500 டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படுகிறதா? கூடியது தமிழக அமைச்சரவை கூட்டம்.. ஸ்டாலினின் முக்கிய முடிவு?
சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூடியிருக்கிறது.. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்த அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அமைச்சர்களை மாற்றம் செய்திருந்த நிலையில், இன்றைய தினம் அமைச்சரவை கூடுவது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
நீண்ட காலத்துக்கு பிறகு, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கடந்த செப்டம்பர் 28ம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது... அதன்படி, 2 வருட காலமாகவே எதிர்பார்க்கப்பட்டு வந்த உதயநிதிக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டதுடன், அன்றைய தினம் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றிருந்தார்..

சீனியர்கள்: அதேபோல, சீனியர் அமைச்சர்களான கா.ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் ஆகியோர் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக செந்தில்பாலாஜி, நாசர், கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர்.
அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.. காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெறுகிறது.. எதற்காக இந்த கூட்டம் நடக்கிறது என்பது குறித்து பல்வேறு யூகங்களும், கணிப்புகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
திருமாவளவன்: அந்தவகையில், மதுவிலக்கு விவகாரம் குறித்து இன்று விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.. விசிக தலைவர் திருமாவளவன், மதுஒழிப்பு மாநாட்டை நடத்தி முடித்துள்ள நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் விசிக மாநாட்டுக்கு ஆதரவை தந்திருந்தன.. திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும், இணக்கமான போக்கு இரு தரப்பில் இருந்தாலும்கூட, திருமா நடத்திய மாநாடு திமுகவை கவனிக்கவே செய்தது.
எனவே, முற்றிலுமாக மதுவிலக்கை அமல்படுத்த முடியாவிட்டாலும், தற்போது செயல்பட்டு வரும் 4,829 டாஸ்மாக் கடைகளில் இருந்து 500 கடைகளை குறைக்க தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து இன்றைய தினம் முடிவெடுக்க வாய்ப்புள்ளதாம்.
தொழில் முதலீடுகள்: அந்தவகையில், அரசின் திட்டங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாகவும், தொழில் முதலீடுகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் அனுமதிகள் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்கிறார்கள்.
முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தின்போது, ரூ.7,618 கோடி முதலீட்டில், 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 19 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முதலீடுகள், புதிய நிறுவனங்களின் முதலீடுகள் குறித்து அமைச்சரவையில் விவாதித்து, ஒப்புதல் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
மின் உற்பத்தி: ஏற்கனவே நடந்த அமைச்சரவை கூட்டத்தில், சிறுபுனல் மின் உற்பத்தி உள்ளிட்ட சில கொள்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், இன்றைய கூட்டத்திலும் தொழில் கொள்கைகள் குறித்து ஆலோசித்து ஒப்புதல் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக அரசு துறை வட்டாரங்கள் கூறுகின்றன..
அதுமட்டுமல்ல, புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் கோவி.செழியன், ராஜேந்திரன் போன்றோருகு அறிவுரைகள் வழங்கப்படலாம்.. உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதால், அதற்கான அதிகாரங்கள் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்றும் கூறுகிறார்கள். இதைத்தவிர பல்வேறு நிதிசார்ந்த திட்டங்கள், அதற்கான நிதி ஆதாரம் குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சட்டப்பேரவை: மேலும், நவம்பர் மாதத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டமும் நடைபெறும் என்பதால் அதுகுறித்தும் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில், அமைச்சரவையில் லேசான மாற்றம் ஏற்பட்டு, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நடக்கும் முதல் அமைச்சரவைக் கூட்டம் என்பதால் இன்றைய தினம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications