செங்கப்பட்டு சாலை விபத்தில் 6 பேர் பலி..தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின்
செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டு: சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த தொழுப்பேடு அருகே நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 50 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்னையிலிருந்து - சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாள் இரும்பு கம்பி ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல அரசு பேருந்து முயன்றதாக தெரிகிறது.

இதில் லாரியின் இடது பக்கமாக பேருந்து அதிபயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 10 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடியும் , தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் ஆறுதல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "செங்கல்பட்டு அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை அறிந்து வருந்துகிறேன். உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்கத்தில் , "செங்கல்பட்டு மாவட்டம் தொழுபேடு கிராமம் அருகே நடந்த சாலை விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி தெரிவித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் தலா 5 லட்ச ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவியாக அளிக்கப்படும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications