியத்தில் ரூ.397 கோடி ஊழல் என அறப்போர் இயக்கம் வழக்கு.. ஹைகோர்ட் அதிரடி நோட்டீஸ்
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ரூ.397 கோடி ஊழல் நடந்ததாகவும், அதற்கு எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் எனவும் அறப்போர் இயக்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த விவகாரத்தில் ஒரு வாரத்தில் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாட்டில் 2021 - 2023ஆம் ஆண்டுகளுக்கு இடையில், 45 ஆயிரத்து 800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய 1,182 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்புக்கு டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்ததில், ஒப்பந்ததாரர்கள் லாபமடையச் செய்ததன் மூலம், அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு எதிராக சந்தேகம் கொள்ள ஆதாரங்கள் உள்ளதால், உயர் நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு, இந்த முறைகேடு குறித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் தனது மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டுமென என்று வேண்டுகோள் வைத்தார். இதனை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கு குறித்து பொதுத்துறை செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications