6157 வீடுகள் சென்னையில்.. ரூ.1401 கோடியில் விஜய் அரசு மெகா திட்டம்.. எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் சென்னையில் ரூ.1,401.75 கோடி மதிப்பீட்டில் 6,157 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளதாக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். பெருநகரமான சென்னையில் சொந்த வீடு இல்லாமல் தவிக்கும் ஏழை மற்றும் எளிய மக்களின் வாழ்நாள் கனவை நனவாக்கும் வகையில் இந்த மெகா வீட்டு வசதித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் ஏற்கனவே கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் பழுதடைந்துள்ள குடிநீர்க் குழாய்கள், கழிவுநீர் அகற்றும் கட்டமைப்புகள் மற்றும் மின்சார வசதிகளை சீரமைக்க தமிழக அரசு ரூ.261.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த நவம்பர் 6-ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது.

செம்மஞ்சேரி குடியிருப்பு
அரசு வெளியிட்ட இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, செம்மஞ்சேரி குடியிருப்பு பகுதிக்கு மட்டும் ரூ.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 870 கட்டிடத் தொகுதிகளில் வசிக்கும் 6,764 குடும்பங்களுக்கு இனி பொதுக்குழாய் முறை மாற்றப்பட்டு, புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், 35 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை மற்றும் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் அமைக்கப்பட உள்ளன.
அதுமட்டுமின்றி, ஒவ்வொரு கட்டிடத்தின் மொட்டை மாடியிலும் 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டிகள் நிறுவப்படவுள்ளன.
இதனை தவிர, சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள 98 குடியிருப்பு திட்டங்களில் உள்ள 74,306 வீடுகளின் பயன்பாட்டுக்காக ஆழ்துளை கிணறுகள், தண்ணீர் சேமிக்கும் தொட்டிகள் மற்றும் தண்ணீரை மேலே ஏற்றும் அறைகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், செப்டிக் டேங்குகள், உறிஞ்சு குழிகள் அமைப்பதுடன், மின்சார பலகைகள் மற்றும் ஜெனரேட்டர்களை சீரமைக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய குடியிருப்புகள்
பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினரின் (EWS) வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் (TNUHDB) பழுதடைந்த குடியிருப்புகளை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டவும், ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய வீட்டுவசதித் திட்டத்திற்கும் முதல்வர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளார். தேவையான அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன வீடுகள் இதன் மூலம் கட்டப்பட உள்ளன.
பழைய குடியிருப்புகளை சீரமைக்கும் பணிகள் ஒருபுறம் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிதாக வீடு தேவைப்படுவோருக்காக சென்னையின் 9 முக்கிய திட்டப் பகுதிகளில் 6,157 அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்ட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு அறிவிப்பு
இதற்காக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அனாதைக்குப்பம் திட்டப்பகுதியில் 64 குடியிருப்புகள், பழைய பிளாக் வியாசர்பாடி பகுதியில் 1,158 குடியிருப்புகள், ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் 1,484 குடியிருப்புகள், ருக்மணி நகரில் 111 குடியிருப்புகள், முல்லை நகரில் 462 குடியிருப்புகள், உதயசூரியன் நகரில் 850 குடியிருப்புகள், பச்சைக்கல் வீராசாமி தெருவில் 912 குடியிருப்புகள், மேற்குக் கல்லறை சாலையில் 792 குடியிருப்புகள் மற்றும் கக்கன் காலனி பகுதியில் 324 குடியிருப்புகள் என மொத்தம் 6,157 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் ரூ.1,401.75 கோடி செலவில் கட்டப்படவுள்ளன. குடிசைப் பகுதிகளிலும், தாழ்வான இடங்களிலும் போதிய வசதியின்றி அவதிப்பட்டு வரும் எளிய மக்களுக்கு இந்தத் திட்டங்கள் மூலம் பாதுகாப்பான கான்கிரீட் வீடுகள் கிடைக்கவுள்ளன.
மக்கள் நலம்
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வாடகை வீடுகளிலும், அடிப்படை வசதிகள் அற்ற குடியிருப்புகளிலும் சிரமப்பட்டு வந்த சாமானிய மக்களுக்கு அரசின் இந்த அடுத்தடுத்த அறிவிப்புகள் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையவுள்ளன.
தடையற்ற குடிநீர் விநியோகம், முறையான கழிவுநீர் வடிகால் அமைப்பு, சீரான மின்சார வசதிகள் மற்றும் சுகாதாரமான சுற்றுப்புறச் சூழலுடன் இந்தப் புதிய மற்றும் சீரமைக்கப்பட்ட குடியிருப்புகள் உருவாக்கப்பட உள்ளதால், நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களின் பல வருட சொந்த வீடு கனவு நனவாகி வருகிறது. தமிழக அரசின் இந்தத் துரிதமான நடவடிக்கைகளால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.




Click it and Unblock the Notifications
