50% மானியம்.. 5 ஏக்கர் நிலம் உள்ள விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. பம்ப் செட் வேணுமா? புதிய அறிவிப்பு
சென்னை: 5,000 சிறு குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்காக, தமிழக அரசு கடந்த வருடமே ரூ.7.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்த நிலையில், மான்ய விலையில் பம்ப் செட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இந்நிலையில், கரூர் மாவட்டத்திலிருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி, விவசாயிகளுக்கு பெரு மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.
விவசாயிகளின் அக்கறையும், அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பதிலும் மத்திய அரசு அளவுக்கு அதிகமான அக்கறையை செலுத்தி வருகிறது.. நம்முடைய தமிழகத்திலும், வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதுடன், ஏராளமான நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அவைகள் உடனடியாக செயல்படுத்தப்பட்டும் வருகின்றன.

அறிவிப்புகள்: குறிப்பாக, மானிய விலையில் வழங்கப்படும் பம்ப் செட்டுகள் குறித்த அறிவிப்புகள் விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. காரணம், மிகவும் குறைந்த மின்மோட்டார் பம்பு செட்டுகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் மின் நுகர்வு அதிகமாகிவிடுகிறது. இதனால், வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் நேரமும் அதிகமாகி, மின்மாற்றியும் அதிக சுமை ஏற்பட்டு சீக்கிரத்திலேயே பழுதடைந்து விடுகின்றன.
இதுபோன்ற பிரச்சனைகளை தீர்க்கவே, புதிய கிணறுகளை உருவாக்கும் விவசாயிகளுக்கும், திறன் குறைந்த பழைய மின் மோட்டார் பம்பு செட்டுகளை மாற்ற விரும்பும் சிறு, குறு விவசாயிகளுக்கும் புதியதாக மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு மானிய உதவியை தமிழக அரசு வழங்கி வருகிறது.. மின்சார பயன்பாட்டு திறனை அதிகரித்தல், குறைந்த செலவில் அதிகமான பாசன நீர் இரைத்தல் போன்றவையே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
பழைய பம்பு செட்: பாசனத்திற்கான மின்மோட்டார் பம்பு செட்டுக்கு மானியம் வழங்கும் திட்டத்தில், பழைய பம்புசெட்டை மாற்றி, புதிய மின் மோட்டார் பம்புசெட்டுகளை நிறுவிக் கொள்ளலாம். புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிணற்றுக்கு புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு இந்த திட்டத்தில் மானியம் வழங்கப்படுகின்றன. எனவே, விவசாயிகள் தங்களின் விபரங்களை தெரிவித்து, புதிய மின் மோட்டார் பம்புசெட் பெற்றுக் கொள்ளலாம்.
இதன் மொத்த தொகையில் 50% அல்லது ரூ.15,000/- இவற்றில் எது குறைவோ அந்த தொகையே பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்... 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் யாராக இருந்தாலும் இந்த திட்டத்தில் பயன் பெற முடியும்.. அதேபோல, தங்களது திறன்குறைந்த பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்ற விரும்பினாலும், மாற்றிக் கொள்ளலாம். அல்லது புதிதாக கிணறு அமைத்து, சொந்தமாக மின் இணைப்பு பெற்ற விவசாயிகளும், இந்த திட்டத்தில் பயன் பெறலாம்..
ஆவணங்கள்: இந்த திட்டத்தில் பலன்பெற வேண்டுமானால், விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை, சிறு, குறு விவசாயிக்கான சான்றிதழ், போட்டோ, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், ஆதி திராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவராயிருப்பின் சாதிச் சான்றிதழ், சிட்டா, கிணறு விபரத்துடன் கூடிய அடங்கல், மின் இணைப்பு (Service Connection) சான்றிதழ், புதிய மின்மோட்டார் வாங்குவதற்கான உத்தேச விலைப்பட்டியல்/ விலைப்புள்ளி போன்றவற்றை ஆவணங்களாக இணைக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்காக 1000 எண்கள் பம்பு செட்டுகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை உண்டு. மேலும், 50% மானியத்தில் சூப்பரான மின்சார பம்புசெட்டை விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்... அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மின் மோட்டார்களையும் தேர்வு செய்யலாம். 4 ஸ்டார் தரத்திற்கு குறையாமல் உள்ள மின்மோட்டாரையும் தேர்வு செய்யலாம்..
பாசன வசதி: இந்த திட்டத்தின் பயனை பெற வேண்டுமானால் https://mis.aed.tn.gov.in என்ற வெப்சைட்டில் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலும் பாசன வசதிக்கான உதவிகளை பெறலாம். உழவன் செயலி மூலமாகவோ, அல்லது நுண்ணீர்ப் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு (MIMIS) என்ற இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில், தானியங்கி பம்பு செட் கருவியை மானியத்தில் வாங்க கரூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.. இதுகுறித்து, கலெக்டர் தங்கவேல் வெளியிட்ட அறிக்கையில் உள்ளதாவது:
கலெக்டர் அதிரடி அறிவிப்பு: "கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு, வேளாண் பொறியியல் துறை மூலம் மொபைல் போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் கருவி மானிய விலையில் வழங்கப்படுகிறது. இந்த கருவியை பயன்படுத்தி விவசாய கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்பு செட்டுகளை வீட்டில் இருந்தபடியும், வெளியூர்களில் இருந்தபடியும் இயக்கவும், நிறுத்தவும்முடியும்.
இதற்கு மானியமாக சிறு,குறு, பெண் விவசாயிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு கருவியின் மொத்த விலையில், 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக, 7,000 ரூபாய்- வரை மானியமாக, மற்ற விவசாயிகளுக்கு மொத்த செலவில், 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக, 5,000 ரூபாய்- வரை மானியமாக வழங்கப்படும். மாவட்டத்தில் பொதுப்பிரிவுக்கு, 152ம், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் பிரிவுக்கு, 5ம் என மொத்தம், 157 பம்புசெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
போன் நம்பர்: விருப்பமுள்ள விவசாயிகள் கரூர் மற்றும் குளித்தலை வேளாண் பொறியியல்துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், கரூர் மற்றும் குளித்தலை உபகோட்டங்களுக்கு உட்பட்ட விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் 9443404531 மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்" என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடர்பான சந்தேகங்கள் இருந்தால், சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட உதவி செயற்பொறியாளர் - வேளாண்மை பொறியியல் துறை அவர்களையும் விவசாயிகள் நேரடியாகவே அணுகி விளக்கம் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications