5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை நீடிக்கும் நிலையில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 17 செமீ மழை பதிவாகியுள்ளது. மேல்பவானியில் 10 செமீ, நடுவட்டத்தில் 9 செமீ, கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் 7 செமீ மழையும் பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஹாரிசன் எஸ்டேட், பந்தலூர் தாலுகா அலுவலகம் பகுதியில் 6 செமீ மழை பதிவாகியுள்ளது. க்ளென்மார்கன் 4 செமீ, வால்பாறை தாலுகா அலுவலகம், மேல் கூடலூர், சின்கோனாவில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. குந்தா பாலம், தேக்கடி, பாபநாசம், பெருஞ்சாண அணை பகுதிகளில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

வானிலை மையம் அறிவிப்பு
இன்று முதல் 3 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் (மலைப்பகுதிகள்), தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் லேசான மழை
19,20ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்றைய தினம் மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடலில் பலத்த காற்று
நாளைய தினம் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications