வெயிலால் வதங்கிய நெல்லைக்கு அடுத்தடுத்து நல்ல செய்தி.. இன்று 4 மாவட்டங்களில் மழை வெளுக்கப் போகுதாம்!
சென்னை: அடுத்த 3 மணிநேரத்திற்கு நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு, அதாவது பகல் 1 மணி வரை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் பருவமழையும் பொய்த்துப் போனதால் நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிற்பகலில் இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், இன்றும் நெல்லை, தூத்துக்குடி உட்பட 4 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் அம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications