வரும் திங்கள் முதல்! கிளாம்பாக்கம் செல்வது ரொம்ப ஈசி.. பயணிகளுக்கு நிம்மதி தந்த ரயில்வேயின் அப்டேட்
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லும் பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரை - தாம்பரம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் வரும் திங்கள் முதல் இரவு நேரங்களில் சென்னை கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் என்று ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் காரணமாக அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனை கருத்தில் கொண்டு சென்னயை அடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 88 ஏக்கர் பரப்பளவில் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பணிகள் தொடங்கப்பட்டது. அதன்பிறகு திமுக ஆட்சியில் முழு வீச்சில் பணிகள் தொடங்கியது.

கடந்த ஆண்டு இறுதியில் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். படிப்படியாக இந்த பேருந்து நிலையம் செயல்பட்டுக்கு வந்தது. இப்போது முழு அளவில் செயல்பட தொடங்கியுள்ளது. தென் தமிழகமான கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருவண்ணாமலை, செங்கோட்டை, தஞ்சை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் கிளாம்பாகக்த்தில் இருந்து இயக்கப்படுகிறது.
இந்த பேருந்து நிலையத்தின் மதிப்பு ரூ 400 கோடியாகும். பேருந்து முனையத்திற்கு பயணிகள் வந்து செல்ல வசதியாக வண்டலூரை அடுத்து புதிய ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான கட்டுமானம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கிளாம்பாக்கம் ரயில் நிலையம் தொடர்பாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா நேற்று விளக்கம் அளித்தார்.
அவர் கூறுகையில், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தைப் பொறுத்தவரை அதன் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அங்கே அடுத்த 6 மாதங்களில் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்படும்" என்றார். கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டால் பயணிகளின் சிரமம் பெருமளவில் குறையும்.
இது ஒருபக்கம் இருக்க கிளாம்பாக்கத்தில் புதியதாக திறக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்துக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரையில் இருந்து இரவு செல்லும் 5 மின்சார ரெயில்கள் திங்கள்கிழமை முதல் கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வேவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாது:-
சென்னை கடற்கரையில் இருந்து நாளை முதல் இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில் புறப்படும் தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். மறுமார்க்கமாக, இந்த ரெயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும்.
மார்ச் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.20, 8.20, 8.40, 9.00, 9.50 ஆகிய நேரங்களில் புறப்படும் தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். மறுமார்க்கமாக, இந்த ரெயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.50, 10.10, 10.35, 11.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும்" என்று கூறப்படுள்ளது.












Click it and Unblock the Notifications